`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன...
விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.
காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " எங்கள் கட்சிச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான த. இராமச்சந்திரன் ஆகிய நான், எங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றி கழகத்திற்கும், அதன் தலைவரும் சட்டமன்ற கட்சித் தலைவருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எங்களது நிபந்தனையற்ற ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக மக்களுக்கு ஒரு நிலையான, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை வழங்கும் நோக்கில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
எனது இந்த நிபந்தனையற்ற ஆதரவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கோப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.














