Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய...
AR Rahman: `சிறகு கொடுக்கும் மேடை' - ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்ரம் & பூஜா
புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சோனி விழா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தமிழ் ஐடல்' நிகழ்ச்சியின் முதல் சீசனை, 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்த நிகழ்ச்சியின் முதன்மை நடுவராகப் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான முதற்கட்ட நேரடித் தேர்வுகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கின்றன. சென்னை, மேலையனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா அனெக்ஸரில் நடைபெறும் இத்தேர்வில், இசையில் ஆர்வம் கொண்ட 14 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது குறித்துப் பேசிய 'விக்கல்ஸ்' விக்ரம், "தமிழ்நாடு திறமைமிக்க பாடகர்கள் நிறைந்த மண். அத்தனை நல்ல குரல்களையும் வெளிக்கொண்டு வரும் ஒரு பிரம்மாண்டமான மேடையில் நானும் ஒரு பகுதியாக இருப்பதைப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.
தமிழ் ஐடல் வெறும் பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் திறமைகளை ஒன்றுதிரட்டி, அவர்களின் கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும் மேடை. அதுவும் ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணம் நடப்பது மிகப்பெரிய விஷயம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்கும் பாடகி பூஜா வெங்கட் பேசுகையில், "இசை, உணர்வுகள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை ஒன்றாக இணைக்கும் நிகழ்ச்சிதான் தமிழ் ஐடல். இதில் தொகுப்பாளராகப் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
போட்டிக்கு வரும் ஒவ்வொரு பாடகரும் பதற்றமில்லாமல், முழு தன்னம்பிக்கையோடு பாடுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே என் நோக்கம். இந்த அற்புதமான பயணம் சென்னையிலிருந்து தொடங்குகிறது. ஆகஸ்ட் 23 அன்று நேர்முகத் தேர்வுக்கு வரும் திறமையாளர்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கான நேரடித் தேர்வுகள் சென்னையில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.





















