செய்திகள் :

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்: `ஒருவேளை இச்சட்டம் வந்தால் நம் கல்லூரிகள் என்னவாகும்?' | Explained

post image

வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளை வாரி இறைக்கிறார்கள். பிரசாரத்தில் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால், தமிழகத்தின் உயர்கல்விச் சூழலையே சிதைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கிற ஒரு சட்டம் பற்றி இங்கே யாருமே வாய் திறக்கவில்லை. ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல்  பாழ்பட்டு வரும் நிலையில், இப்போது மொத்தமாக உயர்கல்விக் கூடங்களை சட்டப்பூர்வமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் செயலை தொடங்கிவிட்டது மத்திய அரசு. அதற்காக அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்'  (Viksit Bharat Shiksha Adhishthan, 2025) என்ற சட்ட வரைவு.

கல்வி


தேசியக் கல்விக்கொள்கை 2020-ஐ படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அதன் ஒரு அங்கமாக, கலை அறிவியல் படிப்புகளில் தரத்தை ஒருங்கிணைப்பது, அரசு நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு மான்யம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பொறியியல், தொழில்நுட்பக் கல்வியை ஒருங்கிணைக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), ஆசிரியர் கல்வியை ஒருங்கிணைக்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) ஆகிய மூன்று அமைப்புகளையும் கலைத்துவிட்டு 'தேசிய உயர்கல்வி ஆணையம்' என்ற பெயரில் ஒற்றை அமைப்பு நிறுவப்பட இருக்கிறது. அதற்காக, 'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்' சட்டத்துக்கான வரைவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
 
"இன்று இந்தியா வளர்ந்துள்ளது. வளர்ந்த இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஐ.நா சபை வலியுறுத்தும் வறுமை ஒழிப்பு, சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டவுமே தேசியக் கல்விக்கொள்கை -2020 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு உதவும் வகையில் இந்தச் சட்ட வரைவைக் கொண்டு வருகிறோம்" என்கிறது மத்திய அரசு.  

அமைச்சரவை இந்த வரைவுக்கு அனுமதி கொடுத்துள்ள சூழலில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைடுத்து,  இந்த மசோதா பாராளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு (JPC) அனுப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கூட்டுக்குழு இந்த மசோதா தொடர்பாக பல்வேறு அமர்வுகளை நடத்தி கருத்துகளைச் சேகரித்து வருகிறது.

இந்த சட்டத்தின் மூலம் கடந்த 80 ஆண்டுகளில் மாநிலங்களை ஆட்சி செய்த தலைவர்கள் மிகுந்த தொலைநோக்கோடு உருவாக்கிய உயர்கல்வி கட்டமைப்புகள் அனைத்தையும் மத்திய அரசு தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதோடு, இதுவரை நிர்வகித்துவரும் உயர்கல்வி சார் அமைப்புகளை இல்லாமல் செய்து, ஆராய்ச்சி, நிதி நல்கை என அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாக அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்கிறது.  

கலைக்கப்படும் சட்டப்பூர்வ அமைப்புகள்1. பல்கலைக்கழக மானியக் குழு (UGC – University Grants Commission)நிறுவப்பட்ட ஆண்டு: 1953நோக்கம்: இந்தியாவில் Arts, Science, Commerce, Humanities போன்ற துறைகளில் உயர் கல்வியின் ஒருங்கிணைப்பு, தரநிலை நிர்ணயம் மற்றும் பராமரிப்புமுக்கிய பொறுப்புகள்:பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்பு வழங்குதல், மானியங்கள் வழங்குதல், கற்பித்தல், தேர்வு, ஆராய்ச்சி தரநிலைகளை நிர்ணயித்தல்.


'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்' சட்ட வரைவுப்படி, தேசிய உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். அதற்குக் கீழே  3 கவுன்சில்கள் உருவாக்கப்படும்.

 ஒன்று, 'விக்சித் பாரத் சிக்ஷா வினியமன் பரிஷத்' எனப்படும் ஒழுங்குமுறை கவுன்சில்.

இரண்டாவது, 'விக்சித் பாரத் சிக்ஷா குணவத்தா பரிஷத்' எனப்படும் அங்கீகார கவுன்சில்.

