`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான ...
'அமைச்சர் பதவிகள் சரிதான்; ஆனால், துறை?' - முதல்வர் ரங்கசாமியின் `நோ போர்ட்ஃபோலியோ’ பாலிசி தொடருமா?
புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தேவை. அதன்படி 18 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமியைத் தேர்வு செய்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி. அதன்படி தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ம் தேதியில் ஒன்பது நாட்கள் கழித்து 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணாராவ், பா.ஜ.க எம்.எல்.ஏ நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் தவிர்த்து மொத்தம் ஐந்து அமைச்சர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் அன்றைய தினம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு எந்தத் துறையும் ஒதுக்கப்படவில்லை. அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்காததாலும், மீதமிருக்கும் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததாலும் மக்கள் பணிகள் முடங்கின.
இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் வெளியான ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, இன்று தன்னுடைய அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அவர்களுக்கு எப்போது துறைகளை ஒதுக்குவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
அதனால், `அமைச்சரானதற்குச் சந்தோஷப்படுவதா அல்லது துறைகள் இல்லாமல் வலம் வருவதற்காக வருத்தப்படுவதா…' என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் துறை இல்லாத அமைச்சர்கள்.
முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பெறுவதைவிட பெரிய சாகசம், அதற்கான துறைகளைப் பெறுவதுதான். கடந்த ஆட்சியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவைக்குள் இடம்பிடித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு எந்தத் துறையும் ஒதுக்கப்படவில்லை.
அதனால் துறை இல்லாத அமைச்சராகவே தன்னுடைய பதவிக் காலத்தை முடித்தார் முன்னாள் அமைச்சர் (!?) ஜான்குமார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கி 2011-ல் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, மே மாதம் 16-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால் ஆகஸ்ட் மாதம் அதாவது சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான், தான் நியமித்த அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கினார். அநேகமாக, புதுச்சேரி அரசியல் வரலாற்றில் அமைச்சர்களுக்கு அவ்வளவு காலதாமதமாக துறைகளை ஒதுக்கிய நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும்.
அதன்பிறகு 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, மே மாதம் 7-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் ஜூன் 27-ம் தேதிதான் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதாவது 51 நாட்களுக்குப் பிறகு. அதேசமயம் ஜூலை 11-ம் தேதி, அதாவது 65 நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கான துறைகளை ஒதுக்கினார் முதல்வர் ரங்கசாமி.
அதனால் இந்த முறை முதல்வர் தன்னுடைய பழைய சாதனைகளை முறியடிக்க நினைக்காமல், மக்கள் பாதிக்கப்படாதவாறு அமைச்சர்களுக்கு துறைகளை உடனே ஒதுக்க வேண்டும்.














