செய்திகள் :

கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01

post image

கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.

அண்மையில் வெளியான பிகார் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் மகளிருக்கு கொடுக்கப்பட்ட ரூ.10,000 நிதியுதவி ‘வியூகம்’ கவனம் பெற்றுள்ளது. தேர்தல்கள் என்றாலே நலத்திட்ட வாக்குறுதிகளும், மின்சார யூனிட் இலவசம் தொடங்கி மிக்ஸி, கிரைண்டர் இலவசம் வரைக்கும் வியூகங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், 1950-களில் சீறிய தொலைநோக்குப் பார்வையுடன் கல்வியை ஒரு தேர்தல் ஆயுதமாக காமராஜர் பயன்படுத்தியது, தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளக்கூடிய ‘வாவ்’ வியூகம் எனலாம். அதனால்தான் அவரது பிறந்த நாள் (ஜூலை 15) ‘கல்வி வளர்ச்சி தினம்’ ஆக கொண்டாடப்படுகிறது.

காமராஜர்

என்ன செய்தார் காமராஜர்?

காமராஜர் என்றவுடன் எல்லோருக்கும் ஃப்ளாஷாகும் விஷயம், இலவச மதிய உணவு திட்டம்தான். ஆனால் அதையும் தாண்டி 6 - 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை சாதனையளவில் உயர்த்தினார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர் தனது ஆட்சிக் காலத்தில், 3 மைல் தொலைவுக்கு ஒரு நடுநிலைப் பள்ளி, 5 மைல் தொலைவுக்கு ஓர் உயர் நிலைப் பள்ளி என்று செயல்படுத்தத் தொடங்கிய திட்டத்தால் 1954 முதல் 57 வரையிலான காலக்கட்டத்தில் தொட்டக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. 6 - 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 45 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்தது. அதேபோல் 1951 முதல் 1962 வரையிலான காலக்கட்டத்தில் உயர் நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 637-ல் இருந்து 1995 ஆக உயர்ந்தது.

‘கல்விக்காக குழு அமைத்த கல்வித் தந்தை’ என்று மெச்சினாலும் அதை மிகையன்று என்பதுபோல், ‘கட்டாய இலவசக் கல்வி’ வழங்குவது தொடர்பாக குழு அமைத்து அறிவுரை பெற்று அதை செயல்படுத்தியவர்தான் காமராஜர்!

எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினால் நாடு முன்னேறும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்த தலைவர் காமராஜர்.

எல்லோருக்கும் எதற்கு கல்வி என்று 6,000 பள்ளிகளை மூடி, குலக்கல்வியை ஊக்குவித்த அரசியல் தலைவர்கள் மத்தியில், 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதல்வராக தான் நீடித்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் எல்லோருக்கும் கல்வி அவசியம் என்பதை பாமர மக்களுக்கும் எடுத்துச் சென்றவர் காமராஜர்.

அரசியல் கட்சி என்றால் மாநாடு இல்லாமாலா? புதிதாய் முளைக்கும் கட்சிகள்கூட பிரம்மாண்ட மாநாடுகள் நடத்தி மாஸ் காட்டுவது இந்தக் காலம். ஆனால், காமராஜர் காலங்களில் மாநிலம் முழுவதும் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1958 பிப்ரவரி 20-ல் கடம்பத்தூரில் முதல் மாநாடு நடைபெற்றது. 1958-ல் அவர் ஆட்சி தொடங்கி 1963 வரை 150-க்கும் மேற்பட்ட கல்வி வளர்ச்சி மாநாடுகளை நடத்தி ரூ.60 கோடிக்கும் மேலாக பள்ளி வளர்ச்சி நிதி திரட்டினார்.

ஒரு சாமானியனின் சமூகப், பொருளாதார அந்தஸ்தை உயர்த்த கல்வியைவிட சிறந்த நலத்திட்டம் இருக்க இயலாது என்பதை உணர்ந்து செயல்பட்டவர் காமராஜர். அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளையும் காமராஜர் ஊக்குவித்தார். நாமெல்லோரும் விதந்தோதும் ‘இலவச மதிய உணவுத் திட்டம்’ அவருடைய கல்வி வளர்ச்சிப் பணிகளின் மணி மகுடம்.

