அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்..." - அன்பு...
'ஸாரி... எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!' - முதல்வரின் அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட்டுகள்?
முதல்வர் விஜய் தலைமையில் நாளை தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது தவெக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக, ஐ.யூ.எம்.எல், மதிமுக என தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் தவெக சார்பில் இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரண்டு கட்சிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.

கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நாளை மாலை இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக சார்பில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் என முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இறங்கியிருந்தனர். நேற்று ஐ.யூ.எம்.எல் காதர் மொய்தீன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.
இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரஸூக்கு அழைப்புக் கடிதம் வழங்கியிருந்தனர். இந்நிலையில்தான் இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்துகொள்ளப் போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக தோழர்கள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், 'ஆதவ்வும் ஆனந்தும் அழைப்புக்கடிதம் கொடுத்த போதே 'எங்களால் இந்த கூட்டத்துக்கு வர இயலாது' என இருதரப்பு கம்யூனிஸ்ட்டுகளும் கூறிவிட்டோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவுதான் கொடுக்கிறோம்.

ஆட்சியில் பங்கு பெறவில்லை. அவர்களின் கூட்டணியிலும் இல்லை. அப்படியிருக்க இந்த கூட்டத்தில் பங்கேற்பது சரியாக இருக்காது. இதை முறைப்படி ஆதவ்விடமும் ஆனந்திடமும் கூறிவிட்டோம். நேரில் வந்து அழைத்துவிட்டார்கள், அதனால் மரியாதைக்காக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். நாளை காலை 11 மணிக்கு தொழிலாளர் உரிமைகள் சார்ந்தும் மக்கள் நலன் சார்ந்தும் சில கோரிக்கைகளோடு மு.வீரபாண்டியனும் பெ.சண்முகமும் கோட்டைக்கே சென்று முதல்வரை சந்திக்கவிருக்கிறார்கள். அப்போது, 'நாங்கள் உங்கள் ஆட்சி நிலைக்க ஆதரவு தருகிறோம். நீங்கள் நல்லது செய்தால் பாராட்டுவோம். இப்போதைக்கு கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என மிகத் தெளிவாக முதல்வர் விஜய்யிடம் கூறவிருக்கின்றனர்' என்றனர்.


















