TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
'ஆதரவு கோர விரும்பும் அரசியல் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?'- சிந்தனை செல்வன்
விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க விசிகவிடம் ஆதரவு கோரியிருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? என்று விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், " தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் தவெக விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா? அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா? என கேள்வி எழுகிறது.
ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ?
இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?
வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை விஜய் கையாண்டிருக்க வேண்டும்.
ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா?
மோதிலால் நேரு , ஜவகர்லால் நேரு, இந்தி ராகாந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என அய்ந்தாவது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்கமுடியுமா ?

திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.?
விஜய் அவர்கட்குள்ள கரிஷ்மா அடையாளத்தை , நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள விஜய்யை பயன்படுத்துகிறார்கள்.
ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா ? விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான்.
சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறாரகள் என பேசுவது என்னவகை அரசியல் அறம்?அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல.

விஜய் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணர வேண்டும். சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால்" என்று தெரிவித்திருக்கிறார்.














