"மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை" - அன்புமணி ர...
’அகற்றப்படாத போலிப் புத்தகங்கள் ; நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு’ – ஓயாத பெரியார் நூலக சர்ச்சை!
கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும், இவற்றை கொள்முதல் செய்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத்தாளர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து பெரியார் நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குள்ளான அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தங்கள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பிரேம் குமார் கூறியதாவது, “போலிப் புத்தக சர்ச்சை காரணமாக அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் கடந்த 7ம் தேதியன்று அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் தமிழ் நூல்கள் பிரிவில் ஏராளமான பீனிக்ஸ் மற்றும் அகல் விளக்கு புத்தகங்களும், ஆங்கில நூல்கள் பிரிவில் பீனிக்ஸ் பதிப்பகத்தின் புத்தகங்களும் இன்னமும் முழுமையாக அகற்றப்படாமலேயே உள்ளன. அப்பதிப்பகங்களின் பல புத்தகங்களை இன்றும் காணமுடிகிறது. இந்த புத்தகங்களை உடனடியாக கண்டறிந்து முழுமையாக அகற்ற வேண்டும். இதுபோல வேறு ஏதேனும் போலிப் புத்தகங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையிலான தரமான புத்தகங்கள் மட்டுமே நூலகத்தில் இடம் பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.கரீம், “பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் விவகாரம் வெளியாகி 4 நாட்களாகிவிட்டது. ஆனால் நூல்கள் அகற்றம், அதிகாரிகள் இடமாற்றம் என்பது போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை தவிர, வேறு எந்தவிதமான நடவடிக்கைகளையும் அரசு இன்னும் எடுக்கவில்லை. இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்?
முந்தைய தி.மு.க அரசை குற்றம்சாட்ட மட்டுமே இந்த விவகாரத்தை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. அமைச்சர்கள் பொத்தம் பொதுவாக பேசுகிறார்கள் தவிர, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதில் காட்டும் வேகம், ஏன் இந்த விவகாரத்தில் காட்டப்படவில்லை? அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்க பரிந்துரை செய்தவர்கள் பெயரை ஏன் அரசு வெளியிடவில்லை?

யார் ஊழல் செய்தார்கள் என்ற உண்மை தெரிய வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை வளையத்திற்குள் கூட கொண்டு வரவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், போலி எழுத்தாளர்களை கண்டறிந்தால் சன்மானம் தருவதாக சொல்வது ஏற்புடையது அல்ல. அரசுதானே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்? போலி எழுத்தாளர்களை கண்டுபிடிப்பதும் அரசிற்கு எளிதானதுதான். ஆனால் அதை ஏன் செய்யவில்லை என்பது சந்தேகங்களை எழுப்புகிறது” என குற்றம்சாட்டினார்.

















