'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள்" - NATO-வை சாடும் ட்ரம்...
அம்பானி தொடங்கி உதய்ப்பூர் ராஜா வரை கௌரவித்த தமிழக பஸ் கண்டக்டர்! - ஊர்போற்றும் `சூழலியல்' நாயகன்
அம்பானி நேரில் அழைத்து விருந்து கொடுக்கிறார். நடிகர் ஜான் ஆபிரஹாம் பணிந்து அவரது பாதத்தைத் துடைத்துவிட்டு புதிய ஷூ மாட்டி விடுகிறார். உதய்ப்பூர் மகாராஜா தனது அரண்மனையில் தங்கவைத்து தர்பார் ஹாலில் குடும்பத்தோடு அமர வைத்து சாப்பிட வைக்கிறார். தலாய்லாமா தர்மசாலாவுக்கு அழைத்து கௌரவிக்கிறார்...
இவ்வளவு மரியாதையும் யாருக்கு..?
ஒரு, அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் கண்டக்டருக்கு... பெயர் யோகநாதன்... ஊர் கோயமுத்தூர்.
இத்தனை பேர் அழைத்துப் போற்றும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்...?

யோகநாதனுக்குப் பூர்வீகம் என்றால், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலிருக்கிற அத்தாணி. அப்பா மாரிமுத்துவும் அம்மா வேலம்மாளும் திருமணமான புதிதிலேயே இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளிகளாகச் சென்றுவிட்டார்கள். மொத்தம் ஆறு பிள்ளைகளில் கடைசியாகப் பிறந்தவர் யோகநாதன். ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையில் தாக்குப்பிடிக்க முடியாமல் மயிலாடுதுறையில் வந்திறங்கி வாழ்வாதாரம் தேடியது, யோகநாதனின் குடும்பம். அந்தத் தருணத்தில் தான் ஒரு உறவுக்காரர் வழியாக, கோத்தகிரி ஆவுக்கல் எஸ்டேட் தொடர்பு கிடைத்தது. ஏற்கெனவே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி அனுபவம் இருந்ததால் யோகநாதன் குடும்பம் ஆவுக்கல் எஸ்டேட்டுக்கு இடம் பெயர்ந்தது. எஸ்டேட் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார் யோகநாதன். அந்தக் காடுகளும் பசுமையும் மரங்களும் யோகநாதனின் மனசுக்கு நெருக்கமாக இருந்தன.
அந்தக் காலக்கட்டத்தில் நீலகிரியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக் கடத்துவது சாதாரணமாக நடக்கும். 8-ம் வகுப்பு படித்த காலத்தில் லாரி லாரியாக மரங்களை வெட்டிக் கடத்தப்படுவதைப் பார்த்தார் யோகநாதன். பல்லாண்டுகளாக இந்த மண்ணையும் மலையையும் தாங்கி நிற்கும் மரங்களை இவர்களால் எப்படி வெட்ட முடிகிறது என்று வேதனைப்பட்ட யோகநாதன், அந்த சின்ன வயதிலேயே கலெக்டருக்கு புகார் அனுப்பினார்.

