Miracle Baby: இத்தாலி கிராமம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள குழந்தை; இதுவரை...
'HELP IS ON ITS WAY' - ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?
ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்... செய்துகொண்டிருக்கிறார்.
நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் அமெரிக்கா 25 சதவிகிதம் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
முன்னர், ஈரான் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அது இதுவரை காணாத விளைவுகளைச் சந்திக்கும் என்று வேறு எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தான், ஈரான் போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.

ட்ரம்ப் பதிவு
நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
"ஈரான் நாட்டுப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய அமைப்பைக் கையிலெடுங்கள்.
போராட்டக்காரர்களை கொல்பவர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும்.
போராட்டக்காரர்களைக் கொல்லும் இந்த அறிவில்லாத கொலைகள் முடியும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் நடக்கும் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டேன்.
உதவி உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் தாக்குதலா?
ஏற்கெனவே, ஈரான் மீது கடும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். 'HELP IS ON ITS WAY' என்று அவர் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், மீண்டும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்கிற கேள்வி எழுகிறது.
காரணம், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட போது, தன் பங்கிற்கு, அமெரிக்காவும் ஈரானில் தாக்குதலை நடத்தியது.
















