"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்...
"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், " பாலிவுட்டுடன் ஒப்பிடும்போது எங்களின் சுமை மிகவும் குறைவு. மலையாளப் படங்கள் இப்போதெல்லாம் 15 நாள்களில் படப்பிடிப்பை நடத்தி 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதில்லை.

மாறாக நாங்களும் 150 நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி, 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்களை உருவாக்குகிறோம்.
பெரிய படங்களை எடுக்க முயற்சி செய்தாலும் மலையாளப் படங்கள் எடுக்கப்படும் விதத்தில் ஓர் எளிமையும் இயல்பும் இருக்கிறது. அந்த அணுகுமுறைதான் நாங்கள் எடுக்கும் சினிமாவிற்கு ஓர் உண்மையான மனித உணர்வைக் கொண்டுவருகிறது.
ஓர் இயக்குநராக நான் கரீனாவுடன் இணைந்து படம் பண்ண விரும்பினால், அவருக்கு நேரடியாகவே போன் செய்து, 'ஹாய், உங்களுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன். கதையைக் கூறட்டுமா?' என்று கேட்பேன். அதற்கு அவர், 'நான் அடுத்த மாதம் வெளியூர் பயணத்தில் இருக்கிறேன், வேறு ஒரு நாள் சந்திக்கலாம்' என்று கூறுவார்.
ஆனால் பாலிவுட்டில் நிலைமை வேறு. நீங்கள் முதலில் ஏஜென்சியை தொடர்பு கொள்ள வேண்டும், அவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேனேஜரிடம் பேசுவார்கள். பிறகு அந்த மேனேஜர் இயக்குநரைச் சந்திக்க உங்களைச் சம்மதிக்க வைப்பார்.

அப்படி இணைந்து பணியாற்றச் சம்மதித்த பிறகு, ஏஜென்சி ஒரு பெரிய சம்பளத்தைக் கேட்கும். அதற்குத் தயாரிப்பு நிறுவனம் அதில் பாதியை மட்டுமே தருவதாகச் சொல்லும். அதன்பின்தான் பேச்சுவார்த்தையே தொடங்கும்.
பாலிவுட்டில் எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது. ஆனால் விஷயங்களைச் செய்ய இதைவிட எளிமையான வழியும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து" என்று கூறியிருக்கிறார்.



















