செய்திகள் :

`இங்கு யாரும் ஜாம்பவான் கிடையாது' அப்பாவுவை வீழ்த்திய மருத்துவர் - யாரிந்த TVK சதிஷ் கிறிஸ்டோபர்?

post image

நெல்லை மாவட்டத்தின் முன்னணி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வந்த டாக்டர்.சதிஷ் கிறிஸ்டோபருக்கு, விஜய் த.வெ.க-வைத் தொடங்கும் வரை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இருந்ததில்லை.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தூண்களாகக் கருதப்பட்ட மூத்த தலைவர்கள் பலரையும் த.வெ.க-வின் சாதாரண வேட்பாளர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர்.சதிஷ் கிறிஸ்டோபர் இடம்பெற்றுள்ளார்.

சதிஷ் கிறிஸ்டோபர்

அரசியலுக்குப் புதியவரான அவர், நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சபாநாயகர் அப்பாவுவை தோல்வி அடையச் செய்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்தவர் சதிஷ் கிறிஸ்டோபர். கர்நாடகாவின் தேவாங்கரேவில் உள்ள ஜே.ஜே.எம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு, லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை துறைகளில் உயர்கல்வி மற்றும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து, தென் தமிழகத்தில் 'ரோபோடிக் அறுவை சிகிச்சை' முறையை அறிமுகப்படுத்திய முன்னோடி மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

சதிஷ் கிறிஸ்டோபர்

முன்னணி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வந்த அவருக்கு, விஜய் த.வெ.க என்ற கட்சியைத் தொடங்கும் வரை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது.

விஜய் மீதுள்ள ஈடுபாட்டால், த.வெ.க-வில் சேர்ந்த அவர் தன்னார்வலராகச் செயல்பட்டு விஜய் பெயரில் மருத்துவ முகாம்களை நடத்தி வந்தார். அவரது ஈடுபாட்டை அறிந்த கட்சித் தலைமை, அவருக்கு நெல்லை மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. அதன் பின்னர் அவர் மாவட்டம் முழுவதும் மக்களுக்கான பணிகளைச் செய்யத் தொடங்கினார். குறிப்பாக, இராதாபுரம் தொகுதியில் அவர் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.

இராதாபுரம் தொகுதியில் உள்ள மீனவ கிராங்களுக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்ததோடு, அவர்களின் தேவைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் போராட்டங்களிலும் பங்கேற்றார். அதனால் அவருக்கு இராதாபுரம் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியலுக்குப் புதியவரான அவர், ஏழாவது முறையாக தேர்தலில் களம் காணும் பழுத்த அரசியல்வாதியான அப்பாவுவை எதிர்த்துக் களமிறங்கினார்.

கிராமங்கள் மிகுந்த இராதாபுரம் தொகுதியில், த.வெ.க தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வீடாகச்சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதனால் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் அவர் நேரில் சந்தித்து வாக்கு கேட்டார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்தத் தொகுதியில், மட்டும் 55-க்கும் அதிகமான குவாரிகள் இருக்கின்றன.

சதிஷ் கிறிஸ்டோபர்

குறிப்பாக இருக்கன்துறை கிராமத்தைச் சுற்றிலும் 30-க்கும் அதிகமான குவாரிகள் செயல்படுகின்றன. அதனால் விவசாயம் சீரழிவதை நேரில் கண்ட அவர், விவசாயம் தழைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கொடுத்த வாக்குறுதிக்கு நல்ல பலன் கிடைத்தது.

அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் பலம் மற்றும் பண பலம் மிகுந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் ஆகியோரை வீழ்த்தி அரசியல் களத்தில் தனி முத்திரை படைத்துள்ளார். டாக்டர்.சதிஷ் கிறிஸ்டோபர் இந்தத் தொகுதியில், சபநாயகர் அப்பாவுவை விடவும் 12,303 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இங்கு யாரும் ஜாம்பவான் கிடையாது

இது குறித்து அவர் கூறுகையில், "இந்தத் தேர்தலில் பணநாயகம் வீழ்ந்து ஜனநாயகம் வென்றுள்ளது. பணத்தின் மூலம் வெற்றியை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் கணக்கு பொய்த்துள்ளது. இராதாபுரம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குவாரிப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். சபாநாயகரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தில் அனைவரும் சமம். இங்கு யாரும் ஜாம்பவான் கிடையாது" என்றார்.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க