மூன்றாவது, 'விக்சித் பாரத் சிக்ஷா மானக் பரிஷத்' எனப்படும் தரநிலை கவுன்சில்.

பல்வேறு மொழிகளையும் தனித்துவங்களையும் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கிற இந்தியாவில் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் நிறுவனங்களின் பெயர்கள்... இந்த மூன்று கவுன்சில்களும் தன்னாட்சி அமைப்புகளாகச் செயல்படும் என்று சொல்லப்பட்டாலும், ஆணையம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அரசின் முடிவே இறுதியானது என்கிறது அந்த வரைவு.

தேசிய உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அதில் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் 3 பேர் மூன்று கவுன்சில்களின் தலைவர்கள். தவிர உயர்கல்வித்துறை செயலர், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 2 உறுப்பினர்கள், 'புகழ்பெற்ற நிபுணர்கள்' 5 பேர்,  ஒரு உறுப்பினர் செயலர்.  

28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட இந்தியாவில் மாநில கல்வி நிறுவனங்களில் இருந்து 2 பேர் மட்டுமே இருப்பார்கள். அதையும் மத்திய அரசு தான் தீர்மானிக்கும். இந்த ஆணையம் தனக்குக் கீழே இயங்கும் மூன்று கவுன்சில்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்யும்.

மூன்று கவுன்சில்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கவுன்சிலிலும் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். பேராசிரியர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு சுழற்சி அடிப்படையில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதியாக ஒருவர்  நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதி.  

பாராளுமன்றத்தில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அந்த மசோதாவில், நிதி வழங்குவது பற்றி எதையும் குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டியும   மாநிலங்களின் உரிமைப் பறிப்பு தொடர்பாகவும்  குறிப்பிட்டார்களே ஒழிய, அரசியல் சாசனப்படி, இப்படியொரு சட்டத்தை மத்திய அரசு இயற்றவே முடியாது என்று சுட்டிக்காட்டவில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

2. கலைக்கப்படும் சட்டப்பூர்வ அமைப்புகள்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE – All India Council for Technical Education)நிறுவப்பட்ட ஆண்டு: 1945நோக்கம்: Engineering, MBA, MCA, Pharmacy போன்ற தொழில்நுட்பக் கல்வியின் திட்டமிட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் தரநிலை பராமரிப்பு.முக்கிய பொறுப்புகள்:பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பார்மசி போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு அனுமதி மற்றும் ஒழுங்குமுறை.புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு ஏற்பு வழங்குதல், தரநிலைகள்நிர்ணயம், தொழில்நுட்பக் கல்வியின் திட்டமிட்ட வளர்ச்சி.


எந்த வகையில் இது அரசியல் சாசனத்தை மீறிய செயல்..?

இந்திய அரசியல் சட்டத்தின் கூறு  246 அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் என்னென்ன அதிகாரங்கள், பொறுப்புகள் தரப்பட்டுள்ளன என்பதை அட்டவணை 7 குறிப்பிடுகிறது, அதில்  பட்டியல் -1 என்பது  மத்திய அரசுக்கானது.  அதில் வரிசை 44,  மத்திய அரசு எதையெல்லாம் உருவாக்க முடியும், எதையெல்லாம் ஒழுங்குபடுத்தமுடியும், எதையெல்லாம் கலைக்க முடியும் என்று வரையறுத்துள்ளது.

அதில் 'பல்கலைக்கழகங்கள் தவிர்த்து' (“Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.”) என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசுக்கு பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இல்லை. இதே பிரிவில் வரிசை 66, 'ஒருங்கிணைப்பு மற்றும் தரத்தைத் தீர்மானிப்பது' மட்டுமே  உயர்கல்விக்கான மத்திய அரசின் பொறுப்பு என்று  குறிப்பிடுகிறது.

பட்டியல்-2, மாநில அரசின் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. பட்டியல் -1ல் இருக்கும் எந்த விஷயத்திலும் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது. நாடாளுமன்றம் மட்டுமே இயற்ற முடியும். பட்டியல் -2 ல் இருக்கும் எந்த விஷயத்திலும் மத்திய அரசு சட்டம் இயற்றவோ தலையிடவோ முடியாது. சட்டமன்றம் மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.

