TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியான அ.ம.மு.க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது, கோவில்பட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்துவந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில், இதுவரை நடந்த 16 தேர்தல்களில் தி.மு.க ஒருமுறைகூட வென்றது இல்லை; இனி வெல்லப்போவதும் இல்லை. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க-தான் வெற்றி பெறும்” என தனது பிரசார மேடைதோறும் முழங்கி வந்தார்.

அவரது முழக்கத்தை முறியடிக்கும் வகையில், கோவில்பட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது தி.மு.க. கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கருணாநிதி 61,643 வாக்குகளும், த.வெ.க வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 60,800 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் கடம்பூர் ராஜூ 53,014 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் பாண்டி 11,919 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது, “ ‘இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழிக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருந்தார். தொகுதி பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் கீதாஜீவனும் வெற்றிக்கான வியூகங்களை வகுத்தார். அனைத்து சமூக சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். முந்தைய தேர்தல்களில் தி.மு.க-விற்கு எங்கெல்லாம் வாக்கு வங்கி சரிவு ஏற்பட்டதோ, அங்கெல்லாம் வாக்குகளை அதிகப்படுத்த நிர்வாகிகளும் களப்பணி ஆற்றினர். வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தேவர், நாயக்கர், நாடார் சமூக மக்கள் உள்ளனர். தி.மு.க வேட்பாளர் கருணாநிதி, தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், அவர் சார்ந்த சமூக வாக்குகளும் அவருக்கு பெருமளவில் கைகொடுத்துள்ளன” என்கின்றனர்.

அதேசமயம், “தேர்தலின்போது ‘வழக்கம்போல் தி.மு.க-விற்கும் அ.தி.மு.க-விற்கும் இடையேதான் கடும் போட்டி நிலவும்’ என எதிர்பார்த்திருந்தார் சிட்டிங் எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ. அதனால், முந்தைய தேர்தலில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனையே 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டோம். எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று பிரசாரத்தில் ரொம்பவும் அலட்சியம் காட்டிவந்தார் கடம்பூர் ராஜூ. இதுவும் அவரது தோல்விக்கு ஒரு காரணம்” என்கின்றனர் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள். த.வெ.க வேட்பாளரை வெறும் 593 வாக்குகள் வித்தியாசத்தில், தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும்கூட இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது!














