செய்திகள் :

BB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்‌ஷன் - சாண்ட்ரா மயக்கம்!’ - நடந்தது என்ன?

post image

மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டுக்குப் போகத் துடிக்கும் ரம்யா இன்னமும் நீடிக்கிறார். 

இன்னொரு பக்கம், பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் போன்ற அடாவடி நபர்கள், கன்டென்ட் காரணமாக எளிதில் அனுப்பப்பட மாட்டார்கள். 

வெளியுலகத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அதே விதமான அரசியல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நிகழ்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 49

‘இது 50வது எபிசோட்’ என்கிற பெருமிதத்துடன் மேடைக்கு வந்தார் விசே. ஆனால் இந்த சீசன் இன்னும் கூட பெருமளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

வீட்டுக்குள் சென்ற விசே, ஆரம்பத்திலேயே ‘சாண்ட்ரா. என் மேல கோவமா இருக்கீங்களா.. இல்லையே?” என்று கேட்டு கூலாக்க முயன்றார். “உங்க மேல இல்ல. அவர் மேலதான்” என்று பிரஜினை கை காட்டினார் சாண்ட்ரா. (`அடுத்த சீசன்ல உங்க வாயை மூடிக்கங்க’ என்று தன் மைண்ட் வாய்ஸை விசேவிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?!)

“இந்த டிக்கெட்லாம் எப்படி அம்பது நாளுக்கு மேல தாங்குது.. எப்பவோ வண்டியை விட்டு இறங்கியிருக்க வேண்டிய டிக்கெட்டாச்சே.. அப்படி மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு தோணியிருக்கம்ல.. அதைப் பத்தி சொல்லுங்க” என்று ஒரு புதிய விசாரணையை ஆரம்பித்தார் விசே. 

இதில் பெரும்பாலோனோர் ரம்யாவை நோக்கி கை காட்டினார்கள்.  அவரோ கண்கலங்கி ‘எப்படா சாமி முடிப்பீங்க?’ என்பது மாதிரியே அமர்ந்திருந்தார். “ஆரம்பத்துல ஓப்பனா இருந்து போகப் போக டல்லாயிட்டாங்க” என்று வியானா சொன்னதை பின்னர் வந்தவர்களும் வழிமொழிந்தார்கள். 

ரம்யாவிற்குப் பிறகு அரோராவிற்கு கணிசமான வாக்குகள் விழுந்தது மிகப் பொருத்தம். இந்த சீசனில் அவரது பங்களிப்பு என்பது என்னவென்றே தெரியவில்லை. 

பாரு எழுந்த போது, தனக்கும் விக்ரமிற்குமான பகைமையின் வரலாற்றைப் பற்றி ஆயிரம் வார்த்தைகளில் குறிப்பு வரைந்து கொண்டே போக “இதான்.. உங்க கிட்ட பிரச்சினை… கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்ல மாட்டீங்க. உக்காருங்க” என்று விசே சொல்ல, தனது சேஷ்டையான புன்னகையுடன் அமர்ந்தார். 

சாண்ட்ராவின் முறை வரும் போது ‘ரம்யா, அரோரா, கனி, விக்ரம்.. என்று பெரிய பட்டியலையே சொன்னார். ‘வெளியில் பார்த்த போது பிடித்த ஆட்டக்காரராக இருந்த விக்ரம், உள்ளே வந்து பார்க்கும் போது எதிரியாக மாறி விட்டாராம். 

“சக போட்டியாளரை வெறுப்பேத்தறதுக்கும் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்குக்கும் வித்தியாசமே இவங்களுக்கு தெரியல” என்று விக்ரம் சொன்ன போது பலத்த கைத்தட்டல். கூடவே திவ்யா மற்றும் ரம்யா பெயரைச் சொன்னார் விக்ரம். 

விசே பிரேக்கில் சென்றதும் “பிரஜின்.. என்னைப் பத்தி நீங்க சொன்ன பாயிண்ட் வேலிட்டே இல்ல. மேக்கப் போடறது ஒரு பிரச்னையா.. பிரசண்டபிளா இருக்கணும்னு பிக் பாஸ்தான் சொல்லியிருக்காரு” என்று தனது ஆட்சேபத்தை தெரிவித்தார் வியானா. கேசரி செய்து தந்ததைக் கூட ஒரு பிரச்னையாக சொல்லியிருக்கிறார் பிரஜின். 

