'டிட்வா' புயல் : புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்!
Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன?
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார்.
புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், 'சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை' வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.
இந்தியா - ரஷ்யா உறவு
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை.
டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















