BB Tamil 9: "யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா!" - வாக்குவாதத்தில் வியா...
Nelson: "விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார்" - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார்.
அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.
அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம்.
இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நெல்சன், "தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க.
அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு.
பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. 'நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது'னு கேட்டேன். 'ஆமா, நல்லா இருந்ததா'னு கேட்டாரு.
பிறகொரு நாள் தனியாக அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. காலேஜ் டைம் மாற்றச் சொல்லி அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு.
நாங்களெல்லாம் மேல நின்னு 'ச்சீ மேல வா'னு கலாய்ச்சிட்டு இருந்தோம். பிறகு அவர் பக்கத்துல உட்கார கூடாதுனு பென்ச் மாறி உட்கார்ந்துட்டேன்.
செமஸ்டர் எக்ஸாம் முடிவுகள் வந்திருந்த நேரத்துல நாங்க ரிசல்ட் பார்த்துட்டு இருந்தோம்.
அதுக்கும் சினிஷ் லேட்டாகத்தான் வந்தாரு. எங்களுடைய இன்னொரு நண்பன் சினிஷ் ரிசல்ட் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவர்கிட்ட 'நீ ஃபெயில்'னு சொல்லிட்டான்.
சினிஷும் உண்மையாகவே அவர் ஃபெயிலாகிட்டதாக நினைச்சு அடுத்தடுத்து அதே பரிட்சையை அரியர் எழுதிட்டு இருந்தாரு.
ரொம்ப நாளைக்குப் பிறகுதான் முதல் எக்ஸாம்லேயே அவர் பாஸ் ஆகிட்டார்ங்கிற விஷயம் அவருக்கே தெரிய வந்தது. இப்போ புரொடக்ஷன் பண்ணிட்டு இருக்காரு.

'பார்கிங்' படத்துடைய அக்ரிமென்ட்ல 'இந்தப் படத்துக்கு எந்த விருது கிடைச்சாலும் அது எனக்குத்தான்'னு போட்டுடாரு. (பார்கிங் படத்தை பாஷன் ஸ்டூடியோவுடன் இணைத்து சினிஷ் தயாரித்தார்) தேசிய விருது வாங்கின பிறகு ரொம்பவே தன்மையாக என்கிட்ட வந்து பேசினாரு.
அதுக்கு முன்னாடி அவர் அப்படி பேசினதே கிடையாது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு வெளிநாட்டுல இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்காங்க.
உள்ளூர்ல இருந்து யாருமே வரல பார்த்தீங்களா! (சிரித்துக் கொண்டே...) இந்தப் படங்கள் இரண்டும் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகள்" எனக் கலகலப்புடன் பேசினார்.



















