செய்திகள் :

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

post image

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா பரமசிவம் அவர்களை, விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்தில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

100 நாள் ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் காவல்நிலைய மரணங்களை தடுக்கத்தவறி தவெக அரசு வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

death
lockup death - சிறைச்சாலை மரணம்

காவல்துறையினரின் கண்மூடித்தனமானத் தாக்குதலில் படுகாயமடைந்து, தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் ஐயா பரமசிவம் அவர்கள், அளித்துள்ள மரண வாக்குமூலக் காணொளி இதயத்தை உறையச்செய்கிறது.

வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன்னுடைய மனைவி அய்யம்மாளுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற ஐயா பரமசிவத்தை, காவல் நிலையத்திற்குள் வைத்தே கடுமையாகத் தாக்கிய சிந்தாமணி காவல்துறையினர், தாக்குதல் குறித்து வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கில் குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், ஐயா பரமசிவத்தை மிரட்டியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை.

தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

தவெகவின் நூறுநாள் ஆட்சியில் ஆறு விசாரணை சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற காவல்துறை மரணங்களின்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காதது ஏன்?

தனது கட்சி கூட்டத்தில் வந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கே அரசு வேலை தருகின்ற முதல்வர் விஜய், தனது ஆட்சியில், தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மக்கள் மீது நிகழ்த்திவரும் அடக்குமுறை கொடுமைகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்குத் துயர்துடைப்பு உதவியோ, அரசு வேலையோ வழங்க மறுப்பதேன்? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா?

ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்கள் கேட்கவில்லையா? தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த திமுக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத்தராது இருப்பது முறைதானா முதல்வர் அவர்களே? கொடுங்குற்றம் புரிந்த குற்றவாளியாக, இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத்தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் எந்தவொரு நாட்டிலும் நிகழக்கூடாத மனிதப் பேரவலம்!

ஆகவே, மதுரை சிந்தாமணி காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ள ஐயா பரமசிவம் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும் வழங்க வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய விசாரணை மரணங்கள் இனியும் தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க