செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்: 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் தரும் அப...
JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
"திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்" என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"2021 சட்டமன்றத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை.
ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கண்ணீரோடு போராடி வருகின்றார்கள்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்மொழி தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை திமுக அளித்த வாக்குறுதியின்படி முதல்வர் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்து கொள்வோம்.
பகுதிநேர ஆசிரியர்கள் இந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாக வேலை செய்கின்ற நிலையில் மே மாத ஊதியம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கவில்லை.
இந்த நிலையில் இந்தக் கால விலைவாசி உயர்வில் தற்போதைய ரூபாய் 12,500 சம்பளத்தில் குடும்பங்களின் அடிப்படை தேவைகளைச் செய்துகொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
காலமுறை சம்பளம் வழங்கினால் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். எஞ்சிய காலத்தில் நல்லபடியாக வாழ முடியும். எனவே முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களின் கஷ்டங்களைப் பார்த்து திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதை புத்தாண்டு அறிவிப்பாக இனிப்பு செய்தியாக ஒரு விடியலாக முதல்வர் அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
















