அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்: 6,600 விமானங்கள் ரத்து, 8,600 தாமதம்! எ...
Agilisium: 'பாராட்டுகிறோம்!'- ஹைதராபாத் செல்லவிருந்த நிறுவனத்தைத் தடுத்த தமிழக அரசு; நெகிழ்ந்த CEO
முன்னணி டேட்டா அனலிடிக்ஸ் மற்றும் ஏஐ நிறுவனமான 'அஜிலிசியம்' (Agilisium) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ராஜ் பாபு, தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி, தங்கள் நிறுவனத்தின் ஆசியத் தலைமையகத்தை ஹைதராபாத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அஜிலிசியம் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழக அரசிடமிருந்து பெரிய அளவில் எதிர்வினை இருக்காது என்றே ராஜ் பாபு நினைத்திருக்கிறார்.

ஆனால், அடுத்த நாள் காலை 8 மணிக்கே 'Guidance Tamil Nadu' அமைப்பின் அருண் ஜார்ஜ் மேத்யூ அவரைத் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் அந்நிறுவனம் வளர அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார் ஐஏஎஸ் மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு சிஇஓ தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் ஆகியோரும், மதியம் 1 மணிக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்தும் நேரடியாகத் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன தேவை என்பதை அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 900 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் விரிவாக்கம் செய்து 2,000 முதல் 3,000 உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ராஜ் பாபு அப்போது தெரிவித்துள்ளார். மேலும், அரசின் வரவிருக்கும் 'ஹெல்த் மற்றும் மெட்டெக் பார்க்' திட்டம் குறித்தும் அதிகாரிகள் அவரிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
அரசின் இந்த உடனடித் தலையீடு மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராஜ் பாபு, "நான் யாரையும் அணுகாத நிலையில், அவர்களே முன்வந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். நேரடியான கேள்விகளைக் கேட்டார்கள், காதுகொடுத்துக் கேட்டார்கள், அன்றைய தினமே அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் நகர்ந்தார்கள்.

யாருமே தங்கள் பதவியின் அதிகாரத்தைப் பற்றிப் பேசவில்லை; அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொரு உரையாடலிலும் இருந்தது. அஜிலிசியம் நிறுவனத்தை நடத்தும் எனது 12 வருட அனுபவத்தில் இப்படியொரு விஷயத்தை நான் பார்த்ததே இல்லை.
முதலீட்டாளர்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்காமல், அரசே தொலைபேசியை எடுத்துப் பேசுவதுதான் அடுத்த பத்தாண்டுகளுக்கான வேலைவாய்ப்புகளையும் திறமைகளையும் வென்றெடுக்கும் வழி. அரசாங்கம் தவறு செய்யும்போது விமர்சிக்கத் தயங்காத நாம், சரியான விஷயங்களைச் செய்யும்போது அதே குரலில் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாடு எனக்கு எப்போதும் சொந்த வீடு, நாங்கள் இங்கேயே வளர விரும்புகிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















