சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்' – 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும...
Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது" - சென்னையில் பாலைய்யா
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு.
சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 'அகண்டா 2: தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.
பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உட்பட சிலர் வருகை தந்திருந்தார்கள்.
மேடையில் தமிழில் பேசிய பாலைய்யா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சொந்த வீட்டுக்கு வந்த மாதிரியான உணர்வு இப்போ எனக்கிருக்கு. நான் பொறந்தது இங்கதான்.
தமிழ்நாடு என்னுடைய ஜென்ம பூமி. தெலங்கானா என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஆத்ம பூமி.
என்னுடைய அப்பா என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் இங்கதான் வளர்ந்ததுனு உங்களுக்குத் தெரியும்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் எங்க அப்பா மீது வைத்திருந்த அன்பு, பாசம் மறக்க முடியாதது.
என்னுடைய அப்பாவும் தமிழ்நாட்டுக்கு அன்பு, பாசத்தைக் காட்டினார். அவர் எனக்கு குரு, தெய்வம் எல்லாமே. கோவிட் சமயத்துல 'அகண்டா' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆச்சு.
அந்த நேரத்துல இந்தப் படத்தை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்ப்பாங்களான்னு பயம் இருந்தது. ஆனா, மக்கள் வெளிவர்றதுக்கு இந்த மாதிரியான படம் வேணும்னு படக்குழுவினர் உணர்ந்தாங்க.
அந்தப் படம் 2021-ல வெளியாகி பெரிய ஹிட் ஆச்சுனு சொல்லலாம். இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனுவுடனான என்னுடைய நான்காவது படம்.
‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ இப்போ ‘அகண்டா 2’ செய்திருக்கோம். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.
எனக்கும் அவருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கு. அதனாலதான் பல்வேறு லொகேஷன்களில் இந்தப் படத்தை 130 நாள்ல எடுக்க முடிஞ்சது.

ஏதோ தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது. இந்த இரண்டாம் பாகத்தை சீக்வெல்னு சொல்ல முடியாது.
இந்த ‘அகண்ட தாண்டவம்’ திரைப்படம் நம்முடைய கலாசாரத்தை உலகத்திற்கு எடுத்துரைக்கச் செய்யும் ஒரு யாகம். நம்முடைய சக்தியைத் தூண்டும் தாண்டவம்.
இந்தப் படத்தைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வரும்.” என்று பேசினார்.


















