செய்திகள் :

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

post image

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத்திருக்கோயில்.

வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்த மகாலட்சுமித் தாயார் பூவுலகில் பல புண்ணியத் தலங்களில் தங்கித் தவம் செய்தார். அவ்வாறு தாயார் தவம் செய்த தலங்களில் ஒன்றுதான் ஆட்சிப்பாக்கம்.

இத்தலத்துக்கு அட்சயபுரி என்ற பெயரும் உண்டு. நெடுங்காலம் தவம் புரிந்த திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஶ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்து விட்டார் என்ற தகவலை அறிந்தாளாம். விரைவில் திருமாலை அடையப்போகிறோம் என்று எண்ணி மகிழந்தாளாம்.

அப்போது தன்னைச் சேவிக்க வந்த தேவர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கினாளாம். அதனால், 'அட்சயபுரி' என்றும் அழைக்கப்ட்டதாம் இந்தத்தலம்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில்

குபேரனுக்குத் தாயார் அருள் செய்த தலம் இது. எனவே அளகாபுரி என்றும் திருமகள் விஜயம் செய்ததால் விஜயபட்டினம் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு.

அவ்வண்ணம் ஆட்சிபாக்கத்திலும் தேவியர் சமேதராக அருள்மிகு அட்சயவரதர் வேண்டும் பக்தர்களும் வேண்டும் வரம் தரும் கருணைக்கடலாகத் திகழ்கிறார்.

இங்கே தாயார் பெருந்தேவித்தாயாராக அருள்பாலிக்கிறார். ஆதியில் தேவர்கள் இங்கே பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆலயம் எழுப்பி பிரம்மோற்சவம் கொண்டாடியதாகச் சொல்கிறது புராணம்.

முன்னொருகாலத்தில் வடக்கில் வாழ்ந்த ப்ருவரன் என்கிற மன்னனை அவன் உறவுக்காரர்களே சதி செய்து நாட்டை விட்டுத் துரத்தினார்கள். அவனும் செய்வதறியாது தெற்கு நோக்கி வந்தான்.

நாட்டை இழந்த ப்ருவரன் வெகுதூரம் பயணித்து இந்த அட்சய புரியை (ஆட்சிப்பாக்கம்) வந்தடைந்தான். சிதைந்துகிடந்த பெருமாளின் ஆலயத்திலேயே தங்கி வழிபாடு செய்துவந்தான்.

இந்த நிலையில் அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்பதை உணர்ந்த ப்ருவரன் அவரிடம் தன் நிலையை விளக்கி நல்லாட்சி புரிந்த தனக்கு ஏன் இப்படியான நிலை என்று கேட்டான். அவர் அவனுடைய முன்வினையை எடுத்துச் சொன்னார்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் பெருந்தேவி தாயார்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் பெருந்தேவி தாயார்

முற்பிறவியில் திருடனாக இருந்த ப்ருவரன் பெரும் பாவங்களைச் செய்தான். ஆனால், அட்சய திருதியை நாளில் தன்னை நாடிவந்து உணவு கேட்ட ஒருவருக்குத் தன்னிடம் இருந்த உணவைத் தந்தான். அந்தப் பலனே அவனை மறுபிறவியில் மன்னன் ஆக்கியது.

அந்தப் புண்ணியபலன் தீர்ந்ததும் திருடனாக இருந்து செய்த பாவங்களின் வினை பழிவாங்கத்தொடங்கிவிட்டது. ஆட்சி பறிபோக பிச்சைக்காரன் போல் ஆனான் என்கிற ரகசியத்தை அவனுக்கு உரைத்தார்.

மேலும் , "பசிகொண்ட ஒருவருக்கு நீ அன்று நீரும் சோறும் கொடுத்து, முற்பிறவியில் நீ யோகியைக் காப்பாற்றிய இடம் இந்த அட்சயபுரிதான். இங்கு வைத்து உனக்கு அருள்பாலிக்கவே பெருமாள் உன்னை இங்கு வரச் செய்திருக்கிறார். கேட்டதைக் கேட்டபடி அருளும் இந்த அட்சய வரதரை விடாமல் பிடித்துக்கொள். நீ இழந்தவற்றை மட்டுமல்ல அந்த இந்திரலோகத்தையே அவரிடம் வரமாகப் பெற்று மகிழலாம்’’ என்று கூறிய முனிவர் அவனிடம் விடைபெற்றார்.

மன்னன் முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். இனி தனக்கு சகலமும் அட்சயவரதரே என்று முடிவு செய்தான். அவரை நாள்தோறும் வழிபட்டு மகிழ்ந்தான்.

வரதரின் அருளால், இழந்த நாட்டையும் செல்வத்தையும் விரைவில் பெற்றான். இந்தத் தலத்தில் அட்சய வரதருக்குச் சிறப்பாகக் கோயில் எழுப்பி, நிவந்தங்களும் எழுதிவைத்தான். ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்தான் என்கிறது தலபுராணம்.

இத்தகைய பெருமைகள் கொண்ட திருத்தலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒற்றைப் பிராகாரம் கொண்டதாக அமைந்திருக்கிறது.

நின்ற திருக்கோலத்தில் அருளும் அட்சயவரதர் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலக் கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடக் கரத்தை இடுப்பில் தாங்கியபடி, தேவியருடன் காட்சி தருகிறார்.

தனிச் சந்நிதியில், அழகிய பெருந்தேவி தாயார் புன்னகை ததும்பும் எழில் வடிவில் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார், அனுமன் ஆகியோரையும் கோயிலில் தரிசிக்கலாம்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் அனுமன்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் அனுமன்

பொங்கல் பாரி வேட்டை, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மனால் கொண்டாடப் பட்ட வைகாசி பிரமோற்சவ விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், நாயக்க மன்னர்களும் திருப்பணிகள் செய்து கொண்டாடிய ஆலயம் இது என்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உண்டு. ஆனாலும் அவை காலப்போக்கில் சிதைந்து, இப்போது தெளிவில்லாமல் காணக்கிடைக்கின்றன.

வாய்ப்பிருப்பவர்கள் ஆட்சிப்பாக்கத்துக்கு ஒருமுறையேனும் சென்று அட்சய வரதராஜரை தரிசித்து வாருங்கள். வாழ்வில் இழந்த பதவி, தொலைத்த செல்வம் என எதுவானாலும் அவை அனைத்தும் நம்மைத் தேடிவரும்.

கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்: அவப்பெயர் நீங்கும்... பிள்ளைகளின் கல்வி சிறக்கும்!

கல்வியே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மாபெரும் செல்வம். அந்தச் செல்வத்தைக் குறைவின்றிப் பெற்றிட இறையருள் நமக்குத் தேவை. அப்படிப்பட்ட அருளை அள்ளி அள்ளித் தரும் தலம்தான் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயி... மேலும் பார்க்க

திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!

இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!

வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழி... மேலும் பார்க்க

தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album

பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவி... மேலும் பார்க்க

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்!

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்.! மேலும் பார்க்க