`மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்' - பாஜக ஆளும் அஸ்ஸாம் மாணவர் போராட்டத்தில் அம...
"வெற்றிமாறன் சாரும் ஜோக்கரா?" - பாலன் இல்லத்தில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றம்! பேசியது என்ன?
நேற்று சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
அங்கே அவர், "இது மாணவர்களுக்கான போராட்டம்.
இந்த மேடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் கோமாளிகள், நாங்கள் அல்ல.
நான் தளபதியின் தீவிரமான ரசிகை, நேற்றுதான் அவரது படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்..." என்று பேசி கொண்டிருக்கும் போதே, அவருக்கு எதிராக குரல்கள் எழுந்தன. அவரிடமிருந்து மைக்கும் பிடுங்கப்பட்டது.

வெற்றிமாறன் சாரும் ஜோக்கரா?
இதனால், பாலன் இல்லத்தில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, "மாணவர்கள் சார்ந்த போராட்டம் என்றும், அவர்களுக்காகப் குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அதைத்தானே நானும் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், அழைத்துப் பேச வைத்துவிட்டு, நான் ஒரு திரைப்படம் பார்த்ததற்காக என்னை 'ஜோக்கர்' என்று விமர்சிக்கிறார்கள். ஒரு திரைப்படம் பார்த்த காரணத்திற்காகவே நான் ஜோக்கர் ஆகிவிடுவேனா?
இங்கே மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் அமர்ந்திருக்கிறாரே, அவர் எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்; அப்படியென்றால் அவரையும் சேர்த்துத்தான் ஜோக்கர் என்று சொல்கிறீர்களா?
போலிப் போராட்டம்
இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், நான் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதைப் பிடுங்குகிறார்கள். இதுதான் இவர்கள் பின்பற்றும் ஜனநாயகத்தின் லட்சணமா?
நான் சாதாரணப் பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கவே இங்கு வந்தேன். ஆனால், இந்த மேடையைத் தங்களுடைய சொந்த அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்த நினைக்கும் எவரையும் நான் ஆதரிக்க மாட்டேன்.
உண்மையில் இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை வைத்துக்கொண்டுதான் போராடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு போலிப் போராட்டம்.

சோனம் வாங்சுக், மகாத்மா காந்தி...
மாணவர்களுக்கு என்னுடைய 100 சதவீத ஆதரவு எப்போதுமே உண்டு. சோனம் வாங்சுக் அவர்களுக்குப் பெரிய சல்யூட்.
அவர் மகாத்மா காந்தி அளவிற்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறார். மாணவர்களின் காலில் விழுந்து கூட நான் ஆதரவு தருவேன். ஆனால், இங்கு நடப்பது போலிப் போராட்டம். நீங்கள் உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால், மற்றவர்களையும் சுதந்திரமாகப் பேச அனுமதிக்க வேண்டும்.
எந்தவொரு குடிமகனுக்கும் முறைப்படி அனுமதி பெற்று அமைதியான முறையில் போராட முழு உரிமை உண்டு. ஆனால், வெறும் விளம்பரத்திற்காக அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டால், காவல்துறையினர் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்" என்று செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தார்.