பட்டியல் 2-,  வரிசை எண் -32-ல் "மாநில அரசு எதையெல்லாம் உருவாக்க முடியும், எதையெல்லாம் ஒழுங்குபடுத்தமுடியும், எதையெல்லாம் கலைக்க முடியும் என்று வரையறுக்கிறது. அதில், தெளிவாக  "பல்கலைக்கழகங்கள் குறித்த அதிகாரம் மாநில அரசுக்கானது" என்று குறிப்பிடுகிறார்கள். (“Incorporation, regulation and winding up of corporation, other than those specified in List I, and universities)

பட்டியல்-3 என்பது மத்திய மாநில அரசுக்களுக்குப் பொதுவானது. அது தொடர்பாக மத்திய அரசும் சட்டம் இயற்றலாம், மாநில அரசும் இயற்றலாம். இரண்டு பேருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படும். பட்டியல் 3, வரிசை 25ல்  "உயர்கல்வி மற்றும் உயராய்வு நிறுவனங்களின் தரத்தைத் தீர்மானிப்பதும் ஒருங்கிணைப்பதும் மட்டுமே மத்திய அரசின் வரம்பு. ஒழுங்குபடுத்துதல் மத்திய அரசின் வேலையே இல்லை" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை, மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. ("Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour") என்பது கல்வியாளர்கள் வாதம்.

யு.ஜி.சி. அமைப்பு!



சரி, ஒருவேளை இந்த சட்டம் வந்தால் என்ன ஆகும்?

"இந்தச் சட்டம் வந்தால், மாநில அரசுகள் உருவாக்கி நடத்தும் ஒட்டுமொத்த அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் மத்திய அரசின் அதிகாரத்துக்குள் போய்விடும். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும்  இருக்காது. மத்திய அரசு நிதி வழங்குவது குறித்து சட்ட  வரைவில் எந்த உத்தரவாதமும் இல்லை. நிதியை வழங்காத மத்திய அரசு, மாநில அரசிடம் இருந்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறது‌.

``மத்திய அரசின் உத்தரவுகள் படிதான் உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்ற நிலையில் மாநில அரசு எப்படி நிதி வழங்கும். ஆக, மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை, ஒன்றிய அரசு நிதி வழங்காது என்ற நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், அன்றாட செலவுகளுக்கு மாணவரிடம் இருந்தே கட்டணம் வசூலித்து நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்ந்து மட்டுமல்ல , படிப்படியாக கல்லூரிகள், பல்கலைக் கழக நிர்வாகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்..." என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  

பிரின்ஸ் கஜேந்திரபாபு



"2020 தொடங்கி 2030-க்குள் தேசியக் கல்விக்கொள்கையின் கீழ் ஒரு கட்டமைப்பை உருவாக்குவது. அதன் செயல்பாடுகளை உறுதி செய்வது தான் மத்தியில் ஆளும் அரசின் நோக்கம். கல்வியின் வாயிலாக அவர்கள் நினைக்கும் ஒற்றை கருத்துடைய ஒரு சமூகத்தை உருவாக்குவது தான் அவர்கள் லட்சியம். அதற்குத் தடையாக இருக்கும் எல்லாக் கட்டமைப்புகளையும் அவர்கள் அடித்து உடைக்கிறார்கள்.

இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகளில், அரசின் பங்களிப்பு என்ன, எவ்வளவு நிதிப்பங்களிப்பு  வழங்கவேண்டும் என்பதுதான் இருக்கும். அரசு பள்ளி, அரசுக் கல்லூரி, அரசு பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவதுதான் அவற்றின் நோக்கமாக இருக்கும். 2020 தேசியக் கல்விக்கொள்கை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. ஒட்டுமொத்தமாக கல்வியை தனியார் கையில் ஒப்படைப்பது தான் இதன் நோக்கமாக இருக்கிறது. தனியார் தங்கள் விருப்பம்போல் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு முழு உரிமையும் கொடுப்பது. அரசு தனது நிதியில் இருந்து எந்தக் கல்வி நிறுவனத்தையும் இயக்காது என்பதுதான் இதன் சாரம்சம். இந்தக் கல்விக்கொள்கைை எல்லோரும் எதிர்ப்பதற்கான மையக் காரணம் அதுதான்.

