சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல...
53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்
கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன் மனைவிக்கு பராமரிப்பு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவசியம்.
குஜராத்தில் திருமணம் செய்து கொண்டு, 4 நாள்கள் மட்டும் வாழ்ந்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க கணவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் பகுதியில் வசித்து வருபவர் துகாராம் பட்டேல் (53). இவர் வங்கியில் பணியாற்றி வந்தவர். அவருக்கு திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருந்தனர்.
இரு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது; அதற்கிடையில் பட்டேலின் மனைவியும் இறந்தார். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய பட்டேல்முடிவு செய்தார். இதற்காக பெண் தேடினார்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து “பெண் தேவை” என்று கூறி அவர் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து காயத்ரி தேவி என்ற பெண் பட்டேலை அணுகினார். காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 13 வயதுடைய ஒரு மகள் இருந்தார். அவரது கணவர் இறந்திருந்தார்.
2011ம் ஆண்டு பட்டேலும் காயத்ரி தேவியும் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து காயத்ரி தனது கணவன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் இருந்த அனைவரும் காயத்ரியை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர்.
வெறும் நான்கு நாட்கள் மட்டுமே காயத்ரி தனது கணவன் வீட்டில் இருந்தார். அதன் பிறகு அந்த பெண் தனது தாயார் வீட்டிற்கு திரும்பிவிட்டார். காயத்ரியை தனது வீட்டிற்கு அழைத்து வர பட்டேல் எந்த வித முயற்சியும் செய்யவில்லை.

காயத்ரியின் போன் அழைப்புகளையும் பட்டேல் தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், “நம்ம இருவருக்கும் திருமணமே நடக்கவில்லை” என்று பட்டேல் தெரிவித்தார். இதையடுத்து காயத்ரி, குடும்ப நீதிமன்றத்தில் தனக்கும் தனது மைனர் மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் நடந்தது திருமணம் அல்ல; நிச்சயதார்த்தம் மட்டுமே என்று பட்டேல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து காயத்ரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. புதிய விசாரணைக்குப் பிறகு, தம்பதியினர் உண்மையில் திருமணம் செய்து கொண்டதை குடும்ப நீதிமன்றம் உறுதி செய்தது.

அதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கணவரின் புறக்கணிப்பை பரிசீலிக்க முடியும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரரின் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் அவர் கணவனால் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் அவர் தனது மகளுடன் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டது.
எனவே, மனுதாரருக்கு கணவன் மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம், அப்பெண் தனது மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. காயத்ரியின் மகள் பட்டேலுக்கு பிறந்தவர் அல்லாததால், அவருக்கு பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.


















