"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை...
Doctor Vikatan: 'மாத்திரை போட்டேனா, இல்லையா' - மறந்துவிட்டால் அப்படியே விடுவதா, மறுபடி போடலாமா?
Doctor Vikatan: ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்து வருகிறேன். சில நாள்கள் மாத்திரை சாப்பிட்டேனா, இல்லையா என்பது மறந்துவிடுகிறது.
இந்நிலையில், அந்த வேளை மாத்திரை எடுப்பதைத் தவிர்ப்பது சரியா அல்லது இன்னொரு மாத்திரை எடுத்துக்கொள்வது சரியா... மாத்திரை போடாமல் விடுவதால் வரும் ஆபத்து.... கூடுதலாகப் போடுவதால் வரும் ஆபத்து... இரண்டில் எதில் ரிஸ்க் குறைவு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

வாரம் வாரம் மாத்திரைகளை எண்ணி வைத்துக்கொள்வது அல்லது முதல் நாள் மாத்திரையைத் தனியாக எடுத்து வைப்பது இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். 7 நாள்களுக்குத் தேவையான மாத்திரைகளைத் தனியாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டு, ஞாயிறு முதல் சனி வரை என்று கணக்கு வைத்துக்கொண்டால் இந்தக் குழப்பம் வராது. மீதம் இருக்கும் நாள்கள் மற்றும் மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்துச் சரியாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு மாதத்திற்கான மாத்திரைகளைச் சரியாக எடுத்து வைப்பதும் எத்தனை மாத்திரைகள் உள்ளன என்பதை எளிதாகப் பார்க்க உதவும். பில் ஆர்கனைசர் பாக்ஸ் கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக்கொண்டால், ஒரு வாரத்துக்கான மாத்திரைகளை, காலை, மதியம், இரவு என வேளைக்கேற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
மாத்திரை சாப்பிட்டோமா, இல்லையா என்பதே தெரியாமல் இருமுறை உட்கொள்வது மிகத் தவறானதாகும். சர்க்கரை மாத்திரையைத் தவறுதலாக இரண்டாவது முறை எடுத்துக்கொண்டால், அது ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia) எனப்படும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
இது அவசர சிகிச்சைக்காக (Emergency) மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ அல்லது ஹைப்போகிளைசீமிக் கோமா (Hypoglycemic Coma) எனப்படும் சர்க்கரை குறைபாட்டால் மூளையில் ஏற்படும் கோமா நிலைக்குக் கொண்டுசெல்லவோ வாய்ப்புள்ளது.
எனவே, இரண்டாவது மாத்திரையைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மாத்திரை போடாவிட்டால் ஏற்படும் ஹைப்பர்கிளைசீமியா (Hyperglycemia) அதாவது, சர்க்கரை அதிகரிப்பு கூட பெரிய தவறில்லை. ஆனால், அளவுக்கு அதிகமாகக் குறைவது மிகவும் ஆபத்தானது.

ரத்த அழுத்த மாத்திரையைப் பொறுத்தவரை, ஒரு மாத்திரைக்குப் பதில் கூடுதலாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் மிக அதிகமாகக் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. தவிர்க்க முடியாத சூழலில், ரத்த அழுத்தம் அதிகரிப்பது போல உணரும்போது, இந்தக் குழப்பம் ஏற்பட்டால் மாத்திரையைப் போடாமல் விடுவதைவிட மற்றொரு மாத்திரை எடுப்பது தவறில்லை என்றாலும், கவனம் அவசியம்.
வயதானவர்கள், இளைஞர்கள் அல்லது தங்களின் மகன், மகள், பேரன், பேத்திகளின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். 7 நாள்களுக்கு ஒருமுறை மாத்திரைகளை வெட்டித் தனியாகப் பிரித்து வைக்கச் சொல்லலாம். மேலும், 'நான் மாத்திரை போட்டேனா இல்லையா?' என்பதை அவர்களிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொள்வதும் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க ஒரு நல்ல வழியாகும்.
டாக்டர் அருணாசலம்:
32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார்.
பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