அரசு நடத்துகிற கல்வி நிறுவனத்தில் நேரடியாக வகுப்புவாதத்தை புகுத்த முடியாது. தனியார் கையில் தந்துவிட்டால் அதை எளிதாகச் செய்யலாம். அதுதான் மத்திய அரசின் செயல்திட்டம். முக்கியமாக அனைத்துச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவேண்டும். இதுதான் அவர்களின் தலையாய நோக்கம்.

இந்த சட்ட வரைவில், சட்டத்தின் நோக்கங்களை கூறும் இடத்தில்..  "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7, பட்டியல் எண் 1,  வரிசை 66-ன் கீழ் பல்கலைக்கழக மானியச் சட்டம்  (University Grants Commission) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை  'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்' சட்டம் திரும்பப் பெறுகிறது" என்று சொல்லப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட விதிகளின்படி உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை புதிய சட்டத்தின்மூலம் திரும்பப் பெறப்போவதாக சொல்கிறார்கள்... ஆனால் இந்த புதிய சட்டம் அரசியல்  சாசனத்தின் எந்தப்பிரிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை. காரணம், அரசியல் சாசனப்படி இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அதனால்தான், இந்த சட்ட மசோதா எந்தப் பிரிவின் கீழ் கொண்டு வரப்படுகிறது என்று அவர்கள் சொல்லவில்லை.

கலைக்கப்படும் சட்டப்பூர்வ அமைப்புகள்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE- National Council for Teacher Education) நிறுவப்பட்ட ஆண்டு: 1973 நோக்கம்: D.El.Ed, B.Ed, M.Ed போன்ற ஆசிரியர் கல்வியின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, தரநிலைகள் பராமரிப்பு. முக்கிய பொறுப்புகள்:ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு ஏற்பு வழங்குதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, பாடத்திட்டம், ஆசிரியர் தகுதி ஆகியவற்றுக்கு விதிமுறைகள் வகுத்தல். ஆசிரியர் கல்வியில் புதுமை, ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதி தரநிலைகள் நிர்ணயம்.ஆசிரியர் கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுத்தல்.

இந்த சட்டம் வந்தால் அரசு நிதியில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தனியார் கைகளுக்கு போக வாய்ப்புண்டு. ஆசிரியர்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். நிரந்தர ஊழியர்களாகவும் இருக்க மாட்டார்கள். அது உயர்கல்வி, உயர் ஆய்வுகளை பெரிதாகப் பாதிக்கும். தமிழகம் போன்ற மாநிலங்களில் இங்கிருந்த தலைவர்கள் தொலைநோக்கோடு பல கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவம், அறிவியல், பொறியியல் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் தமிழகம் தான் முன்னிலையில் இருக்கிறது.  ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் தந்து, அரசின் நிதியில் உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால் மாணவர்களிடம் மிக்க குறைந்த கட்டணம் வாங்கியோ அல்லது கட்டணம் ஏதும் பெறாமலோ கல்வியை வழங்குகின்றன இங்குள்ள கல்விக்கூடங்கள். இங்கிருந்து தான் இஸ்ரோவுக்கு வீரமுத்துவேல் போனார். மயில்சாமி அண்ணாத்துரை போனார். சிவன் போனார். நிகர் ஷாஜி போனார்.

தரமான நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவது அரசு கல்வி நிறுவனங்கள் தான். அதிலும் இதுவரை அதிக ஆளுமைகளை பொதுத் துறைக்கு தந்துள்ளது மாநில அரசுகளின் உயர் கல்வி நிறுவனங்களே என்பதுதான் உண்மை. 75 ஆண்டு கால இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தது மாநில அரசு நிறுவனங்களும் சமூகநீதி அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடும் தான். அரசு நிறுவனங்களையும் அங்குள்ள சமூகநீதிக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டால், எதிர்காலத்தில் இப்படியான நிபுணர்கள் உருவாக மாட்டார்கள்.
 