காமராஜர்

அதேபோல் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏழை, பணக்காரர் இடையேயான ஏற்றத்தாழ்வைக் குறைக்க இலவச சீருடைத் திட்டத்தையும் கொண்டு வந்தார். பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறை நாட்களைக் குறைத்தது, ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பிஎஃப், பென்ஷன், காப்பீடு என சலுகைகளை அறிவித்தது என அவர் வகுத்த வியூகங்கள் அவர் சந்தித்த தேர்தல் முடிவுகளில் வாவ் வியூகங்களாக கைமேல் பலனோடு பிரதிபலித்தன. பள்ளிக் கல்வியில் தனது இலக்குகளை சாத்தியப்படுத்தியோடு நின்றுவிடாமல் கலைக் கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகளையும் உருவாக்கினார்.

காமராஜரின் கல்விப் பணிகள் பள்ளிக்கல்வியில் ஒரு மைல்கல் என்றால், கருணாநிதியின் கல்விப் பணிகள் அதற்கு இன்னொரு வீச்சைக் கொடுத்தது. அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வர் பொறுப்பை ஏற்ற பின்னர் எல்லோருக்கும் கல்வி என்பதோடு பெண் கல்வி அவசியம் என்பதையும் கையிலெடுத்தார். கல்வியில் சமத்துவம், சமூக நீதிக்காக போராடி அவர் வென்றெடுத்தவை ஏராளம்.

அவற்றைப் பட்டியலிட்டால் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரையாவது பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த பெண்கள் திருமண வயதுக்கு வந்த பிறகு திருமணத்துக்கான உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தை முதலில் குறிப்பிடலாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் பெண்கள் சேர்க்கை விகிதத்தை கணிசமாக அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

அதுமட்டுமல்லாது தமிழ் வழிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததார். தமிழைப் பயிற்சி மொழியாக்குவதில் அதீத கவனம் செலுத்தினார். அரசுக் கல்லூரிகளில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், தனியார் கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் திட்டத்தை ஊக்குவிக்க தமிழைப் பயிற்று மொழியாக ஏற்றுப் படிப்போருக்குச் சில சலுகைகள் வழங்கினார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 1999 -2000 கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளி பாடப் பிரிவில் கணினிப் பாடத்தை தொடங்கினார்.

மனப்பாட முறையை ஒழிக்க, மாநிலத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை செயல்வழிக் கற்றல் முறையை 2007-2008 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தினார். பின்னர் அது எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கப்பட்டது.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுத ஆங்கில மொழிக் கூடங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன என்று பட்டியல் நீளும். பள்ளிக் கல்விக்கெனத் தனி அமைச்சரை நியமித்ததே கருணாநிதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாய், தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளி மாணவருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம், பத்தாம் வகுப்பு இறுதியில் ஒரே தேர்வு என்ற ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

பெண் கல்வி, தமிழ்வழிக் கல்வி, கணினிக் கல்வி, சமச்சீர் கல்வி என்று கருணாநிதி கல்விக்காக செய்த பணிகள் எல்லாமே இளைஞர் பட்டாளத்தை திமுகவின் பக்கம் ஈர்த்தது. அதுவும், கல்வி இடஒதுக்கீடு கொள்கையில் பல்வேறு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

கல்வி

பிசி இடஒதுக்கீட்டை உயர்த்தியது, 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தது, உள்ஒதுக்கீடுகள் மற்றும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியது என்ற தொலைநோக்குப் பார்வையால் இயக்கத்துக்கும் இளைஞர் படை வலுவை சேர்த்துக் கொண்டிருந்தார். கருணாநிதியின் கல்விக்கான வியூகங்கள் ஒவ்வொன்றுமே தேர்தலுக்கான ‘வாவ் வியூகங்கள்’ தான்.

தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருமே பாரபட்சமின்றி கல்வி வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதில்லை. அதுதான் இன்று உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் உயர்ந்து நிற்கக் காரணம். அந்த வகையில் அதிமுகவின் கல்விப் பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்கள் ஆரோக்கியத்துக்காக முட்டை சேர்த்து சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் எம்ஜிஆர். உயர் கல்வியைப் பொறுத்தவரை அவரது பங்களிப்பு புதிய கதவுகளை தமிழகத்துக்கு திறந்து வைத்தது எனலாம்.

பியுசி முறையை ஒழித்தது இதில் முக்கியமானது, 10-ம் வகுப்பு வரை கல்வியை முடித்துவிட்டாலும் 11 படிக்க, அதன் பின்னர் கல்லூரி படிக்க நகரத்துக்கே செல்ல வேண்டும். இதனால் உயர் கல்வி அனைவருக்கும் சாத்தியமாகவில்லை. இதனையடுத்தே, 1978ஆம் ஆண்டு பிளஸ் 2 கல்வி முறையை எம்ஜிஆர் கொண்டு வந்தார்.

எம்.ஜி.ஆர்

அதாவது 10, +2, +3 (கல்லூரி) கல்வி முறையை எம்ஜிஆர் கொண்டு வந்து நகரத்தில் படித்த PUC கல்வியை அவரவர் சொந்த கிராமத்தில் கிடைக்க வைத்தார். இது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 10-வதுக்குப் பின்னர் பெண் கல்வியும் பரவலாக சாத்தியமானது.

தமிழகத்தில் அதிகளவிலான கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை திறக்க வழிவகுத்தவர் எம்ஜிஆர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆண் / பெண் என்று தனித்தனியாக இல்லாமல் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் ஆண் / பெண் இருபாலரும் சேர வழிவகுத்தார்.

1980-களில் உயர்கல்வி முடித்தவர்கள் இன்று 50+ வயதில் இருக்கும் தலைமுறையினர். உயர் கல்வியால் அவர்கள் பெற்ற பலன்கள் கணிசமாக அதிமுக அபிமானிகளைப் பெற வழிவகுத்தது என்று கொள்ளலாம்.

ஜெயலலிதா!

அதேபோல், கல்வியை அரசியல் ஆயுதமாக மட்டுமின்றி, அக்கறையுடனும் மிகச் சிறப்பாக பயன்படுத்திய ஆளுமைகளுள் முக்கியமானவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தைக் கவனிக்கும் முதல் பொறுப்பைப் பெற்ற அவர், உத்வேகத்துடன் செயல்பட்டு அந்தப் பணியை சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தின் கல்வி நிலையை மேம்படுத்தியும் கவனிக்கத்தக்கது. அந்த வகையில் பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள், மாணவர்களுக்கு இலவச காலணிகள், கல்வி உபகரணங்கள், இலவச சைக்கிள் திட்டம், விலையில்லா பாடப் புத்தக்கங்கள் தொடங்கி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வரை அவர் செய்த கல்விப் புரட்சியும் பொதுவான வாக்காளர்களை வசீகரித்தது நினைவுகூரத்தக்கது.

அதிமுகவின் முந்தைய ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. இதை இன்றளவும், இபிஎஸ் அரசியல் மேடைகளில் மார்தட்டி சுட்டிக் காட்டுகிறார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து, படிப்புக்கான முழு செலவையும் ஏற்பதாக அதிமுக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தால், 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேரும், 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2025-26-ல் 496 எம்பிபிஎஸ், 126 பிடிஎஸ் இடங்கள் என 622 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளன.

மதுரை அதிமுக பொன்விழா மாநாடு

அதிமுகவின் இந்த வியூகம் நிச்சயமாக தேர்தலில் ஒலித்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அது பலிக்காமல் போனதால் அதை ‘வாவ் வியூகம்’ அல்ல என்று சொல்லிவிட முடியாது. நீட் விலக்கு இந்த ஆட்சியில் வாக்குறுதியாகவே இருப்பதால், 7.5% உள் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த நாங்கள் நீட் விலக்கையும் பெறுவோம் என்ற வலுவான வாதத்தை முன்வைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனலாம்.