"அந்தப் புகாரை யாரும் பெரிசா எடுத்துகல. ஆனா நான் விடலே. 9-ம் வகுப்பு கோத்தகிரியில படிச்சேன். தினமும் 13 கி.மீ காட்டுக்குள்ள நடந்து போவேன். ஒருநாள் ஸ்கூலுக்குப் போய்க்கிட்டிருந்தபோது ஒரு லாரி நிறைய மரங்களை வெட்டி ஏத்திக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாங்க. அந்த லாரிக்கு முன்னால புத்தகப்பையோட நடுரோட்டுல படுத்துட்டேன். 'மரத்தை வெட்டாதே', 'மரத்தை வெட்டாதே'ன்னு கத்த ஆரம்பிச்சேன். அந்த லாரியில இருந்து இறங்கின நாலு பேரு என்னை தூக்கி ஓரமாப் போட்டு செமையா அடிச்சுட்டாங்க. இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதியில இருந்த மக்களெல்லாம் கூடிட்டாங்க. சின்னப்பையனை அடிக்கிறதைப் பார்த்ததும் லாரியை நிறுத்தி அந்த நாலு பேரையும் உக்கார வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் போலீஸ், பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆள்கெல்லாம் வந்தாங்க. லாரியை சீஸ் பண்ணினாங்க. மறுநாள் இந்த செய்தி பத்திரிகையில எல்லாம் வந்துச்சு..." என்கிறார் யோகநாதன்.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான தேயிலைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தேயிலையை வறுக்க தினமும் டன் கணக்கில் விறகு தேவைப்படும். மரங்களை சட்டவிரோதமாக வெட்டுபவர்கள் கிளைகளையெல்லாம் இந்த விறகு பேக்டரிக்கு அனுப்பி விடுவார்கள். நடுமரங்களை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மர அறுவை மில்களுக்கு அனுப்பி பணம் பார்ப்பார்கள்.
"இந்த செய்தியைக் கேள்விப்பட்டு எங்க வீட்ல ரொம்பப் பயந்துட்டாங்க. 'இனிமே நீ ஸ்கூலுக்கெல்லாம் போகவேண்டாம், எஸ்டேட்டுக்கு எங்க கூட வேலைக்கு வா'ன்னு சொல்லிட்டாங்க. இந்த நேரத்துல பத்திரிகைகள்ல வந்த செய்தியைப் பாத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தோட தலைவரா இருந்த டாக்டர் ஜீவானந்தமும் ஜெயச்சந்திரனும் என்னைத் தேடி எங்க எஸ்டேட்டுக்கு வந்தாங்க. என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, 'பயப்படாம இந்த வேலையைச் செய், எதுவா இருந்தாலும் எங்களைக் கூப்பிடு, நாங்க பாத்துக்கறோம்'னு உற்சாகப்படுத்திட்டு, அம்மாக்கிட்ட 'உங்க பையனைப் பத்தி கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்'னு சொல்லிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் இன்னும் உற்சாகமாகப் போச்சு. குடும்பத்துல இருந்த அச்சமும் நீங்கிடுச்சு. கோத்தரிகியில 'லாங்வுட் சோலை'ன்னு ஒரு பகுதி இருக்கு. சதுப்பு நிலக்காடு. மிகப்பெரிய நீர்ப்பிடிப்புப் பகுதி. அதை கழிப்பிடமா மக்கள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. 'வாட்ச் டாக் கமிட்டி'ன்னு ஒரு கமிட்டியைப் போட்டு, அந்த சோலையை பாதுகாக்க ஆரம்பிச்சோம். ஆசிரியர்கள், ஜெயச்சந்திரன் சாரெல்லாம் சப்போர்ட் பண்ணினாங்க. இன்னைக்கு அந்தக் காடு 15 ஊருக்குக் குடிநீர் கொடுக்குது.
பேப்பர்ல இதழ்கள்ல வர்ற சுற்றுச்சூழல், பசுமை சார்ந்த செய்திகளை எல்லாம் கட் பண்ணி ஒரு சணல்ல கோர்த்து ஸ்கூல் ஸ்கூலா போய் கட்டி வைப்பேன். பசங்க ஆர்வமா படிப்பாங்க. ஒய்ல்டு லைஃப் புகைப்படக் கலைஞர்கள் மயில்வாகனம், அருந்தமிழ்செல்வன் கூடல்லாம் காட்டுக்குள்ள போய் காட்டை நல்லாப் படிக்கவும் புரிஞ்சுக்கவும் ஆரம்பிச்சேன். புல் என்ன பண்ணும், பூச்சி என்ன பண்ணும், புலி என்ன பண்ணும்னு எல்லாம் கத்துக்கிட்டேன்.

