Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்-சுபா தம்பதி 6 மாதங்களுக்கு முன் பிறந்த தங்களது ஆண் குழந்த்கைக்கு காது குத்துவதற்காக பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
குழந்தையின் இரண்டு காது மடல்களிலும் மருத்துவர் அனஸ்தீசியா (Anesthesia) செலுத்திய பிறகு குழந்தை மயக்கமடைந்துள்ளது.
காது குத்தும்போது குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். குழந்தை நீண்டநேரம் சுயநினைவை இழந்திருந்ததால் உடனடியாக குழந்தையை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், ஊசி போட்ட மருத்துவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோருகின்றனர். குழந்தையை இழந்த பெற்றோருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தாலுகா சுகாதார அதிகாரி அலீம் பாஷா, "பணியிலிருந்த மருத்துவர் காது குத்தும்போது குழந்தைக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுத்துள்ளார். குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதால் குழந்தை மரணமடைந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.
மேலும், "குழந்தையின் இறப்புக்கான உண்மைக் காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும். மருத்துவர் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றும் தெரிவித்துள்ளார்.