2 வார `டிஜிட்டல்' கைது: போலீஸார் உஷார் செய்த பிறகே ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந...
பங்குச் சந்தை முதலீட்டை நம் மக்கள் தவிர்க்கக் காரணம், பயமா... சரியாகப் புரிந்து கொள்ளாததா?
நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். ''பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்'' என்று சொல்லி, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சில பங்குகள் அடைந்த பிசினஸ் வளர்ச்சியை எடுத்துக்காட்டி, அதனால் அந்தப் பங்குகள் விலை உயர்ந்ததை சதவிகிதக் கணக்கில் எடுத்துச் சொல்லி இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், 'அடடா, எவ்வளவு பெரிய லாபத்தைப் பெறத் தவறவிட்டுவிட்டோமே' என்று நினைத்து, வருந்தி இருப்பார்கள்.
ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த முதலீட்டாளர்கள் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? பங்குச் சந்தை முதலீடு பற்றிய தங்கள் நம்பிக்கையையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? அப்படி மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை எனில், இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தபிறகும், வருந்திக்கொண்டேதானே இருப்பார்கள் இல்லையா?
இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு என்பது கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கி வேகமாக முன்னேற்றம் காணத் தொடங்கியது. 1990-களின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் பங்குச் சந்தையில் பல தில்லுமுல்லுகள் நடந்தது உண்மைதான். ஆனால், அப்படித் தில்லுமுல்லுகள் எப்போதெல்லாம் நடக்கிறதோ, அதன்பிறகு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலையிட்டு, அந்தத் தில்லுமுல்லுகள் மீண்டும் நடக்காதபடிக்கு விதிமுறைகளை மாற்றி வருகிறது.
ஆனால், பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளை செபி அமைப்பு என்னதான் மாற்றினாலும், 'பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு சூதாட்டம். அதில் பணத்தைப் போட்டால் முழுப் பணம் காணாமல் போய்விடும்' என்று மக்களிடம் உருவான எண்ணம் மாறவே இல்லை. இன்று வரை பங்குச் சந்தை முதலீட்டை சூதாட்டம் என்றும், அது பாதுகாப்பு இல்லாதது; ரிஸ்க்கானது என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் முடிந்த அளவு பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் மறைமுகமாக முதலீடு செய்வதோ வேண்டவே வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால், ரியல் எஸ்டேட்டிலும், தங்கம் வாங்குவதிலும் பல விதமான ரிஸ்க்குகள் இருந்தாலும் இவற்றில் முதலீடு செய்யும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்து, 10, 20 லட்சம் ரூபாய் கிடைத்தால், நிலம் அல்லது தங்கம் வாங்கி வைப்பதுதான் மிகச் சிறந்த முதலீடு என்று நினைக்கிறார்கள். 90% பேர் அப்படித்தான் செய்தும் வருகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் இந்த முறையில் சிந்தித்து செயல்பட்டு வரும்போது, அவர்கள் பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்திருப்பார்கள்?

கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் பல துறை சார்ந்த பங்குகள் தந்த லாபம் மிக மிக அதிகம். அவற்றில் சில பங்குகள் தந்த லாபத்தை மட்டும் உதாரணங்களாகப் பார்ப்போம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி என்பது தமிழ்நாட்டில் பலருக்கும் தெரிந்த நிறுவனம். இந்த நிறுவனப் பங்கு கடந்த 20 ஆண்டுகளில் 3000% லாபம் தந்திருக்கிறது. இது சி.ஏ.ஜி.ஆர் கணக்குப்படி, ஆண்டுதோறும் 18.73%. அதே நிறுவனப் பங்கு கடந்த 10 ஆண்டுகளில் தந்த லாபம் 600%. சி.ஏ.ஜி.ஆர் கணக்குப்படி, 21.48%. அதாவது, வங்கி எப்.டி.யைப் போல மூன்று மடங்குக்கு மேல் லாபம் தந்திருக்கிறது. ஆனால், கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்கை வாங்கக் கூடாது என்று யாராவது சொன்னார்களா? யாரும் சொல்லவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்கைவிட மக்கள் நிலத்தையும் தங்கத்தையும்தான் நம்பினார்களே தவிர, அதை நம்பவில்லை.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்கு நன்கு தெரிந்த நிறுவனம் ரிலையன்ஸ். கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிறுவனப் பங்கு தந்த லாபம் சுமார் 1200%. இது சி.ஏ.ஜி.ஆர் கணக்குப்படி பார்த்தால், ஆண்டுதோறும் 15 சதவிகிதத்துக்குமேல் லாபம். இதே நிறுவனப் பங்கு கடந்த 10 ஆண்டுகளில் தந்த லாபம் சுமார் 450%. சி.ஏ.ஜி.ஆர் கணக்குப்படி, 14 சதவிகிதத்துக்கும் மேல். ரிலையன்ஸ் பங்கை வாங்கக்கூடாது யாராவது சொன்னார்களா? யாரும் சொல்லவில்லை. காரணம், இந்த நிறுவனப் பங்கை வாங்கினால் இந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று மக்கள் நம்பவில்லை!

இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நன்கு தெரிந்த நிறுவனம்; அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை நாம் அடிக்கடி பயன்படுத்திக்கொண்டே இருப்போம்; அந்த நிறுவனம் தரும் சேவை அன்றாடம் நாம் அனுபவித்துக்கொண்டு இருப்போம். இதனால் அந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்து, பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை மட்டும் நாம் கவனிக்கவே மாட்டோம். காரணம், இது ஒரு சூதாட்டம் என்கிற எண்ணம் மக்களுடம் ஆழமாக வேறூன்றி இருப்பதால், இன்று பங்கு விலை உயர்ந்திருக்கலாம்; ஆனால், கூடிய விரைவில் அது இல்லாமல் போய்விடும் என்று நினைத்து, பணத்தை வங்கி எஃப்.டி.யிலும் ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் போட்டார்கள். ஆனால், இந்தப் பங்கில் கிடைத்த லாபம் இவற்றில் கிடைக்கவில்லை என்பதை இப்போதுகூட பலரும் புரிந்துகொண்டார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.
ஆக, இன்றைக்கு மக்களுக்கு மிகப் பெரிய தேவை, பங்குச் சந்தை குறித்த அணுகுமுறையில் மிகப் பெரிய மனமாற்றம் வரவேண்டும் என்பதுதான். இந்தப் பங்கில் இத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கிறது, அந்தப் பங்கில் இத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று தெரிந்தாலும், இன்றையக்கூட பங்குச் சந்தையில் எத்தனை பேர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார் என்பது மிகப் பெரிய கேள்விதான்.

பங்குச் சந்தையில் இன்று முதலீடு செய்யப் பலரும் தயாராக இருக்கிறார்கள் எனில், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு குறுகிய காலத்தில் லாபத்தை அள்ளிவிட வேண்டும் என்பதுதான். ஆனால், பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்துக்கானது. குறுகிய காலத்துக்கானதல்ல. குறுகிய காலத்தில் அள்ளிவிடலாம் என்கிற ஆசையில் பங்குச் சந்தையில் பணம் போடுபவர்கள், அந்த ஆசை நிறைவேறாதபட்சத்தில் 'பங்குச் சந்தை சூதாட்டம்' என்று சொல்லி, அதிலிருந்து வாழ்க்கை முழுக்க விலகிவிடுகிறார்கள். ஆனால், குறுகிய காலத்தில் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறவர்களும் புரிந்துகொண்டவர்களும் பங்குச் சந்தையில் நேரடியாகவும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மறைமுகமாகவும் முதலீடு செய்து நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கத் தவறுவதில்லை.
ஆக, எந்தப் பங்கு வாங்க வேண்டும் என்பது நம் மக்களுக்குத் தெரியாததால் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை என்று சொல்ல முடியாது. பங்குச் சந்தை மீதே நம்பிக்கை இல்லாததால்தான் அதில் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் உண்மை.

இதற்கு என்ன செய்யவேண்டும்? பங்குச் சந்தை என்பது சூதாட்டமல்ல என்பதை முதலில் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பங்கு நிறுவனம் ஏன் பங்கு வெளியிட்டு பணத்தைத் திரட்டுகிறது, பங்கு நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது, லாபம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறது, அதனால் பங்கு விலை எந்த அளவுக்கு அதிகமாகிறது என்பதை எல்லாம் கற்றுத்தர வேண்டும். இந்த அடிப்படை விஷயங்களை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்தால், ஒருவேளை நஷ்டம் வரும்போது, வெறுத்து ஓடத்தான் செய்வார்கள்.
'இந்தப் பங்குகளை எல்லாம் வாங்காம போயிட்டீங்களே...' என்று சொன்னால், வீடியோவில் பார்ப்பதற்கு வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜவாழ்க்கையில் அதனால் எந்தப் பயனும் இல்லை!
பங்குச் சந்தை பற்றி நம் மக்களின் அணுகுமுறை மாறவேண்டும். அல்லது, பங்குச் சந்தை பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் பார்த்துக்கொள்வார். நீண்ட காலத்தில் எனக்கு 12% லாபம் கிடைத்தால் போதும் என்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தாராளமாக முதலீடு செய்யத் தொடங்கலாம்!

முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!



