மாநில அரசுக்கு கல்வி நிறுவனங்களில் எந்தப் பங்களிப்புமே இல்லை என்றால், நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வியாசர்பாடி அரசு டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி போன்ற அடித்தட்டு மாணவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் அரசுக் கல்லூரிக்கெல்லாம் யார் நிதி தருவார்கள்? அந்தக் கல்லூரிகளின் நிலை என்ன?  மத்திய அரசு எந்த அடிப்படையில் எவ்வளவு நிதி வழங்கும்? போதுமான நிதி இல்லாத நிலையில், நாளை இந்தக் கல்வி நிறுவனங்களைத் தனியார் எடுத்து நடத்தக்கூட அனுமதிக்கலாம். தனியார் கைக்குப் போனால் கல்விக்கட்டணம் பல மடங்கு உயரும். முக்கியமாக இடஒதுக்கீடு முழுமையாக கைவிடப்படும். எளிய மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே நின்று போகும். கல்வி நிலையங்கள் ஈட்டும் லாபத்தை தனியார் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல இந்த சட்ட வரைவு வழிவகுக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றியே ஒவ்வொரு பல்கலைக்கழகத்தையும் மாநில அரசு உருவாக்குகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களுக்கான தனி சட்டத்திட்டத்தில் இயங்குகின்றன.  'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்' சட்டம் நிறைவேற்றப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் தமிழக அரசு இயற்றிய பல்கலைக்கழகங்களுக்கான எல்லாச் சட்டங்களும் செயல் இழந்துவிடும். தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் ஏறினாலும் அந்த முதல்வருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு  அரசுப் பல்கலைக்கழகங்களில் எந்த உரிமையும் இருக்கப்போவதில்லை.



ஒரு புறம் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நிதி வழங்காமல் அதன் செயல்பாடுகளை முடக்குகிறார்கள்.  மறுபுறம் அன்னிய பல்கலைக் கழகங்கள் தங்களின் விருப்பம் போல் கட்டணம் வசூல் செய்து செயல்பட அனுமதி வழங்குகிறார்கள், இந்திய கல்வி நிறுவனங்களை அந்நிய கல்வி நிறுவனங்களுடன் போட்டிப் போட சொல்லுவது கையை கட்டிக் கொண்டு போர்களத்தில் பீரங்கி முன் நிற்கச் சொல்வதற்கு சமம். இந்தியாவில் உள்ள மாநில அரசு கல்வி நிறுவனங்களை அழிக்கும் நோக்கத்தைத் தவிர இதில் ஏதும் இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காத ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் எப்படி விவாதித்து நிறைவேற்ற முடியும்? அவ்வாறு நடந்தால் அது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல்..." என்று இந்த சட்டத்தின் விபரீதத்தை விவரிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.    

தேசிய உயர்கல்வி ஆணையத்தையும் அதன் கீழ் இயங்கும் கவுன்சில்களையும் சுதந்திரமான அமைப்பு என்று சொன்னாலும் லகானை தன் கைப்பிடிக்குள் தான் வைத்திருக்கிறது மத்திய அரசு. "இந்த ஆணையமோ அந்த ஆணையத்தின் கீழ் உள்ள மன்றங்களோ பிறப்பிக்கும் உத்தரவு அரசின் நோக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில், அரசே ஒரு உத்தரவு பிறப்பிக்கும். இதில் அரசின் உத்தரவே செல்லும்" என்கிறது இந்த சட்ட  வரைவு. மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் சித்தாந்தத்தை திணிக்க வழி செய்வதே இந்த சட்டத்தின் அடிநாதம்.

இந்த ஆணையம் அல்லது ஆணையத்தின் கீழ் இருக்கும் கவுன்சில்களின் செயல்பாடுகளில் அரசுக்கு திருப்தி இல்லாதபட்சத்தில் அரசு எப்போது வேண்டுமாலும் அவற்றின் நிர்வாகத்தில் தலையிடலாம். கலைத்துவிடலாம். அந்த கவுன்சில்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்கலாம்.  

