``ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு...
NZ v IND : "மெகா சேஸிங்கை எளிதாக்கியது அதுதான்.!" - வெற்றி ரகசியத்தை உடைத்த ஸ்ரேயாஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழிவும் தங்களது சேஸிங்கிற்கு பெரிதும் உதவியதாக வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆடுகளத்தின் தன்மையை மாற்றிய பனி!
வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "ஆரம்பத்தில் நாங்கள் பந்துவீசத் தொடங்கியபோது பிட்ச் சற்று மெதுவாக இருந்தது. பந்து நின்று வந்தது. நாங்கள் அடிக்க வேண்டிய ஹார்ட் லென்த்தை விட, சற்று முன்னால் பந்துவீசிவிட்டோம். ஆனால் ஆட்ட நேரம் போக போக , பனிப்பொழிவு வரத் தொடங்கியது. இதனால் ஆடுகளம் தட்டையாகி, பந்து பேட்டிற்கு நன்றாக வர ஆரம்பித்தது. அதுதான் நியூசிலாந்து அணிக்கு நல்ல மொமெண்டத்தைக் கொடுத்து, அவர்களை 220+ ரன்கள் வரை கொண்டு சென்றது. அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். அதேநேரம், 220+ ரன்களை சேஸ் செய்யும்போது எங்களுக்கு அப்படியொரு தொடக்கம் தேவைப்பட்டது. முதல் ஆறு ஓவர்களில் 80-85 ரன்களை எட்டுவது ஒரு மகத்தான தொடக்கம்," என்றார்.
அனுபவமிக்க தொடக்க வீரர்கள்!
அபிஷேக் மற்றும் சாம்சனுக்கு ஏதேனும் அறிவுரைகள் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "அவர்கள் போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒருமுறை அவர்கள் ஆடத் தொடங்கிவிட்டால், அந்த மொமெண்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதுதான் முக்கியம். இன்றைய ஆட்டம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒவ்வொரு முறையும் இது நடக்காது, ஆனால் அவர்கள் கிளிக் ஆகும்போது, ஆட்டத்தை எங்களுக்காக அமைத்துக் கொடுத்துவிடுவார்கள். மற்றவர்கள் வந்து, இலக்கை நிதானமாக முடித்துக் கொடுப்போம்," என்று தொடக்க ஜோடியை வெகுவாகப் பாராட்டினார்.
நமன் திர் கொடுத்த நம்பிக்கை!
ஏழாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனாக வந்து பந்துவீசும் நமன் திர் போன்ற வீரரின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ஐயர், "நிச்சயமாக, அவர் எங்களுக்கு நிறைய ஆப்ஷன்களைக் கொடுக்கிறார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக, இந்த மைதானத்தில் வந்து இரண்டு அல்லது மூன்று முக்கிய ஓவர்களை வீசுவது ஆட்டத்தின் போக்கையே மாற்றும். தனிப்பட்ட முறையில், அவர் இன்று வெளிப்படுத்திய அமைதியான மற்றும் நிதானமான ஆட்டம் பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது," என்றார்.
பவர்பிளேயில் கோட்டை விட்டோம் - ஒப்புக்கொண்ட சான்ட்னர்!
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேசுகையில், "எங்கள் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டனர். பாதி ஆட்டத்தில் நாங்கள் எடுத்த ஸ்கோரில் மகிழ்ச்சியாகவே இருந்தோம். ஆனால், இந்திய தொடக்க வீரர்கள் எங்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். பவர்பிளேயில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்களின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. சில விஷயங்களை நாங்கள் சரிசெய்ய வேண்டும். பவர்பிளேயில் அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். " என்று தங்கள் தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொண்டார்.















