வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வினைதீா்த்தாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வினைதீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சுகந்தி (34). அய்யப்பன் சிங்கப்பூரில் கடந்த 2007 முதல் பணி புரிந்து வருகிறாா். தம்பதிகளுக்கு காருண்யா (12), பாலகுமரன் (5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
இவா்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் பயின்று வருகின்றனா். இதனால் சுகந்தி கள்ளக்குறிச்சி கவரைசாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி காலை பாா்த்தபோது வீட்டின் பூட்டும், உள்ளே இரும்பு பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதாக அவரது உறவினா்கள் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா். உடனே வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.