கமு்முவின் பக்கத்தில் இடம்பிடித்து அமர்ந்திருந்த பாரு, அவருடன் கிசுகிசுத்துக் கொண்டிருக்க “என்னைப் பத்தி கூட சொன்னாங்க. நான் டிஃபண்ட் பண்ணேனா..?” என்று அரோரா சீறினார். “சும்மா இருந்தா உங்களுக்கு பிரச்சினையா.. இனிமே நானும் கத்துவேன்” என்று சபதம் ஏற்றார் ரம்யா. 


பிரேக் முடிந்து திரும்பிய விசே “நாமினேஷன் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்றீங்க. யார் அப்படியெல்லாம் பண்றது.. அப்படி பண்றதால.. யார் இன்ஃப்ளூயன்ஸ் ஆகி யாரை நாமினேட் பண்றது?” என்கிற கேள்வியை முன்வைத்தார். இப்படி ஓப்பனாக நாமினேட் பற்றி பேசுவது சரியா, தவறா என்பதை அவர் சொல்லவில்லை. 

இதில் சரமாரியாக பெயர்கள் வந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வீட்டில் இருக்கும் இரு அணிகளும் எதிர் அணியில் உள்ள பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதில் ஆவேசமாக செயல்படுகின்றன. இதில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பது செயல்படுவது பாரு தலைமையிலான வம்பு அணிதான். ‘அரோராவை தூக்கியாகணும்’ என்கிற ஆவேசத்தில் இருக்கிறார் பாரு. விக்ரமை வெளியே அனுப்பணும் என்கிற கொலைவெறியில் சாண்ட்ராவும் திவ்யாவும் இருக்கிறார்கள். சாண்ட்ராவிற்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை தனது ஹிட்லிஸ்டில் சோ்த்து வைக்கிறார் பிரஜின்

“நான் யாரையும் அப்படி கவனிக்கலை” என்று அமித் அப்பாவித்தனமாக சொல்ல “கவனிக்கணும் சார். அதை விட வேறென்ன வேலை?” என்றார் விசே. ‘தலைவலி’ திவ்யாவும் இதே காரணத்தைச் சொல்லி ‘சாப்பிட்டுட்டு இருந்தேன்..நான் கவனிக்கலை” என்று கால் பிளேட் பிரியாணியில் டயனோசரை ஒளித்து வைக்க முயன்றார். பாருவின் சதியாலோசனையில் முக்கிய உறுப்பினரே திவ்யாதான். அவருக்கு எப்படி தெரியாமல் போகும்?

‘இங்க க்ரூப்பிஸம் நடக்குதுன்னு புகாரோட வந்தவங்கதான் வைல்ட் கார்ட் எண்ட்ரிஸ். ஆனா இப்ப அவங்களே ஒரு க்ரூப்பா நின்னு குத்தறாங்க” என்று சரியாக சாட்சியம் சொன்னார் சுபிக்ஷா. “அதோட லீடர் யாரு?” என்று விசே கேட்க, துளி கூட சந்தேகம் இல்லாமல் பதில் வந்தது. ‘பாரு’. இது போல் அன்பு கேங்கின் லீடர் கனி என்பதும் பதிவாகியது.  இந்த டாஸ்க்கின் இடையில் காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களையும் வரிசையாக சொன்னார் விசே. கட்டக்கடேசியில் ரம்யாவின் பெயரும் வர, சந்தோஷமா, துக்கமா என்று கண்டறிய முடியாத எக்ஸ்பிரஷனைத் தந்தார் ரம்யா.  இறுதியில் மிஞ்சியவர் பிரஜின் மற்றும் கெமி. “இந்த எவிக்ஷன் பிராசஸை பிக் பாஸ் சொல்லுவார்” என்றபடி பிரேக்கில் சென்றார் விசே. 


கார் விளம்பரத்தை எவிக்ஷனோடு இணைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் இரண்டு கார் வரும். அதில் இருவரும் ஏற்றப்படுவார்கள். திரும்பி வரும் காரில் இருப்பவர் காப்பாற்றப்பட்டார் என்று பொருள். வராதவர் எவிக்ஷன் ஆனார் என்று அர்த்தம். 

