செய்திகள் :

TVK: "அவதூறுகளால் என்னை முடக்க முடியாது" - ஆர்.கே. நகர் தவெக வேட்பாளர் மரியவில்சன் பேட்டி

post image

2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆர்.கே.நகர் த.வெ.க வேட்பாளர் மரியவில்சன் அத்தொகுதி மக்களுக்கு ஏராளனமான வாக்குறுதிகளை அளித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

இன்னொருபுறம், அவர் மீது சில விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கின்றன. இவை அனைத்தையும் பற்றி தேர்தல் பிரசாரக் களத்தில் அவரைச் சந்தித்து கேள்விகளை முன்வைத்தோம்...

ஆர்.கே. நகர் இப்போது எப்படி இருக்கிறது?

இங்குள்ள மக்கள் கொடுக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் இந்தத் தொகுதி செழிப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. கழிவுநீர் பிரச்னை, சுகாதாரக் குறைபாடுகள் அதிகமாக இருக்கின்றன. போதைப்பொருள் அட்டகாசத்தால் மாலை 6 மணிக்கு மேல் பெண்களால் வெளியே நடமாட முடியாத நிலை உருவாகிவிட்டது. இதைச் சரிசெய்யவே த.வெ.க தலைவர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்.

கல்வி நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?

அரசியல் எங்கள் குடும்பத்திற்குப் புதியதல்ல. என் மாமனார் ஜேப்பியார் எம்ஜிஆரின் நெருங்கிய தோழர்; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். என் தாத்தா பால்ராஜ் தஞ்சாவூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தார்.

எங்களுடைய குடும்பத்தில் ஃபர்ஸ்ட் ஜெனரேஷனில் அரசியல் இருந்திருக்கிறது. நாங்கள் இரண்டாவது ஜெனரேஷனில் கல்வி சார்ந்து பயணித்து விட்டோம். அரசியலில் சற்று கேப் விழுந்துள்ளது அவ்வளவு தான்.

மரியவில்சன்
மரியவில்சன்

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த பிறகு தலைவருடைய வரவேற்பு மற்றும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘பிறப்பால் அனைவரும் சமம்‘ என்ற தலைவருடைய கொள்கைகள் என்னை ஈர்த்தன. அதுமட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளை அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்று அறிவித்துள்ளார்.

அதற்கெல்லாம் தனி துணிச்சல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவர் விஜய் நோக்கித்தான் செல்கிறார்கள். அவர்தான் ஒரே நம்பிக்கை எனச் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.

அதிமுகவின் கோட்டையான இங்கு உங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா?

வாக்கு வித்தியாசத்தை மட்டும் பார்க்கிறீர்கள். ஆனால் ஆண்ட கட்சியாக இருந்தாலும், இப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் இரண்டு பேரும் 50 ஆண்டுகளாக இங்கு ஒன்றுமே செய்யவில்லை. இங்குள்ள இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார்கள். மூன்றாம் தலைமுறையில் பலரை போதைக்கு அடிமையாக்கிவிட்டது இந்த அரசியல். மாற்றத்தை கல்வியால் மட்டுமே கொண்டுவர முடியும். அதற்கான தகுதி எனக்கு இருக்கிறது.

நீங்கள் இந்தத் தொகுதிக்கு வெளியாள் என்று சொல்கிறார்களே?

நான் அவுட்சைடரே இல்லை! எங்கள் தலைவர் "எல்லோரும் எங்கள் குடும்பம்" என்று சொல்கிறார். மேலும் என் மாமனார் ஜேப்பியார் வடசென்னையில்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பு எங்களுக்கு இருக்கிறது. இது பழைய அரசியல் தந்திரம். ராகுல் காந்தி வயநாட்டில் நிற்கிறார், கனிமொழி தூத்துக்குடியில் நிற்கிறார். அதை யாரும் கேட்கவில்லையே!

மரியவில்சன்
மரியவில்சன்

உங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வருகின்றனவே?

26 ஆண்டுகளாக கல்விப் பணியில் இருந்தேன். என்மீது எந்தக் குற்றச்சாட்டும் வந்ததில்லை. இப்போது த.வெ.க சார்பில் போட்டியிடுவதால், மக்களுக்கு நல்லது செய்ய வந்த என்னை அரசியல் ரீதியாக முடக்க அவதூறுகள் பரப்புகிறார்கள். என்மீது வைக்கப்பட்ட விமர்சனம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அது என் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை. அவதூறுகளால் என்னைத் தடுக்க முடியாது. நான் மக்களுடன் இணைந்துவிட்டேன்.

தொகுதிக்காக என்னென்ன செய்வீர்கள்?

முதலில் போதைப்பொருள் ஒழிப்புக்காக தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை எங்கள் சிஎஸ்ஆர் நிதி மூலம் அமைப்பேன். திறன்மேம்பாட்டு மையங்கள், லேப்டாப் சர்வீஸ் சென்டர்கள், டெலிகாலர் வேலைவாய்ப்புகள் கொண்டுவருவேன். மீனவர்களுக்காக பவளப்பாறை பாதுகாப்பு, மீன்வலை திட்டம் மறுதொடக்கம் செய்வேன்.

கொருக்குப்பேட்டை சப்வே கட்டுவேன். மேலும் சமீபத்தில் திறந்த மேம்பாலத்தில் 15 நாட்களிலேயே சிமெண்ட் கொட்டுகிறது, அதை ஐஐடி பேராசிரியர்களை வரவழைத்து தர ஆய்வு செய்வேன். இவை 15 வருட திட்டம். நான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் நூறு சதவிகிதம் செயல்படுத்துவேன்.

ஆர்.கே நகர் தொகுதி மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

கண்டிப்பாக மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். இங்க இருக்கிற மக்கள் யாருக்குமே ஓட்டு போடக்கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த அளவிற்கு வெறுப்பு அவர்களுக்கு வந்துவிட்டது. அப்போது வந்தவர்தான் நம்முடைய தலைவர் விஜய். அவரை நம்புகிறார்கள். மாற்றம் வரவேண்டும் என மக்களும் நம்புகிறார்கள். அந்த மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்' - என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `சௌமியா அன்புமணி வெல்வாரா?' - எல்லையோர மாவட்டங்களின் சிக்னல் என்ன?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

"பல்லாவரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" - தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் உறுதி

பல்லாவரம் அரசியல் களம் இந்த முறை சற்றே வித்தியாசமாகக் காட்சி தருகிறது. காரணம், புதிய முகம், ஆனால் பழைய சமூகப் பணியின் அடையாளம். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் காமாட்சி ஜெயகி... மேலும் பார்க்க

`தேர்தல் ஆணையத்திடம் பொறுப்பு இருக்கிறதுதான்; ஆனால், எங்கள் பிரசாரத்தை தடுப்பது திமுக'- விஜய் கடிதம்

தங்களுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது..."தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துக... மேலும் பார்க்க

ரூ.25,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டம்... கோவையைக் கலக்கும் செந்தில் பாலாஜி!

கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்ற பிம்பத்தைச் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது செந்தில்பாலாஜியின் கோவை எண்ட்ரி. கோவை முழுக்க அவருக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பு அதிமுகவைக் கதிகலங்க வைத்திருக்கிறது... மேலும் பார்க்க