AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்
Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?
Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா?
பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம்.

சிக்கன் கறி, சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்று இன்று பெரும்பாலோரின் பிடித்தமான, மிகவும் பிரியமான உணவாக விளங்குவது சிக்கன். பலரும் பல விதங்களில், பலவிதமான செய்முறைகளில் தங்களது விருப்ப உணவாக இதைச் சாப்பிடுகிறார்கள்.
உணவாகப் பயன்படும் சிக்கனை, மருந்தாகவும் பயன்படுத்தலாம். தாது, தாவர, ஜீவப் பொருள்களை மருந்துகளாகவும் தன்னுள் உள்ளடக்கியதுதான் சித்த மருத்துவம். அந்த வகையில் உடும்பு, நத்தை, ஆமை, கோழி, ஓணான் எனப் பல்வேறு உயிரினங்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
குக்குடம், குருகு, காலாயுதம், வாரணம், ஆண்டலைப்புள் என்று பல பெயர்களில் வழங்கப்படும் கோழியும் மருத்துவப் பயன்களை உடையது தான்.
கோழிக்கறி, கோழி முட்டை, முட்டை ஓடு என அனைத்துமே மருத்துவ குணங்களை உடையவை. கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி என 4 வகைகளாகக் கோழிகள் வகைப்படுத்தப்படுகின்றன.

கோழிக்கறியினால் சுவாசம் அதாவது கபம் (சளி, இருமல்) நீங்கும். கருங்கோழிக் கறியினால் உடலுக்கு வன்மை கிடைக்கும். கருங்கோழி சூரணத்தினாலும் சளி, இருமல் தீரும்.
கானாங்கோழிக்கறியும் கப நோய்களைப் போக்கும். இவ்வாறெல்லாம் சித்த மருத்துவத்தில் சளி, இருமலைப் போக்கும் மருந்தாகக் கோழிக்கறி கூறப்பட்டுள்ளது.
கோழிக்கறி மட்டுமல்ல, கோழி, அதன் முட்டை இவற்றைக் கொண்டு, அண்டத் தைலம், சிற்றண்ட மெழுகு, அண்ட எருக்கஞ் செய்நீர், கருங்கோழிச் சூரணம் போன்ற மருத்துவப் பலன்களை உடைய பல செய்மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன் சூப்பினால் இருமல் குறையும் என்பதும் உண்மைதான். கோழிக்கறியில் இருக்கும் அமினோ அமிலம், சளியைக் குறைக்கவல்லது என்று தான் நவீன மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன.
Jewish Penicillin என்று அழைக்கப்படும் சிக்கன் சூப்பை, பலரும் பல விதங்களில் தயாரிக்கிறார்கள். சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த மூலிகைகள் அனைத்துமே இருமலைப் போக்கக்கூடியவையாகவும், உடலின் வன்மையைப் பெருக்கக் கூடியவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.
எனவே, சிக்கன் சூப் குடித்தால் இருமல் தணியும். ஆனால், இருமலைத் தணிக்க சிக்கன் சூப் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை.

இப்படி சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் மூலிகைகள் இருமலைப் போக்கக்கூடிய தன்மை உடையவையாக இருக்கும்போது, அந்த மூலிகைகளையே நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், கோழிக்கறி உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, நோயாளிகள் குறிப்பாக, சரும நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது.
தவிர, பறவைகளின் மூலம் அதிலும் கோழிகளின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, உயிரினங்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
எனவே, இருமலுக்கு சிக்கன் சூப் தான் மருந்து என்று இல்லாமல், மகத்தான பயனுள்ள, அருமையான மூலிகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, பலன் பெறலாம். ‘மூலிகைகளால் முதல் மருத்துவம்’ என்பதுதான் சித்தர்களின் கோட்பாடு. அதை உணர்ந்து பின்பற்றுவோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















