`அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய...
Twitter: உலகின் முதல் ட்வீட் பிறந்த கதை! - 20 ஆண்டுகால ட்விட்டரின் சுவாரசிய வரலாறு
மார்ச் 21, 2006: உலகையே இணைக்கும் ஒரு மாபெரும் தகவல் தொடர்பு புரட்சிக்கு ஒரு சிறிய விதை தூவப்பட்டது. அதுதான் ட்விட்டரின் உதயம். ஜாக் டோர்சி (Jack Dorsey) மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்ட இந்த தளம், ஒரு சாதாரண ஐடியாவில் இருந்து தொடங்கியது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் 'ஓடியோ' (Odeo) என்றொரு பாட்காஸ்ட் நிறுவனம் இயங்கி வந்தது. இவான் வில்லியம்ஸ் (Evan Williams), பிஸ் ஸ்டோன் (Biz Stone), நோவா கிளாஸ் (Noah Glass) மற்றும் ஜாக் டோர்சி ஆகியோர் அங்கு பணியாற்றி வந்தனர்.

அந்த நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐடியூன்ஸ் (iTunes) தளத்தில் பாட்காஸ்ட் வசதியை அறிமுகப்படுத்தியது. இதனால் 'ஓடியோ' நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. நிறுவனத்தைக் காப்பாற்ற, ஊழியர்களிடம் புதிய ஐடியாக்களைக் கேட்டனர். அப்போது ஜாக் டோர்சி முன்வைத்த ஒரு வித்தியாசமான ஐடியாதான் ட்விட்டரின் தொடக்கம்.
ஜாக் டோர்சிக்கு சிறு வயதிலிருந்தே ஆம்புலன்ஸ், டாக்ஸி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எவ்வாறு ரேடியோ மூலம் சுருக்கமாகத் தகவல் பரிமாறிக் கொள்கின்றன என்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. இதேபோல, சாதாரண மக்களும் தங்கள் நண்பர்களிடம் "நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்?" (What are you doing?) என்பதை ஒரு சிறிய குறுஞ்செய்தி (SMS) மூலம் பகிர்ந்துகொண்டால் என்ன என்று அவர் யோசித்தார்.
இந்த ஐடியா குழுவினருக்குப் பிடித்திருந்தது. பறவைகளின் சுருக்கமான ஒலியைக் குறிக்கும் வகையில் நோவா கிளாஸ் இதற்கு "twttr" (ட்விட்டர்) என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் உயிரெழுத்துக்கள் இல்லாமல் 5 எழுத்துக்களில் (Flickr போல) பெயர் வைப்பதே அப்போதைய ட்ரெண்டாக இருந்தது.
எல்லாம் தயாரான பிறகு, மார்ச் 21, 2006 அன்று 9:50 மணிக்கு ஜாக் டோர்சி தனது கணக்கில் இருந்து உலகின் முதல் ட்வீட்டைப் பதிவு செய்தார்.
"just setting up my twttr" (எனது ட்விட்டரை அமைத்துக் கொண்டிருக்கிறேன்)
இதுதான் வரலாற்றில் முதல் ட்வீட்!

சில சுவாரசியமான தகவல்கள்:
ஆரம்பத்தில் ட்விட்டரில் 140 எழுத்துகள் மட்டுமே டைப் செய்ய முடியும். இதற்கு முக்கியக் காரணம், அப்போதைய SMS-களின் வரம்பு 160 எழுத்துகள். அதில் 20 எழுத்துகளை பயனரின் பெயருக்கும் (Username), மீதமுள்ள 140 எழுத்துகளைச் செய்திக்கும் ஒதுக்கினார்கள்.
2007-ல் கிறிஸ் மெசினா (Chris Messina) என்ற பயனர்தான், குறிப்பிட்ட தலைப்புகளை ஒருங்கிணைக்க '#' (Hashtag) குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை ட்விட்டருக்கு வழங்கினார்.
ஆரம்பத்தில் மெதுவாக வளர்ந்த ட்விட்டர், 2007-ல் நடந்த 'சவுத் பை சவுத்வெஸ்ட்' (SXSW) தொழில்நுட்ப மாநாட்டில் மிகப்பெரிய பிரபலமடைந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கான ட்வீட்கள் பறக்கத் தொடங்கின.
காலப்போக்கில், இது வெறும் "நான் என்ன செய்கிறேன்" என்று சொல்லும் தளமாக இல்லாமல், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதை நொடிப்பொழுதில் உலகுக்குத் தெரிவிக்கும் குளோபல் டவுன் ஸ்கொயர் (Global Town Square) ஆக மாறியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் மக்களுடன் நேரடியாக உரையாடும் பாலமாக ட்விட்டர் உருவெடுத்தது.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த ட்விட்டரின் வரலாற்றில் 2022-ஆம் ஆண்டு ஒரு மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் (Elon Musk), ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

தனது நீண்ட நாள் கனவான எவ்ரிதிங் ஆப் (Everything App - அனைத்துக்குமான ஒரு செயலி) என்ற இலக்கை நோக்கி, 2023 ஜூலை மாதத்தில் ட்விட்டரின் புகழ்பெற்ற 'நீல நிறப் பறவை' லோகோவை நீக்கிவிட்டு, அதற்கு 'X' எனப் பெயர் மாற்றம் செய்தார். இன்று நாம் பயன்படுத்தும் 'X' தளத்தில் வீடியோ, ஆடியோ கால், பணப் பரிவர்த்தனை என பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு, அது முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
சுருக்கமான குறுஞ்செய்திகளைப் பகிரத் தொடங்கிய ஒரு சிறிய தளம், இன்று உலகையே ஆளும் ஒரு மாபெரும் தொழில்நுட்ப சாம்ராஜ்யமாக மாறியிருப்பது உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வரலாற்றுப் பயணம்தான்!





