தேர்தலுக்காக வாக்குறுதிகள் என்று அரசியல் கட்சிகள் பல திட்டங்களைப் பட்டியலிடலாம், அவற்றில் சில கவர்ச்சிகரமானதாகவும் இருக்கலாம். ஆனால் கல்வி வளர்ச்சித் திட்டங்களை வாக்குறுதிகளாக அளிக்கும்போதும், சொன்னதை செயல்படுத்தும்போதும் அது கட்சிகளுக்கு நிரந்தர வாக்கு வங்கியாக மாறும், ஏனெனில் சலுகைகளை அனுபவித்து வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்குத் தெரியும் அது தங்களது அடுத்த சந்ததியினருக்கு என்ன மாதிரியான தாக்கத்தைத் தரப் போகிறது என்று.

அதனால்தான் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் என்பது நீண்ட கால வாவ் வியூகங்களாக இருக்கின்றன. அன்று காமராஜர் செய்தார், கலைஞர் செய்தார், எம்ஜிஆர் செய்தார் என்று இன்றும் அக்கட்சிகளின் இளவல்கள், அடுத்த வாரிசுகள் பெருமிதமாகச் சொல்கின்றனர்.

கல்வி
கல்வி

அப்படித்தான் தனது தந்தை செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய தான் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றியும் விழாவெடுத்து பறைசாற்றினார் முதல்வர் ஸ்டாலின். அண்மையில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வில் கல்விக்கு திமுக அரசு வகுத்து வழங்கிய திட்டங்களால் பயன் பெற்றவர்கள் சாட்சியாக வந்திருந்தனர்.

காலை உணவு திட்டத்தில் 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளுடைய வருகைப் பதிவேடு மேம்பட்டு, அவர்கள் தினசரி பள்ளிக்கு வருகின்றனர். படிப்புத் திறன் மேம்பட்டுள்ளதுடன், பெற்றோரின் சிரமங்கள் குறைந்துள்ளது என்கிறது அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள்.

அதேபோல், 2023-ல் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தால், 12-ம் வகுப்பு முடித்து 75 சதவீதம் பேர் உயர் கல்வியில் சேர்கின்றனர். இதுவரை 5.29 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதேபோல், கடந்த 2024-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 3.92 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள் என்று அரசு விழாவில் எடுத்துச் சொல்லப்பட்டது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு
கல்வியில் சிறந்த தமிழ்நாடு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடைகின்றனர். திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) திட்டம் வகுப்பறையில் ஒரு புதுமையைப் புகுத்துகிறது என்றெல்லாம் ஆளும் அரசு பெருமித அடையாளங்களாகச் சொல்கிறது.

கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்புக்கான தகுதியை ஒருவர் பெறுவதற்கான தகுதியைத் தருவது மட்டுமல்ல, சமூக நலனுக்கு பங்களிக்கக் கூடியவராக ஒருவர் தன்னை செதுக்கிக் கொள்ளும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்கிறது திமுக.

கல்வியில் சமத்துவம், சமூக நீதி என்பதையே தனது கோட்பாடாக முன்வைக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதே தனது இலக்கு என்றும் முழங்குகிறது.

ஐரோப்பிய நாடுகள் பல பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்குகின்றன. சில நாடுகள் உயர் கல்வியையும் இலவசமாக வழங்குகின்றன. அந்த வழியில் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அரசு செலவில் சமத்துவத்தோடு கிடைக்குமென்று ஒரு வாக்குறுதி முன்வைக்கப்பட்டால் அது கல்வியில் நிச்சயமாக ஒரு முன்மாதிரி `வாவ்’ வியூகமாக அமையும்.!

(தொடரும்)

அடுத்த வாரம்: `அனுதாப அலை'

குடும்பத்தைவிட்டு பிரிந்த தேஜ் பிரதாப் தந்தை லாலு, சகோதரன் தேஜஸ்வியுடன் சந்திப்பு! - என்ன காரணம்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது சகோதரனுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றார். அதோடு தனிக்கட்சி ஆரம்ப... மேலும் பார்க்க