Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?
சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில் காரில் சத்தியராஜ் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்கள், `குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை, ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் இந்தச் செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள்' என சத்தியராஜிடம் கண்ணீர் மல்க கேட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன் என்றதும் அதை வாங்க சத்தியராஜ் ஆசைப்பட்டிருக்கிறார். பின்னர், செல்போனை எவ்வளவு ரூபாய்க்குத் தருவீர்கள் என விலை பேசியிருக்கிறார்.

அதற்கு அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், 20,000 ரூபாய்க்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் வாங்கினோம். சென்னைக்கு வந்த இடத்தில் அவசரமாக பணம் தேவை ஏற்பட்டு விட்டது. அதனால், 15000 ரூபாய்க்கு விற்கிறோம் எனக் கூறியுள்ளனர். உடனே சத்தியராஜ், 15000 ரூபாய்க்கு வாங்க முடியாது. 12,000 ரூபாய்க்குக் கொடுங்கள் எனப் பேரம் பேசி அந்தச் செல்போனை வாங்கியிருக்கிறார்.
குறைந்த விலைக்குப் புதிய செல்போன் கிடைத்த மகிழ்ச்சியிலிருந்த சத்தியராஜ், அந்தச் செல்போன் குறித்து செல்போன் கடை ஒன்றில் கொடுத்து விசாரித்திருக்கிறார். அப்போது செல்போனைச் சோதனை செய்த கடைக்காரர், இந்தச் செல்போனில் போலியாகப் பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரை அச்சிட்டிருக்கிறார்கள் என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகே சத்தியராஜ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அண்ணாநகர் பகுதிக்குச் சென்று அந்த வடமாநில கும்பலைத் தேடியிருக்கிறார். ஆனால் அவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
இதையடுத்து, அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சத்தியராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். மேலும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கொண்டு வடமாநில கும்பலைத் தேடினர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் வடமாநில கும்பல் சிக்கியது.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலம், ஜாலிகன் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு (49), அவரின் .பிரமிளாபாய்(42), இவர்களின் மகன் பிரவின், (18), உறவினர் தன்ராஜ் (27) ஆகியோர் எனத் தெரியவந்தது.
இவர்கள், சென்னையில் பிரபலமான செல்போன் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி நூதன முறையில் லோக்கல் தயாரிப்பு மாடல் செல்போன்களை விற்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், 26 போலி செல்போன்கள், 27 சார்ஜர்கள், 9,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்தக் கும்பலிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மும்பையிலிருந்து டூப்ளிக்கேட் செல்போன்களை மொத்தமாக வாங்கி சென்னைக்கு வந்து அவசரத் தேவை எனக் கூறி நூதன முறையில் விற்று ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இவர்கள் விற்ற செல்போன்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடையாது.
மாறாக அந்த நிறுவனத்தின் பெயரை விலை குறைந்த செல்போன்களில் அச்சிட்டு விற்றிருக்கிறார்கள். முன்பெல்லாம் குறைந்த விலைக்கு ஐ போன் என்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஸ்டைலில்தான் இந்தக் குடும்பமும் செல்போனை விற்றியிருக்கிறது.
கைதான இவர்களைப் போல சென்னைக்கு இன்னும் சிலர் கும்பல், கும்பலாக வந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்தக் கும்பலிடம் செல்போன்களை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம்'' என்றனர்.



