அந்த டைம்ல அறிவொளி இயக்கம் போய்க்கிட்டிருந்துச்சு. அதுலயும் சேர்ந்து வேலை செஞ்சேன். அதுல வேலை செய்றவங்களுக்கு தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பா எல்லாருக்கும் வனம், மரம், இயற்கைச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் பத்தி பயிற்சி கொடுத்தோம். நீலகிரியில மரத்துல ஆணியடிக்கிறதுல ஆரம்பிச்சு வெட்டுறது வரைக்கும் எல்லாத்தையும் கண்டிச்சுப் போராட ஆரம்பிச்சேன்.
பிளஸ்டூ வரைக்கும் இப்படித்தான் வாழ்க்கை ஓடுச்சு. அதுக்கப்புறம் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது வேலை தேடணுமே... குன்னூர் டெப்போவுல பஸ் கண்டக்டர் வேலை கிடைச்சுச்சு. ஓரளவுக்கு வாழ்க்கை செட்டிலான பிறகு, ஒரு ப்ரொஜெக்டர் வாங்குனேன். இன்னைக்கு மதியம் பஸ்ல ஏறினா நாளைக்கு மதியம் வரைக்கும் டியூட்டி. மறுநாள் மதியம் வரைக்கும் ஓய்வு. வேலை முடிஞ்சதும் ப்ரொஜெக்டரை எடுத்துக்கிட்டு ஸ்கூல், காலேஜ்ன்னு கிளம்பிருவேன். பசங்களுக்கு சிலைடு போட்டு, மரம் வளர்க்கிறது, வனத்தைப் பாதுகாக்குறது, கானுயிர்களை காக்குறதுன்னு சொல்லித்தருவேன். எங்கே போனாலும் கைநிறைய மரக்கன்றுகளை அள்ளிக்கிட்டுப் போய் நட்டுடுவேன். அதையெல்லாம் பராமரிக்கிற பொறுப்பை பசங்கக்கிட்ட விடுவேன்.
பஸ்ல போய்க்கிட்டிருப்பேன், எங்காவது மரம் வெட்டுறது தெரிஞ்சா, உடனே பஸ்சை நிறுத்தி போய் தடுப்பேன். இது மர மாஃபியாக்களுக்கு பெரிய பிரச்னையாகி, என்னைக் குறிவைக்க ஆரம்பிச்சாங்க. விளைவு, டிரான்ஸ்பர்... மேட்டுப்பாளையம், திருப்பூர், ஒண்டிப்புத்தூர்ன்னு ஆறு மாசத்துக்கு ஒருமுறை டெப்போ மாறிக்கிட்டே இருக்கும்.

நான் செய்ற இந்த வேலையை போக்குவரத்துறை அதிகாரிகளும் ரசிக்கல. நிறைய நெருக்கடிகள் தந்தாங்க. ஆனா, நான் செய்ற வேலையை நிறுத்தவே இல்லை. பலமுறை மர மாஃபியாக்களால தாக்கப்பட்டிருக்கேன். அச்சுறுத்தப்பட்டிருக்கேன். அதிகாரிகளால அவமானப்படுத்தப்பட்டிருக்கேன். ஆனா, எதுக்கும் கவலைப்படுறதில்லை. இந்தத் தருணத்துல 'ஈகோ வாரியார்'ன்னு ஒரு தேசிய விருது எனக்கு அறிவிச்சாங்க. அதை வாங்க டெல்லிக்குப் போகணும். டெப்போவுல லீவ் கேக்குறேன், 'லீவெல்லாம் தரமுடியாது'ன்னு சொல்லிட்டாங்க. ஒரு லீவ்க்கு ஒரு வருஷ இங்கிரிமெண்ட் கட் ஆகும். நான் நாலு நாள் லீவ் போட்டு தேசிய விருது வாங்கப்போனேன். நாலு வருடத்துக்கு இங்கிரீமெண்ட் கட். அந்த விருதை எனக்கு அப்போ துணை ஜனாதிபதியா இருந்த முகமது ஹமீத் அன்சாரி வழங்கினார்..." என்கிறார் யோகநாதன்.
