``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது.
மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.
இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், “இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சனாதன தர்மத்தின் எதிரியாக இருந்து வருகிறது.
அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியிருந்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக-ஸ்டாலின் அரசு.
#WATCH | Delhi: In Lok Sabha, BJP MP Anurag Thakur says, "I want to raise a very important issue where one state in India has become a symbol of anti-Sanatan Dharma. Their ministers are making statements against Sanatan Dharma... People were forced to approach the court to reach… pic.twitter.com/ag6lQpG605
— ANI (@ANI) December 12, 2025
“நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து, தீபம் ஏற்றச் சென்றவர்கள் மீது தடி அடி நடத்தியது?”
“ஸ்டாலின் அரசே நீதிமன்ற உத்தரவை மீறி நடந்து கொண்டது ஏன்? கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்காதது ஏன்? இதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று மக்களவையில் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார்.
இதனால், எதிர்க்கட்சியினரான காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பிக்கள் அனுராக் தாகூர் பேச்சிற்கு பதிலளிக்க முயற்சிக்க, மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.







.jpg)










