``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.
எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார்.
செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். இப்போது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டபடி விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன்.

செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் செங்கோட்டையன், "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். 1972-ல் இந்த அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆர் பின்னால் அணி வகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன்.
1975-ல் கோவையில் அதிமுக பொதுக்குழுவின் முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தியதை கண்டு சத்யா ஸ்டியோவில் என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர் அவர்கள். அன்று இருந்த எதிர்க்கட்சிகள் அதிமுகவைப் பார்த்து 'இந்தக் கட்சி ஒரு சினிமா படம் போல, 100 நாள்கூட தாண்டாது' என்று விமர்சித்தார்கள்.
ஆனால், அன்றே அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருந்துகொண்டே வெற்றி பெற்று அன்று தமிழ்நாட்டிற்குத் திரும்பும்போது முதல்வராக காலடி எடுத்து வைத்தவர் எம்.ஜி.ஆர். அவருடன் உண்மையாக உடன் நின்றவன் நான்.
அதன்பிற்கு புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா தலைமையில் கட்சியில் உண்மையாக உழைத்து பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். அவரது மறைவிற்குப் பிறகும் கட்சியைக் காப்பாற்ற உறுதுணையாக இருந்தேன். ஆனால் இப்போது அதிமுகவின் நிலை எல்லாம் மாறிவிட்டது.
அதிமுக மூன்றாக உடைந்துவிட்டது. அதை ஒன்றிணைக்க பாடுபட்டேன். அதை செயல்படுத்த முடியவில்லை. எல்லோரையும் ஒன்றிணைக்கலாம் என்றுதான் தேவர் ஜெயந்தியின்போது பிரிந்தவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அதற்காக என்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துகூட நீக்கிவிட்டார்கள். இத்தனை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த எனக்குக் கிடைத்தப் பரிசு இதுதான்.

அதன்பிறகு இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான் நேற்று (நவ.26) சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன்.
ஏன் இங்கு இணைந்தேன் என்று கேள்வி எழும்.
இன்று திமுக - அதிமுக இரண்டும் வேறல்ல என்றாகிவிட்டது. இரண்டும் ஒன்றாக பயணித்து நாட்டில் நாடகம் நடத்தி வருகிறார்கள்.
தவெக விஜய் அவர்கள் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார். 'ஒரு புதிய மாற்றம் வேண்டும். இரு கட்சிகள் மட்டும்தான் ஆளவேண்டுமா?' என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தூய்மையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் தவெக கட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். தூய்மையான அரசியல், நல்ல மாற்றம் வேண்டும் என தவெக கட்சியில் இணைந்திருக்கிறேன்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைப்பார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
