பள்ளி, கல்லூரிகளில் ஏறியிறங்கி சூழலியல் விழிப்புணர்வு ஊட்டுவது, போகுமிடங்களில் எல்லாம் மரக்கன்றுகளைக் கொண்டுபோய் நடுவது, அவற்றைப் பராமரிப்பது அல்லது அங்குள்ளவர்களை பராமரிக்க வைப்பது, சூழலியலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு களத்துக்கே போய் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது என யோகநாதன் இடைவிடாது இயங்கிக்கொண்டே இருந்தார்.
2009-ல் யோகநாதனை அழைத்தார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
"மும்பையில ஒரு நட்சத்திர விடுதியில நடந்த ஒரு விழாவுக்கு என்னை அழைச்சிருந்தார் முகேஷ் அம்பானி. அங்கே எல்லாருக்கும் என்னை, 'இவர் ஒரு அன்சங் ஹீரோ' ன்னு அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில லதா மங்கேஷ்கர் கச்சேரியும் நடந்துச்சு. எனக்கு 3.5 லட்ச ரூபாய் பணம் கொடுத்து, 'உற்சாகமா இந்த வேலையைச் செய்யுங்க'ன்னு பாராட்டினார் அம்பானி. பேப்பர்ல எல்லாம் இதுபத்தி வரத் தொடங்கியதும் எங்க டெப்போவுல எல்லாத் தொழிற்சங்கமும் சேர்ந்து எனக்கு விழா எடுத்தாங்க. இந்த மாதிரி விழாக்களும் விருதுகளும் நமக்கான ஒரு பாதுகாப்பு. ஆனால் அதிகாரிங்க இயல்பு மாறல. ஒருமுறை ஒரு இடத்துல மரம் வெட்டுறதைக் கேள்விப்பட்டு போய் தடுத்தப்போ என் மேல கேஸ் போட்டு கோயமுத்தூர் மத்திய சிறையில வச்சுட்டாங்க. சிறையில இருந்த சில நாள்கள்ல, கூட இருந்த சிறைவாசிகள்கிட்ட பேசி பயிற்சி கொடுத்து அதிகாரிகள் உதவியோட 5 ஏக்கர்ல தென்னங்கன்றுகள் நட்டோம். இப்போ சிறைக்குள்ள அது பெரிய தோப்பா வளர்ந்து நிக்குது.
பல்கலைக்கழகங்கள், சிப்காட்ன்னு நிறைய இடங்கள்ல கூப்பிட ஆரம்பிச்சாங்க. எல்லா இடங்கள்லயும் குறுங்காடுகள் உருவாக்க ஆரம்பிச்சோம். இந்த நேரம் தான், அமெரிக்காவைச் சேர்ந்த 'டிம்பர்லேண்ட்'ன்னு ஒரு அமைப்பு 'ரியல் ஹீரோன்னு ஒரு விருது கொடுக்கிறோம்'ன்னு கூப்பிட்டாங்க. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்த நடிகர் ஜான் ஆபிரஹாம் மேடையிலேயே என்னை உக்கார வச்சு, என் பாதத்தை துடைச்சுவிட்டு புது ஷூ மாட்டிவிட்டார். இதுபத்தி ஆங்கில இதழ்கள்ல எல்லாம் கட்டுரைகள் வந்துச்சு. ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்லயும் ஒரு கட்டுரை வந்துச்சு.

