Velpari Drama: '40 பெண் கலைஞர்கள், ஒரு மாத பயிற்சி, 3 மணிநேர நீளம்'- நாடகவடிவில்...
Velpari Drama: '40 பெண் கலைஞர்கள், ஒரு மாத பயிற்சி, 3 மணிநேர நீளம்'- நாடகவடிவில் மேடை ஏறிய வேள்பாரி!
இது வரையில் எழுத்து வடிவத்தில் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர்களுக்கு விருந்தளித்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் கலை வடிவில் நாடகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேறியது.
வீனிக்ஸ் கலைக்குழு மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்திய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலைத் தழுவியது வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம். சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதி 111 வாரங்கள் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து விகடன் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பிரதிகளை விற்ற பெருமைக்குரியதாகும்.
வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு இதுவரை எழுத்து வடிவில் இருந்த நாவல் தற்போது கலை வடிவமாக நாடகமாக நடைபெற்றது.
பீனிக்ஸ் கலை குழுவின் ஏற்பாட்டில் முழுமையாக பெண் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்தி முனைவர் இராணி மனோகரன் இயக்கத்திலும், சு.வேடராஜா இசை மற்றும் பின்புலக் காட்சி உருவாக்கத்திலும், ஒரு மாத காலம் சீரிய பயிற்சி பெற்ற 40க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடிப்பிலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் முனைவர் காமாட்சி அம்மையாரின் ஒத்துழைப்புடன் நாடக நிகழ்ச்சியானது மிகச் சிறப்பாக நிகழ்ந்தப்பட்டது.

நாடகத்தில் டிஜிட்டல் பின்னணி காட்சியமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது. வழக்கமான திரைச்சீலைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் காட்சிகளைப் பயன்படுத்தி, கதையின் காலகட்டம், நிலப்பரப்பு மற்றும் காட்சிச் சூழலைப் பிரமாண்டமாக உருவாக்கியிருந்தனர்.
மேடையில் அமைக்கப்பட்ட எளிமையான அதே நேரத்தில் அழகிய செட் மற்றும் கதைக்களத்திற்குப் பொருத்தமான கலைப் பொருட்கள் மூலம் பாரியின் காலகட்டத்தைக் குறியீடுகளுடன் காட்சிப்படுத்தியிருந்தது நாடகத்தின் கலை வடிவமைப்புக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.
நாடகத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் பின்னணி இசை அமைந்தது. சு. வேடராஜா இசை மற்றும் பின்னணி இசை அமைப்பு, காட்சிகளின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் வேள்பாரி என்று ஆரம்பிக்கின்ற மூன்று தீம் மியூசிக் போன்றவை திரைப்படப் பாடல்களுக்கு இணையான அழகியல் மற்றும் அளவுத்தன்மையுடன் அமைந்திருந்தன.
காதல், போர், வீரியம் உள்ளிட்ட வெவ்வேறு உணர்வுகளைக் கொண்ட காட்சிகளுக்கு இசை தனித்துவமான களத்தை உருவாக்கியது.

காதல் பாடல்கள், போர்க் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனத் திரைப்படத்துக்கு இணையான பல்வேறு காட்சி அம்சங்களை மேடை நாடகத்தின் சாத்தியக்கூறுகளுக்குள் கொண்டு வந்து, கதையின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படாத வகையில் நிகழ்த்தியிருந்தனர். இதற்காக மேடைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் பணியும் பாராட்டத்தக்கதாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாவலின் சிறப்புகளைப் பற்றியும், தன்னை போன்ற வாசகர்களுக்கு இந்த நாவல் தந்த அறிவு பற்றியும் சு. வெங்கடேசனைப் பற்றியும் புகழ்ந்து பேசினார். தன்னை போன்ற மேடைப் பேச்சாளர்கள் சிறப்பான பேச்சுக்களுக்கு வழிவகுத்தது இது போன்ற நாவல்கள்தாம் என்றும் கூறினார்.
நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் பணிபுரியும் நிலையில் இருப்பதால், அனைவருக்கும் பொதுவாக நேரம் கிடைக்கும் ஒரே நாளாக ஞாயிற்றுக்கிழமை இருந்தது. எனவே, எங்களின் நாடகப் பயிற்சிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் எனக் கலைஞர்கள் கூறினர்.
திரைப்படத்திற்கான பின்னணி இசை உருவாக்கப்படுவது போன்றே, இந்த நாடகத்திற்கான பின்னணி இசையும் முன்கூட்டியே இசையமைத்து, பதிவு செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டது. நாடகத்தின் காட்சிகளுக்கும் கதையின் உணர்வுகளுக்கும் ஏற்ப அனைத்து தீம் இசைகளும், பாடல்களும் இந்த நாடகத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன.

சங்க காலத்தின் பெருமைமிகு வள்ளலாக வேள்பாரியின் அறத்தையும் மாண்பையும் பறைசாற்றும் வண்ணம் பீனிக்ஸ் கலைக்குழு தயாரித்த இந்த நாடகமானது வேள்பாரி நாவலின் தத்ருபகக் காட்சிகளை எடுத்து வைத்தது.
புறம்பு நாட்டின் வளம் முதுபுலவர் கபிலரின் சிறப்பு, வீழ்த்தப்பட்ட பழங்குடிகளின் கதைகள் மற்றும் மூவேந்தர்களின் போர் தன்மைகள் என நாடகம் மிக விரிவானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது.
வரலாறு, இலக்கியம், நாடகம், இசை, காட்சியமைப்பு எனப் பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து, ‘வேள்பாரி’யின் கதையையும் அதன் உணர்வுகளையும் பார்வையாளர்களின் கண்முன் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க மேடை நிகழ்வாக இந்த அரங்கேற்றம் அமைந்தது.

நாடகத்தில் முதன்மை கதாபாத்திரங்கள் திறம்பட வேடமிட்டு நடித்திருந்தனர். வேள்பாரி நாவலின் வாசகர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். அரங்கமெங்கும் கரவோசை அதிர நாடகமானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடக கலைஞர்களைப் பாராட்டி நாடகத்தைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்து நாடகத்தில் நடித்த நாடகக் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


















