GuidanceTN விவகாரம்: 'மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதை வேடிக்கை பார்த்தது ஏன்?'...
25 நாள்களில் 52 லட்சம் திருமணங்கள்... ₹7.5 லட்சம் கோடி வர்த்தகத்தை எதிர்பார்க்கும் இந்தியா!
இந்தியாவில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான 25 நாள்களில் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதன் மூலம் ₹7.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders - CAIT) கணித்துள்ளது.
எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு வருவாய்?
25 மாநிலங்களில் உள்ள 550 வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசித்து, கூட்டமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவு இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்த வர்த்தகத்தில் பொருட்கள் விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் மூலம் ₹4.05 லட்சம் கோடியும், சேவைத் துறைகள் மூலம் ₹3.45 லட்சம் கோடியும் வருவாய் ஈட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நகை மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் விற்பனை மூலம் ₹1.2 லட்சம் கோடியும், ஆடை மற்றும் ஜவுளி விற்பனை மூலம் ₹90,000 கோடியும் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. விருந்து உபசரிப்பு சேவைகள் மூலம் ₹75,000 கோடியும், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் ₹60,000 கோடியும் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பூ அலங்காரம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, புகைப்படம், வீடியோ, அழகுக்கலை மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் வர்த்தகம் கணிசமாக உயரும்.

குறுகிய நாள்களில் திருமணங்கள் குவியக் காரணம் என்ன?
இந்தியாவில் திருமணங்கள் ஆண்டு முழுவதும் சீராக நடைபெறுவதில்லை. குடும்பங்களின் மரபு, நம்பிக்கைகள் மற்றும் சுப முகூர்த்த நாள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே திருமணத் தேதிகள் முடிவு செய்யப்படுகின்றன.
நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் அடுத்தடுத்து சுப முகூர்த்த நாள்கள் வருவதால், ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் திருமணங்கள் குவிகின்றன. இதனால் மண்டபங்கள், ஆடைகள், நகைகள் மற்றும் இதர சேவைகளுக்கான தேவை குறுகிய நாள்களில் பன்மடங்கு அதிகரிக்கிறது.
1.25 கோடி தற்காலிக வேலைவாய்ப்புகள்
இந்தத் திருமணக் காலக்கட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 1.25 கோடி தற்காலிக, பருவகால மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு திருமணத்தை நடத்துவதற்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பூக்கள் கொள்முதல் செய்வது முதல் ஆடை வடிவமைப்பு, மேடை மற்றும் ஒளி அலங்காரம், வாகன ஏற்பாடுகள் வரை பல நிலைகளில் மனித உழைப்பு தேவைப்படுகிறது.

இதனால் சமையல் கலைஞர்கள், உணவுப் பரிமாறுபவர்கள், அலங்காரக் கலைஞர்கள், புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள், படத்தொகுப்பாளர்கள் (Video Editors), பூ வியாபாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் எனப் பல தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பெருநிறுவனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் சிறு வியாபாரிகளும் அமைப்புசாராத் தொழிலாளர்களும் இதன் மூலம் நேரடிப் பலன் பெறுகின்றனர்.
குடும்ப நிகழ்வுகளாகத் தொடங்கும் திருமணங்கள், நாட்டின் உள்நாட்டுச் சந்தையில் பல துறைகளையும் ஒரே நேரத்தில் இயக்கும் முக்கியப் பொருளாதாரக் கூறாக அமைந்துள்ளன.



