இதெல்லாம் நடந்துக்கிட்டிருந்தாலும் என் டிரான்ஸ்பர் மட்டும் நிக்கல. கிட்டத்தட்ட என் பணிக்காலத்துல 27 டிரான்ஸ்பர்கள் வாங்கியிருக்கேன். போக்குவரத்துத்துறை செயலாளரா சாரங்கின்னு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்தார். அவர் வந்தப்புறம் தான் நிலைமை மாறுச்சு. நான் செய்ற வேலையை அவர் சரியா புரிஞ்சுக்கிட்டார். என்னைக் கூப்பிட்டு, `என் டேபிள்ல உங்க போட்டோ தான் வச்சிருக்கேன். உங்களால நம்ம துறைக்கே பெருமை... நீங்க எப்போ வேணும்னாலும் லீவ் எடுத்துக்கோங்க. எந்த பஸ் பொருத்தமா இருக்குமோ அதுல டியூட்டி பாருங்க'ன்னு சொல்லிட்டார். அவர்கிட்ட, `எனக்கு லீவை திங்கள்கிழமை மாத்திக்கொடுங்கய்யா... பள்ளிக்கூடங்கள்ல மாணவர்களைச் சந்திக்க வசதியா இருக்கும்'னு சொன்னேன். அந்த இடத்துலயே மாத்திக் கொடுத்துட்டார். அதுக்கப்புறம் இ்ன்னும் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். தமிழக அரசோட சுற்றுச்சூழல் விருது, கிரீன் சாம்பியன் விருது, திராவிடர் கழகத்தோட பெரியார் விருதுன்னு அடுத்தடுத்து விருது கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க..." என்கிறார் யோகநாதன்.
இடையில் திடீரென தாக்கிய நிமோனியா காய்ச்சலால் படுக்கையில் வீழ்ந்தார் யோகநாதன். சோதித்த மருத்துவர்கள், 'நுரையீரலில் கேன்சர்' என்றார்கள். கடும் காலம் தொடங்கியது.

" ஒரு டாக்டர் நாள் குறிச்சுட்டார். தீவிர சிகிச்சைக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கல... நம்ம காலம் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன். ஆனா,நண்பர்கள் கைவிடல... அங்கிருந்து என்னை வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு போனாங்க. அங்கே நுரையீரலோட ஒரு பகுதியை அறுவை சிகிச்சை செஞ்சு எடுத்தாங்க. சிகிச்சைக்கான செலவு யார்யாரோ செஞ்சாங்க. அழகர்சாமின்னு ஒரு நண்பர், முதல்ல 2 லட்ச ரூபாய் கொடுத்து சிகிச்சையை தொடங்கி வச்சார். மொத்த செலவையும் நண்பர்களே காப்பாத்தி வீட்ல கொண்டு வந்து விட்டாங்க.
ஒன்னரை வருஷம் நோயோட போராடி மீண்டு வந்ததும் போக்குவரத்துத் துறையில அலுவலகப் பணி கொடுத்தாங்க. திரும்பவும் நம்ம வேலையை ஆரம்பிச்சேன். வேளாண் பல்கலைக்கழகத்துல சுதந்திர வனம்னு ஒரு காடு உருவாக்கினோம். கொடிசியா, சிப்காட்ன்னு பல இடங்கள்ல குறு வனங்கள் உருவாக்கினோம். சமீபத்துல ஓய்வு பெற்றேன். இப்போ இன்னும் தீவிரமா வேலைகள் போய்க்கிட்டிருக்கு... சமீபத்துல இமாச்சல் பிரதேசத்துல தர்மசாலாவுல இருந்து அழைச்சிருந்தாங்க.

அங்கே தலாய்லாமாவோட சேர்ந்து மரக்கன்றுகள் நட்டேன். கடந்த 13-ம் தேதி உதய்ப்பூர் மகாராஜா தரப்பில் அழைப்பு வந்துச்சு. நான், என் மகள், பேத்தி மூணு பேரும் போனோம். தோள்ல கைபோட்டு வரவேற்றார் மகாராஜா. அரண்மனையிலேயே தங்க வச்சாங்க. இரவு சிறப்பு விருந்து நடந்துச்சு. 1 லட்சம் பணம், வெள்ளிக் கேடயம் நினைவுப்பரிசு கொடுத்தார் மகாராஜா. மறுநாள் மதிய உணவு தர்பார் ஹால்ல ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அரண்மனை வளாகத்துல மரங்கள் நட்டோம். ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு..." என்கிறார் யோகநாதன்.

விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் எதையும் தலையில் தரித்துக்கொள்ளாமல், ஒரு முண்டாசைக் கட்டிக்கொண்டு இந்த நொடி எங்கோ ஒரு மரக்கன்று நட்டுக்கொண்டிருப்பார் யோகநாதன்!


















