`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்...' - பாஜகவில் இணைந்த ராகவ் சதா த...
+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? - நாளை சென்னையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து நாளை 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
+2 முடித்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அனுமதி இலவசம்.
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபவமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், ஊடகத் துறையின் மூத்த ஆளுமையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவருமான கல்வியாளர் ரமேஷ் பிரபா, முழுநேரமாக உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கிவரும் கல்வியாளர் க.கலைமணி, ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளித்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவராக உள்ள பேராசிரியர் விக்னேஷ் முத்து விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட இருக்கிறார்கள். உங்களுடைய சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கவுள்ளார்கள்.
தமிழகத்தில் முக்கியக் கல்வியாளர்கள் நால்வர் பங்கேற்கும் இந்த நிகழ்வைத் தவறவிடாதீர்கள். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்துக்கு வந்து பதிவு செய்து பங்கேற்கலாம்!