மத்திய அரசு எதை மாணவர்களுக்குக் கற்றுத்தரச் சொல்கிறதோ அதைத்தான் கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டும்.  முடியாது என்று சொன்னால், "நீங்கள் கொடுக்கும் பட்டம் செல்லாது" என்று சொல்லும் உரிமை கவுன்சிலுக்கு இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம்
அரசியலமைப்பு சட்டம்



75 ஆண்டுகளில் அறிவு சார்ந்த, அறிவியல் பார்வை கொண்ட,  ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்விக்கட்டமைப்பை நாடு உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால் இந்தியக் கல்வியாளர்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதிலிருந்து விலகி, உலகத்திலிருக்கும் பெரும் முதலாளிகள் லாபத்தை ஈட்டக்கூடிய சந்தையாக கல்வியை மாற்றக்கூடிய சூழ்ச்சி தான் இந்தச் சட்டம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

'புதிய தனியார் பல்கலைக்கழகங்கள்,  உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்க எளிமையான, வேகமான அனுமதி வழங்கப்படும். நல்ல தரத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு பாடத்திட்டம் வடிவமைக்கும் சுதந்திரம், கட்டணம் நிர்ணயம், சர்வதேச ஒத்துழைப்பு, புதிய படிப்புகள் ஆகியவற்றில் அதிக சுயாட்சி வழங்கப்படும்' என்றும் இந்த மசோதாவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. யார் முதலீடு செய்கிறார்களோ அவர்கள் லாபமீட்டும் இடமாக கல்வி நிறுவனங்கள் மாறிவிடும். எளிய மாணவர்கள் உயர்கல்விக்கூடங்களை மிதிப்பது சிரமமாகிவிடும் என்ற அச்சமும் நியாயமானது.

கோதண்டராமன்



"பல்கலைக்கழக மானியக்குழு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான நிதியை வழங்கி தரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பொறியியல் படிப்புகளை ஒருங்கிணைக்கிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்  ஆசிரியர் படிப்புக்கான கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது. இப்படி ஒவ்வொரு துறையையும் ஒரு நிறுவனம் ஒருங்கிணைத்ததில் வேலை சுலபமாக முடியும். புதிதாக ஒரு பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் என்றால் இந்த அமைப்புகளை அணுகி அனுமதி கோருவது எளிது. ஆராய்ச்சி நிதி கோருவது எளிது. இதையெல்லாம், இல்லாமல் செய்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்போது கவனம் விலகும். அணுகுதலில் பெரும் சிக்கல் ஏற்படும்.  வளர்ச்சியே பாதிக்கப்படும். ஏகப்பட்ட நடைமுறைப் பிரச்னைகள் இதில் இருக்கின்றன.  இந்த சட்டம் வந்தால் எல்லா உயர்கல்விக் கூடங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தான், பாஸ். அவர் அனுமதித்தால் தான் எதுவும் நடக்கும். கல்விக்கூடங்களில் எதைத் திணிக்க விரும்புகிறார்களோ அதை எளிமையாகத் திணிக்கலாம். இந்தச்சட்டம் மிகச்சிறப்பாக இயங்கும் கல்விக்கூடங்களை சீரழிக்கவே உதவும்.

பிஎம் ஶ்ரீ பள்ளிகளை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம் என்று மிரட்டுவதைப் போல எல்லா விஷயங்களுக்கும் அச்சுறுத்துவார்கள். தமிழகத்தில் தனித்தன்மையாக இருக்கும் எல்லா விஷயங்களையும் சட்டப்பூர்வமாக அழித்து விடுவார்கள். இது அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியே ஒழிய கல்வியை வளர்க்கும் முயற்சி அல்ல. .." என்கிறார் ஓய்வுபெற்ற சென்னைப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் கே.கோதண்டராமன்.

தமிழகம் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்துக்காக போராடுகிறது.  ஆனால் மத்திய அரசு மொத்தக் கல்வி நிறுவனங்களையும் தங்கள் பிடிக்குள் கொண்டு செல்ல சட்டம் இயற்றுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தில் மக்களைச் சந்திக்கிற அரசியல் கட்சிகள் இதைப்பேசாமல் எதையெதையோ பேசுகின்றன. தேர்தலில் வென்று முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்க ஆசைப்படும் தலைவர்கள் அதிகாரமே இல்லாத நாற்காலியில் அமரப் போகிறோம் என்பதை உணர்ந்துள்ளார்களா?