சோனியா புத்தக விழா: 'காங்கிரஸ் அழைப்பை ஸ்டாலின் நிராகரித்தாரா?' - ஆர்.எஸ்.பாரதி ...
`ரூ.15 கோடி தொழில் வேண்டாம்' - மனைவி, மகள்களுடன் ஜெயின் மத துறவியாகும் சூரத் தொழிலதிபர்
ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் திடீரென ஜெயின் மத சன்னியாசிகளாக மாறிவிடுவதுண்டு. சில நேரங்களில் சிறுமிகள் கூட ஜெயின் மத துறவியாகிவிடுவதுண்டு. புதிதாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தனது குடும்பத்தோடு ஜெயின் மத துறவியாக மாற முடிவு செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அத்தொழிலதிபர் பல ஆண்டுகளுக்கு முன்பு சூரத் வந்து தொழில் செய்து வருகிறார். திலிப் பாய் போகர் என்ற அந்த தொழிலதிபர் தனது குடும்பத்தோடு ஜெயின் துறவற வாழ்க்கையைத் தழுவ உள்ளார். சூரத்தில் அவர் ஆண்டுக்கு ரூ.15 கோடி டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார்.
அவர் தனது மனைவி ஜோதி பென்(45), மற்றும் அவர்களது மகள்கள் சாவி, மற்றும் சார்வி ஆகியோருடன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி சூரத்தில், ஜெயின் துறவற வாழ்வில் தீட்சை எடுக்கவுள்ளார். ஏற்கனவே அவர்களின் மற்றொரு மகளான ஷைலி, 2023ம் ஆண்டு தீட்சை எடுத்து, இப்போது சாத்வி தர்ஷிதா என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார். திலீப் பாய் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்கர் கிராமத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு சூரத்திற்கு குடியேறினார்.

அங்கு அவர் ஒரு சிறிய கடையில் துணி விற்கத் தொடங்கினார். வியாபாரம் பெருகவே மேலும் இரண்டு கடைகளைத் திறந்து பல இயந்திரங்களை நிறுவினார். அவர் தனது தொழிலை விரிவுபடுத்த நினைத்திருந்த நேரத்தில் ஜெயின் மத ஆச்சார்யா ஒருவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு ஜெயின் மதத்தின் மீதான அவரது ஆர்வத்தை அதிகரித்தது. அதோடு அவரை துறவற வாழ்க்கைக்கு இழுத்தது.
அவரது மகள் ஷைலி கடந்த 2023ம் ஆண்டு திக்ஷா எடுத்த பிறகு, அவர் தனது தொழிலை குறைத்துக்கொள்ள தொடங்கினார்.
ஆனால் இப்போது அவர் தானே ஜெயின் மத துறவியாக முடிவு செய்து இருக்கிறார். அவரை தொடர்ந்து மனைவி ஜோதி பென் மற்றும் அவர்களது இரண்டு மகள்களான சாவி மற்றும் சார்வி ஆகியோர் அவருடன் சேர்ந்து ஜெயின் துறவிகளாக மாற முடிவு செய்துள்ளனர். மகள் சாவி கிராஃபிக் டிசைனில் பி.பி.ஏ படித்துள்ளார், மேலும் அவர் வடிவமைத்த அலங்கார பொருட்களை விற்கத் தொடங்கினார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவளது தந்தை துறவு வாழ்க்கைக்கு மாற தொழிலைக் கைவிட்டார்.
மற்றொரு மகளான சார்வி 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சூரத்தில் மாவட்ட அளவில் கால்பந்து விளையாடியுள்ளார். இப்போது அவர்கள் தங்கள் துறவற வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னதாக, நான்கு பேரும் ஜெயின் சந்நியாசிகளுடன் சேர்ந்து பயணம் செய்வது, உணவு மற்றும் அன்றாட நடத்தை பற்றிய விதிகளைப் பின்பற்றுவது மற்றும் துறவற வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.



















