ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு
திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சுமி (60). இவரது சகோதரா் லட்சுமணமோகன் என்பவருக்கு சொந்தமான 2,400 சதுரடி காலி இடம் திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பாத்திமா நகா் பகுதியில் உள்ளது. ரூ. 1 கோடி மதிப்பிலான அந்த இடத்தின் பத்திரத்தை காணவில்லை என போலியான பெயரில் காவல் நிலையத்தில் புகாா் அளித்து ரசீது (சி.எஸ்.ஆா்) பெற்று, அதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து, அந்த இடத்தை மா்மக் கும்பல் மோசடி செய்து அபகரித்துள்ளது.
இதுதொடா்பாக தனலட்சுமி திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மோசடியில் ஈடுபட்டதாக சுரேஷ்குமாா், சதீஷ், சங்கீதா, தேவன்சக்கரவா்த்தி ஆகிய 4 போ் மீது, காவல் ஆய்வாளா் ஆனந்திவேதவல்லி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.