BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்
Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் கண்டறியப்பட்ட காபி கொட்டை துளைப்பான் வண்டுகள் தற்போது மீண்டும் தலைதூக்கி வருகின்றன.
அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் காபி கொட்டைகளை தாக்கி சேதம் விளைவிக்கும் இந்த பூச்சிகளால் விவசாயிகள் கலக்கமடைந்து வருகின்றனர்.
வண்டு பரவலை உடனடியாக கட்டுப்படுத்தும் முயற்சியில் தோட்டக்கலை ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காபி கொட்டை துளைப்பான் வண்டுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை ஆய்வாளர்கள்,
“காபி பயிர்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் காபி கொட்டை துளைப்பான் பூச்சிகளை 1990-ஆம் ஆண்டு முதன்முதலில் கூடலூரில் கண்டறியப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட துளைப்பான் பூச்சிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூடலூர் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் தற்போது பரவியுள்ளது.

மிகச் சிறிய வண்டான இது காபி பழத்தினுள் நுழைந்து கொட்டைகளை சேதப்படுத்தி, அதனுள்ளேயே முட்டைகளையும் இடுகின்றது. அதிலிருந்து வெளிவரும் பூச்சிகள் காபி கொட்டைகளை தின்று விளைச்சலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பூச்சி தாக்குதலுக்கு உள்ளான காபி கொட்டைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லக் கூடாது. பழம் சேகரிக்க பயன்படுத்தப்படும் பைகளை நன்றாக புகையூட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்ட கொட்டைகளை கொதிக்கும் நீரில் 2-3 நிமிடங்கள் நனைப்பது வண்டுக்களின் அனைத்து நிலைகளையும் கொல்லும்.

காபி கொட்டைகளை உலர்த்தி சேமிக்கும் போது அதன் ஈரப்பத அளவு குறைவதால் வண்டுகளின் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும். மேலும், அடுக்கு புனல் பொறி மற்றும் பதுங்குக் குழி பொறி போன்ற பொறிகளை அமைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
பிவேரியா பாசியானா என்ற பூஞ்சாண உயிர்கொல்லியை தெளிப்பதும், இயற்கை எதிரிகளான செபலோனோமியா ஸ்டீபன்டாரிக்ஸ் மற்றும் பிமாஸ்டிகஸ் போன்ற ஒட்டுண்ணிகளை காபி தோட்டங்களில் விடுவதன் மூலமும் இந்த வண்டு பரவலை குறைக்க முடியும்” என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.




