அப்போதே கெமி அழ ஆரம்பிக்க “ஒண்ணும்.. ஆகாது.. நீ நல்ல பிளேயர். திரும்பி வந்துடுவ” என்று மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். பிரஜின் தடுமாறாமல் இருந்தாலும் அவரது மனைவியான சாண்ட்ரா அழுது புலம்பி அமர்க்களப்படுத்தி விட்டார். ‘நாம சரியாத்தான் ஆடியிருக்கோம். நான் கண்டிப்பா திரும்பி வருவேன்’ என்று பிரஜின் ஆறுதல் சொன்னாலும் சாண்ட்ரா அழுகையை நிறுத்தவில்லை. 

கார்கள் கிளம்பிய போது சாண்ட்ராவின் புலம்பல் உச்சத்திற்குச் சென்றது. தடுக்க முயன்றவர்களை தள்ளி விட்டு ‘என்னை விடு. நானும் போறேன்’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். 

‘நாங்க ரெண்டு பேரும் தனித்தனியாத்தான் ஆடறோம்’ என்று சொன்னாலும் ஒரு சக ஆட்டக்காரரின் எவிக்ஷனுக்கு சாண்ட்ரா ஏன் இத்தனை உணர்ச்சிவசப்பட வேண்டும். எனில் அந்த ஸ்டேட்மெண்ட் பொய்தானே? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மையாகி விட்டது. 

இது ஒரு கேம். இதில் எவிக்ஷன் என்பது இருக்கும் என்பது நன்றாகவே தெரியும். அந்த எவிக்ஷன் உறுதியாகாத நிலையில், தன் கணவரை தற்காலிமாக பிரிவதற்கு கூட சாண்ட்ராவின் மனம் ஒப்பவில்லை. அழுது புலம்பி துடித்தார். ஆனால் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி தன் கணவர் அபாண்டமாக பேசிய போது தடுக்கவில்லை.

ஒரு கார் ஹார்ன் அடித்தபடி திரும்பி வந்தது. கெமிதான் வருவார் என்று இந்த க்ரூப் நம்பியது. பிரஜின் வன்முறைப் பேச்சு காரணமாக அவர் வர மாட்டார் என்று சாண்ட்ரா உள்ளிட்டவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் திரும்பி வந்தவர் பிரஜின். ‘ஐ யம் பேக்’ என்று பெருமிதத்துடன் வந்தவரை பாய்ந்து சென்று கட்டியணைத்துக் கொண்ட சாண்ட்ரா, அப்படியே பொதேல் என்று மயங்கி விழுந்தார். மற்றவர்களின் உணர்வுகளை மோசமாக காயப்படுத்திப் பேசும் சாண்ட்ரா, இன்னொரு பக்கம் உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருக்கிறார். 


இப்படியொரு ரணகளமான டிராமா ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிளுகிளுப்பான டிராமா ஓடிக் கொண்டிருந்தது. “நீ போயிருந்தா நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று வியானாவிடம் சொல்லிக் கொண்டிருந்த எஃப்ஜே தனது டிராக்கை ஸ்ட்ராங்க் ஆக்கிக் கொண்டிருந்தார். “வெளிய போனவங்கள்ல யாரை மிஸ் பண்றே?” என்று புத்திசாலித்தனமாக கேட்டு போட்டு வாங்க முயன்றார் வியானா. “பிரவீனைத்தான். அவன்தான் போக மாட்டான்னு நெனச்சேன்” என்று எஸ்கேப் ஆனார் எஃப்ஜே. 

மேடைக்கு வந்த கெமியிடம் “நல்லா விளையாடினீங்க.. எப்படி இருந்தது அனுபவம்?” என்று விசே கேட்க “அற்புதமா இருந்தது. வெளில நான் தனியா இருக்கேன். இங்க ஒண்ணா உக்காந்து சாப்பிட. சண்டை போட ஒரு குடும்பம் இருந்தது” என்ற கெமி “என் ஆட்டத்தை நேர்மையா ஆடினேன். யாரையும் கீழே தள்ளி விட்டு மேல வரணும்ன்னு நெனக்கல. பிக் பாஸ் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று கண்கலங்க, தன் கூலிங் கிளாஸை கழற்றி ‘போட்டுக்கங்க” என்று விசே சொன்னது சிறப்பு. 

