T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் ...
Zomato: பதவி விலகிய சொமோட்டோ நிறுவனர்; டெலிவரி ஊழியர்களின் போராட்டம்தான் காரணமா? - பின்னணி என்ன?
சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'எடர்னல்' (Eternal)-ன் நிறுவனராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர் தீபிந்தர் கோயல். இந்த மாத தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிக் எகானமிக்கு ஆதரவாகப் பேசிய திபிந்தர் கோயல், ``கிக் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதனால், லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கியுள்ளது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமூக விரோதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். கிக் எகானமி என்பது குறுகிய கால வேலை வாய்ப்பு மட்டுமே.
ஏனெனில், இந்தத் தளங்களில் அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை, மாறாக 'இன்சென்டிவ்' (Incentives) அடிப்படையிலேயே வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது." என விமர்சித்திருந்தார். அவரின் இந்த விமர்சனம் தொழிலாளர் சங்கங்களின் கோபத்தைத் தூண்டியது. மேலும் டெலிவரி ஊழியர்களின் பணிச் சூழல் குறித்தும் இணையத்தில் பெரும் விவாதம் கிளப்பியது.
இந்த நிலையில், எடர்னல் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தில், ``சமீபகாலமாக, அதிக ரிஸ்க் மற்றும் சோதனைகள் நிறைந்த புதிய யோசனைகளின் மீது எனது கவனம் குவிந்திருக்கிறது.
எடர்னல் போன்ற ஒரு பொது நிறுவனத்திற்கு வெளியே இருந்து இத்தகைய யோசனைகளை முன்னெடுப்பதே சிறந்தது. இந்த மாற்றம் எடர்னல் நிறுவனம் தனது இலக்கில் தீர்க்கமாகச் செயல்பட உதவும். அதே நேரத்தில் எடர்னல் நிறுவனம் சிக்கலுக்கு உட்படாத புதிய யோசனைகளை ஆராய எனக்கு இது இடமளிக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தீபிந்தர் கோயலுக்கு பதிலாக பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய CEO அல்பீந்தர் திண்ட்சா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தீபிந்தர் கோயல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் துணைத் தலைவராக நீடிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தீபிந்தர் கோயல் தற்போது Continue என்ற நீண்ட ஆயுள் குறித்த ஆராய்ச்சி மையத்தையும், LAT Aerospace என்ற குறுகிய கால விமானப் பயண நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
















