``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசா...
ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அச்சமயத்தில் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்தும், வேனும் எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உயிரிழந்தனர். அதே சமயம் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்பது குறித்து காவல்துறையின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் மோதி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
















