காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!
ஹைக்கூ கவிதைப் போட்டி: "லிங்குசாமி கவிதைகளில் சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு..." - வியக்கும் கவிஞர்
கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையை தமிழ் இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், தொழிலதிபருமான ஆர்.சிவகுமார் விழாவுக்கான செலவுகள் மற்றும் பரிசுத்தொகையைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இது குறித்து இயக்குநர் லிங்குசாமி நமக்களித்த பேட்டியில் கூட, ''சிவக்குமார் சார் கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வமுள்ளார். அவர் பரிசுத்தொகை, செலவுகளைப் பொறுப்பேற்பதாலும், இந்த விழா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும் இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்'' என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் போட்டி குறித்தும், லிங்குசாமி குறித்தும் ஆர்.சிவக்குமாரிடம் பேசினோம்.
''என்னோட சின்ன வயசுல இருந்தே கவிதைகள் மீது பிடிப்பு வந்திடுச்சு. எங்க வீட்டுல அப்பா 'கணையாழி', 'தீபம்', 'கசடதபற'னு நிறைய இதழ்கள் வாங்குவாங்க. அங்கிருந்து தொடங்கிய வாசிப்பாலதான் கவிதைகளின் காதலனானேன்.
பாலகுமாரன், சுஜாதாவின் எழுத்துகளுக்குத் தீவிர வாசகன். மணிக்கணக்கில் அவரைப் பத்தி சிலாகித்துப் பேசுவேன். எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைகளை, அந்தப் பக்கங்களைப் புகைப்படமாக எடுத்து வச்சுக்குவேன். நேரம் கிடைக்கையில் ரசித்து வாசிப்பேன். பயணங்களின்போது என்கிட்ட வாசிப்பதற்கு 300 கவிதைகளாகவது என் சேகரிப்பில் இருக்கும்.

ஒரு விமானப் பயணத்தின்போதுதான் லிங்குசாமியோட அறிமுகம் கிடைச்சது. என் பக்கத்து சீட்டுலதான் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரது முதல் கவிதை நூலான 'லிங்கூ' வெளியாகி இருந்ததால அவர்கிட்ட நான் உங்க கவிதை நூலை வாசிச்சிருக்கேன்னு சொன்னேன். அவர் சின்னதாகச் சிரித்தார்.
'லிங்கூ'வில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்து சொன்னேன். ஆச்சரியமானார். உங்க கவிதைகள்ல சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு சொன்னதும், இன்னும் முகம் மலர்ந்தார். 'இவ்வளவு கூர்மையாகக் கவனிச்சிருக்கீங்களே'னு சொல்லி சந்தோஷமானார்.
அதன்பின் ஒருநாள் அவரோட அலுவலகத்துக்குக் கூப்பிட்டார். போயிருந்தேன். 'சினிமாவுல நடிக்குறீங்களா?'னு கேட்டார். விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன். அதன் பின் எங்களோட பேச்சு கவிதை, இலக்கியம்னு நீண்டது. லிங்குவைச் சந்திக்கும் போதெல்லாம் அவரிடம் சினிமா பத்தி பேசமாட்டேன்.
அதைப்போல அவரும் என் தொழில் குறித்தும் கேட்பதில்லை. ஒருநாள் அவர்கிட்ட இலக்கியம், கவிதை தொடர்பாக எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் என்னோட பங்களிப்பும் இருக்கணும்னு விரும்புறேன்னு அவர்கிட்ட சொன்னேன்.

சில மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து போன் வந்தது. 'கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதைப் போட்டி ஒன்றை நடத்தலாம்னு இருக்கேன். ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றிலிருந்தும் இணைந்து நடந்தலாம்னு கேட்டிருக்காங்க'னு சொன்னார்.
உடனே லிங்குவிடம், 'இதை நானே செய்யறேன். நான் உயிருடன் இருக்கும் வரை செய்வேன்'னு சொன்னேன். ரொம்பவே நெகிழ்ந்துட்டார். இப்ப 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கறோம். ஒவ்வொரு வருஷப் போட்டியின் போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கெங்கிருந்தோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க.

அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம். முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் தலா 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுகள் உண்டு. தேர்வாகும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம்.
ஒவ்வொரு வருஷமும் கவிக்கோவின் பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று விழா நடக்கும். கடந்த சில வருஷமாக மியூசிக் அகடமியில்தான் விழா நடந்து வருகிறது. அதைப் போல இந்தாண்டும் அங்கே நடத்தத் திட்டமிட்டிருக்கோம். ஹைக்கூ போட்டி மட்டுமல்லாது சுஜாதா சிறுகதைகள் போட்டிகள், நான் நேசிக்கும் கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழாக்களையும் மகிழ்வுடன் நடத்தி வருவது பிடித்த விஷயமாக இருக்குது.
இலக்கியத்துக்கு என்னால் முடிஞ்சதைச் செய்யணும்னு விரும்புறேன். அப்துல் ரகுமான் கவிதைப் போட்டியில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார், யாரென அறிவிப்போம். நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விவரமே யாருக்கும் தெரியாது. இந்த விழாவை நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது. கடைசி வரைக்கும் எந்தக் கவிதை செலக்ட் ஆகியிருக்குதுனு எங்க யாருக்குமே தெரியாது.

முதல் வருடத்தில் பரிசு பெற்ற கவிதையான 'வாடியது கொக்கு/ ஓடியதெல்லாம் ஜோடி மீன்கள்' கவிதை இன்னிக்கும் எல்லோருடைய மனசிலேயும் நிற்குது. அதை மலேசியாவுல இருந்து எழுதினவருக்கு, பரிசு கிடைக்குமானு கூட தெரிஞ்சிருக்காது. கவிதைகளைத் தேர்வு செய்யறது கடினமான செயல். 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து கடைசி 250 படிச்சாலும், அத்தனையுமே பெஸ்ட் ஆக தெரியும்.
லிங்கு அதைச் சரியாக முறையில் தேர்வு செய்வார். இந்தக் கவிதைகளை எல்லாம் பேராசிரியர் பர்வீன் சுல்தானா எல்லா இடங்களுக்குக் கொண்டு சேர்க்கறது சந்தோஷமா இருக்கு. இந்த வருஷத்துக்கான கவிதைகள் வரத்தொடங்கிவிட்டன. கவிதைகள் அனுப்புவதற்கான கால அவகாசம் மே முதல் வாரம் வரை இருக்கிறது'' என்கிறார் சிவக்குமார்.




















