49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!
வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். பல தொழில்களை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல நாடுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணவு சார்ந்தும், நம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு இருக்கும்.
பல்வேறு துறைகளில் கோலோச்சும் உலகத் தமிழர்களைச் சந்திக்கவும், இந்த விழா வாய்ப்பாக அமையும். இது உலகத் தமிழர்களுக்கான மேடை. மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க இருக்கிறார்கள். தமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள மற்றும் அரங்குகள் அமைக்க விருப்பமுள்ளோர் https://nrtamils.tn.gov.in/nrtday/index என்ற தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும்.

அயலகத் தமிழர்கள் மட்டும் பங்குபெறும் இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருப்போர் தங்கள் தொழில், கலாசாரம், கைவினைபொருள்கள், உணவு உள்ளிட்டவற்றை வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்நிகழ்வு வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி(ஞாயிறு, திங்கள்) இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.



