கிளம்பும் போது கண்ணாடியுடனே இறங்கிய கெமி “உங்க நினைவா வெச்சுக்கட்டுமா?” என்கிற மாதிரி கேட்க ‘வட போச்சே’ என்கிற மாதிரி ஃபீல் செய்த விசே, “ஓகே.. என் பரிசு. உங்களுக்கு புதிய பார்வையை அளிக்கட்டும்’ என்று விடைதந்தார்.  வீட்டிற்குள் சென்ற விசேவிடம் “என்ன சார். கூலிங் கிளாஸ் இல்ல. கெமி பிடுங்கிட்டாளா,” என்று மக்கள் கேட்க “ஆமாம்ப்பா.. அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க. புதுசா வாங்கினது” என்று ஜாலியாக சோகப்பட்ட விசே “இல்லப்பா.. நான்தான் கொடுத்தேன்” என்றார்.  “சார். நான் எவிக்ட் ஆகி வர்றப்ப.. ஒரு நல்ல கண்ணாடியா வாங்கி போட்டுட்டு இருங்க” என்று கம்மு சொல்ல சபை கலகலத்தது. (அப்ப கூட நல்லபடியா ஜெயிப்பேன்னு வாய்ல வருதா பாரு!) “நாளைக்கு உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றபடி விடைபெற்றார் விசே. (என்னவா இருக்கும்.. வைல்ட் கார்டா?!)

விசாரணையின் போது பாருவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கம்மு, இப்போது அரோராவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். “நீ அவ கூடவே இரு. ரெண்டு பக்கம் பேலன்ஸ் பண்ணாத.. உனக்கு அவளைத்தான் பிடிக்கும்ன்னு தெரியும். ‘இங்க சண்டை போட்டு கத்தினாதான் நீடிக்க முடியும்ன்னு ஓப்பனா சொல்றா.. என்னை ஹர்ட் பண்ணவங்களோட பிரெண்டு கிட்டலாம் என்னால ஓப்பனா பழக முடியாது. என் ஷூல இருந்து பாரு” என்று கம்முவிடம் வேண்டிக் கொண்டிருந்தார் அரோரா.

உடனே எழுந்த கம்மு, அரோவின் ஷீவில் ஏறி நின்று ‘ஆமாம்.. கஷ்டமாத்தான் இருக்கு” என்று மொக்கை காமெடி செய்ய “வாய்ல அசிங்கமா வந்துரும். கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத. டைல்ஸ் வெச்சு நான் ஆபாசக் குறியீடு காட்டினேன்னு அபாண்டமா சொன்னவ அவ. அவ கூட சங்காத்தம் வெச்சிருக்கறவங்க யாரும் எனக்கு வேணாம்” என்று கம்முவை துரத்திக் கொண்டிருந்தார் அரோரா. இது ஒரு வகையான உளவியல் நெருக்கடி. ‘ஒண்ணு.. என் கூட இரு. இல்லைன்னா அங்க போ’ என்பதைத்தான் சுற்றிச் சுற்றி அரோரா சொல்கிறார். ஆனால் கம்முவோ ‘கண்ணா.. ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா’ மோடில் அசடு வழிகிறார். 

பிரஜின், திவ்யா, சாண்ட்ரா கூட்டணி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. “நாம பூண்டு உரிச்சு வீடு ஃபுல்லா போட்டதாலதான் பாயிண்ட் கிடைச்சது. நீங்க ரெண்டு பேரும் சோ்ந்து ஆடறது தப்பே கிடையாது” என்று ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் திவ்யா. இவர் இருக்கும் வரை நமக்கு தலைவலியும் நீடிக்கும் போலிருக்கிறது.!

BB Tamil 9: "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல"- பிரஜினிடம் பேசிய ஆரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறி... மேலும் பார்க்க

BB Tamil 9: இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந... மேலும் பார்க்க

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. பிக் பாஸ் சீசன் 9-ல் வ... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர்... மேலும் பார்க்க