செய்திகள் :

Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்?

post image
கொலை செய்யும் சீரியல் கில்லரை காவல் அதிகாரி தண்டிப்பதே மம்மூட்டி, விநாயகன் நடித்திருக்கும் இந்த மல்லுவுட் படைப்பின் ஒன்லைன்.

நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்டீபன் தாஸ் (மம்மூட்டி). காதல் ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி கொலை செய்யும் சைக்கோ குணம் படைத்த கொடூர வில்லனாகவும் இருக்கிறார்.

ஒரு சாதிய கலவரத்தை விசாரிக்க இடமாற்றம் செய்யப்பட்டு களத்திற்குள் வருகிறார் ஜெயகிருஷ்ணன் (விநாயகன்). அந்த சாதிக் கலவரத்திற்குக் காரணமானவர் ஒரு பெண் குற்றவாளிதான் என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார்.

Kalamkaval Review
Kalamkaval Review

ஆனால், அந்தப் பெண் காணாமல் போன தகவல் அறியும் ஜெயகிருஷ்ணன் அதனைப் பின்தொடர்ந்து விசாரிக்கும்போது அவரைப் போலப் பல பெண்கள் காணாமல் போயிருக்கும் தகவல் தெரியவருகிறது.

காணாமல் போன பெண்களுக்கு என்ன ஆனது, அவர்கள் யார், எதற்காக, எப்படிக் கடத்தப்பட்டார்கள் என்பதை ஜெயகிருஷ்ணனின் விசாரணைப் பார்வையிலிருந்து த்ரில்லர் கதையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் கே ஜோஷ்.

வீட்டார் முன்பு சாந்தமானவராக இருக்கும் ஸ்டீபன், சட்டென 'அந்நியன்' மோடு ஆன் செய்து கொடூர வில்லனாக நடித்து, நம் வெறுப்பை சூட்கேஸ் நிறையச் சம்பாதித்துக்கொள்கிறார்.

வட்டமாகப் புகைக்கும் காட்சி, அந்த சிகரெட்டை மென்று துப்பும் இடம் என தன்னுடைய வழக்கமான ஸ்டைல் + நக்கல் தொனியில் வில்லனிசத்தை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார். அதிலும் அந்தச் சிரிப்பு, அச்சுறுத்தல்! ‘இப்படியான தோற்றத்தில் உங்களைப் பார்ப்போம்னு ஸ்வப்னத்திலும் கண்டதில்லை மம்மூகா!’

பண்புடன் குடும்பஸ்தன் முகம் காட்டும் விநாயகன், முதிர்ச்சியுடன் வழக்குகளைக் கையாளும் இடங்களில் இஸ்த்ரி போட்ட சட்டையைப் போல இறுக்கம் காட்டி க்ளாப்ஸ் வாங்குகிறார்.

Kalamkaval Review
Kalamkaval Review

அவருக்கெனப் பிரத்யேகமாக கொடுக்கப்படும் சேட்டைப் பிடித்த கறார் நடிப்பு டோனிலிருந்து விலகி இந்தக் கதாபாத்திரத்திற்கு மனதில் ஆழப் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார்.

விநாயகனின் விசாரணைக்கு உதவும் ஜிபின் கோபிநாத் நடிப்பில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் தமிழராக வரும் நடிகை ரஜிஷா விஜயன், இந்தக் கதை கோரும் பதற்றத்தை முகத்தில் அளவாகத் தந்து வெற்றிக் கோட்டைத் தொடுகிறார். ஆனால், அந்தப் பதற்றம் தமிழ் உச்சரிப்பிலும் தொடர்வது ஏனோ?!

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியின் நிலவமைப்பைத் திரைச் சட்டகத்திற்குள் காட்சிப்படுத்திய முறையும், கதாபாத்திரங்கள் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைத்த பளிச்சிடும் லைட்டிங்கும் ஒளிப்பதிவாளர் ஃபைசல் அலியின் கைவண்ணங்கள்!

சீட் எட்ஜ் த்ரில்லர் வடிவ கதையாகக் கோத்த வகையிலும், பல பெண்களை ஸ்டீபன் ஏமாற்றிய கதைகளை அடுத்தடுத்து 'மேட்ச் கட்' செய்து சொன்ன விதத்திலும் ஈர்க்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் பிரபாகர், ஆரம்பக் காட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதானத்தைக் கொடுக்காமல், தொடக்கத்திலேயே உயரப் பறக்கிறார்.

Kalamkaval Review
Kalamkaval Review

2005-ம் ஆண்டைக் காட்சிப்படுத்த கலை இயக்குநர் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்பட போஸ்டர், அப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், வண்டிகள் என அமைத்த விஷயங்கள் நம்மையும் டைம் டிராவல் செய்ய வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் முஜிப் மஜீத் பின்னணி இசையால் வால்யூம் பொத்தானை முழுவதுமாகத் திருகித் த்ரில் உணர்வைப் பன்மடங்குக் கூட்டுகிறார். அதுவும், அந்த அச்சமூட்டும் ஸ்பெஷல் சத்தத்தில் உள்ளுக்குள் நடுக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சீரியல் கில்லர் சைனைடு மோகனை மையப்படுத்தி மம்மூட்டியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு சாப்டர்களாகப் பிரித்து, அதற்கெனத் தலைப்பிட்டுக் கதையை விவரிக்கிறது இந்தத் திரைப்படம். தொடக்கத்திலேயே படத்தின் முக்கிய ட்விஸ்டை உடைத்துவிடுவதால் ஏமாற்ற மனநிலைக்குத் திரும்பும் பார்வையாளர்களை இறுக்கப் பிடித்துப் புதியதோர் வழியில் த்ரில்லர் கதையைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்கிறார் இயக்குநர் ஜிதின் கே ஜோஷ்.

அந்த அளவினையும் எங்கும் கீழிறங்க விடாமல் கவனித்துக்கொண்டு எழுத்தாளராக வென்றிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜிதின் கே ஜோஷ் - ஜிஷ்னு ஶ்ரீகுமார்.

குற்றவாளியைக் கண்டறிய, வழக்கமான விசாரணைப் பாதையைத் தேர்வு செய்யாமல் முதற் பாதியின் முடிவில் புதிய ரூட்டிற்கு மாற்றியிருப்பது ‘வாவ்’ சொல்ல வைப்பதோடு, அடிப்பொலி இடைவெளி காட்சியாகவும் மாறியிருக்கிறது.

Kalamkaval Review
Kalamkaval Review

ஆனால், ஜெட் வேகத்திற்கு இணையாகப் பறக்கும் தொடக்க விசாரணைக் காட்சிகளை இன்னும் கொஞ்சமேனும் நிதானத்துடன் தெளிவாக விளக்கியிருக்கலாம்.

விசாரணைக்காக ஒரு பெண்ணைத் தேடிச் செல்லும் ஜெயகிருஷ்ணன், அங்கிருந்து எப்படி அந்தப் பெண்ணைப் போலவே காணாமல் போன மற்றப் பெண்கள் குறித்துத் தெரிந்துகொள்கிறார் என்பதில் போதிய விவரங்கள் இல்லாதது மைனஸ்! இத்தனை கொடூரச் செயலை நிகழ்த்தும் மம்மூகாவுக்கு அடர்த்தியான பின் கதையைச் சொல்லாமல், மூடி மறைத்திருப்பதும் ஏமாற்றமே.

இரண்டாம் பாதியில் விசாரணை களத்தைத் துரிதப்படுத்திச் சொல்லாதது நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாகத்திற்கு லீட் எடுத்த விதமும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வெயிட்டிங் சேட்டா!

மம்மூட்டியின் அச்சமூட்டும் வில்லனிசம் தொடங்கி நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பு, த்ரில்லர் கதைக்குத் தேர்வு செய்த புதியதோர் களம் என இந்த ‘களம்காவல்’ மலையாளத்திலிருந்து கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறந்த த்ரில்லர் படைப்பு.

"அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர்" - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மத... மேலும் பார்க்க

Kalamkaval: "ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!"- நடிகர் மம்மூட்டி

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’.இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கி... மேலும் பார்க்க

Kalamkaval: "சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம்" - நடிகர் விநாயகன்

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்க... மேலும் பார்க்க

Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி

உடல்நலப் பிரச்னைகளிலிருந்து குணமாகி தற்போது படப்பிடிப்புகளிலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார் மம்மூட்டி. சமீபத்தில் கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வு ஒன்றில் மம்மூட்டி கலந்து கொண்டிருக... மேலும் பார்க்க

'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை. மோகன்லாலை நேரில் சந்திக்க வேண... மேலும் பார்க்க

Suresh Gopi: "அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது!" - சுரேஷ் கோபி

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை அடுக்கியவர் நடிகர் சுரேஷ் கோபி. அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எவையும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை. இது குறித்து அவரும் சமீபத்தில் மனோரமா ஊடக... மேலும் பார்க்க