கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண...
சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் திருக்கோயில்: பெண்களுக்கு செல்வவளமும் நலமும் அருளும் அம்பாள் சந்நிதி!
மயிலாப்பூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். பலரும் அறியாதது கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சிவத்தலங்கள் குறித்து.
மயிலையில் அமைந்திருக்கும் 7 சிவத்தலங்களையும் 'சப்த சங்கரஸ்தலம்’ என்று போற்றவார்கள். அவற்றில் ஒன்று மயிலை காரணீஸ்வரர் திருக்கோயில். மயிலாப்பூர் கச்சேரி சாலையின் கிளைச் சாலையாகப் பிரியும் கடைவீதியில் கச்சேரி சாலையில் இருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது காரணீஸ்வரர் கோயில்.
காரணிச் சித்தர் என்ற சித்தர் வழிபட்டதால் ஈசன், 'காரணீஸ்வரர்' என்று திருப்பெயர் கொண்டாராம். அம்பிகை, 'ஸ்வர்ணலதாம்பிகை' என்றும், 'பொற்கொடி அம்பிகை' என்றும் திருப்பெயர் கொண்டாளாம். தன்னை வந்து வழிபடுவோருக்கெல்லாம் பொன்னும் பொருளும் வழங்கி அருள்புரிவதால், அவளுக்கு இந்தத் திருப்பெயர் என்கிறார்கள்.
இத்தலத்தின் தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமானது.

அந்த நகரில் வேதம் முற்றுணர்ந்த அந்தணச் செம்மலாய் வாழ்ந்து வந்தார் பசுபதி எனும் வேதியர். அவர்தம் தவப்பயனாய்த் தோன்றிய மகன் தனஞ்செயன், பெயருக்கு ஏற்ப அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்கினான்.
அவன் வாலிபப் பருவம் எய்தியதும், அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய காந்திசுந்தரம் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் பசுபதி.
தம்பதியர் கருத்தொருமித்த மனத்தினராய், சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். இருப்பதைக் கொண்டு சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய மனைவியிடம் தனஞ்செயன் மிகுந்த அன்பு செலுத்தினான். வாழ்க்கையும் இனிதாய்த் தொடர்ந்தது.
ஒருநாள், காந்திசுந்தரம் கணிகை ஒருத்தியின் பார்வையில் பட்டுவிட்டாள்.
காந்திசுந்தரத்திடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அக் கணிகை, முதலில் அவளுடைய அழகைப் புகழ்ந்து பேசினாள். புகழ்ச்சிக்கு யார்தான் மயங்கமாட்டார்கள்? காந்திசுந்தரமும் மயங்கினாள். அடுத்த கட்டமாக, அவளின் கணவன் தனஞ்செயன் கணிகை ஒருத்தியிடம் காமுற்றுக் கிடப்பதாகக் கதை விரித்தாள்.
கணவனின் பேரில் அவளுக்கு வெறுப்பும் துவேஷமும் முளைவிட விதை விதைத்தாள். பின்பு, அவள் அழகுக்கும் வனப்புக்கும் 'ம்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், பொன்னும் மணியும் காலடியில் குவியும் என்பதாக ஆசை உரம் போட்டாள்.
தன் கரம் பற்றி வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தவள், இடையிலேயே தடம் மாறி களங்கப்பட்டது தனஞ்செயனுக்குத் தெரிய வந்தது. அழகு மட்டுமின்றி, உயர் பண்புகளும் கொண்டிருந்த தன் மனைவியா இப்படி என்று வருந்தினார்.

தடம் மாறிப்போன மனைவியைத் தண்டிக்க நினைக்கவில்லை அவன். காரணம், அவள்தான் விதிவசத்தால் தப்பு செய்துவிட்டாள் என்றால், சாஸ்திரம் தெரிந்த தானும் அப்படித் தப்பு செய்யலாமா என்று எண்ணினான்.
தனது தலைவிதியை எண்ணி வருந்தியவனாக, மனம் பேதலித்த நிலையில் காடுகளில் சுற்றித் திரிந்துகொண்டே, தென்திசை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
திருமயிலை திருத்தலத்தை அடைந்த நேரத்தில், அவன் மனம் தெளிவு பெற்றது. கடலோரத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கோபுர தரிசனம் கண்ட அவன், ஆலயத்துள் சென்று ஐயனை நெக்குருகி வழிபட்டான்.
சாஸ்திர நெறி தவறாமல் வாழும் அவனுக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அசரீரியாக ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடக் கூறினார்.
தனஞ்செயனும், சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பக்தியுடன் பூஜித்து வரலானான். பக்திக்குப் பலன் கிடைப்பதற்கான காலமும் கனிந்தது.
தனஞ்செயன் பூஜித்த லிங்கத்தில் இருந்து அம்பிகையுடன் வெளிப்பட்ட சிவபெருமான், அவன் வேண்டும் வரம் யாதெனக் கேட்டார்.
''ஐயனே! நின் அருளால் நான் இனிப் பிறவாமை வேண்டும். மேலும், என் மனைவி, பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற வேண்டும் என்ற மதி மயக்கத்தினாலேயே தடம் மாறிச் சென்றாள்.
எனவே, எந்த ஒரு பெண்ணும் இங்கு வந்து வழிபட்டால், தங்கள் அருளாலும், தேவியின் கருணையினாலும் பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று, அவர்களின் மனம் நிறைவு பெற வேண்டும்'' என்று பிரார்த்தித்தான்.

அப்படியே அருள்புரிந்த ஈசன், அங்கேயே பொற்கொடி சமேதராக காரணீஸ்வரராக கோயில் கொண்டு அருளினார். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கும். உள்ளே கொடிமரமும், அடுத்து நந்தி மண்டபமும் அமைந்துள்ளது.
நந்திதேவரை வழிபட்ட பின்னர் கருவறைக்குள் செல்வோம். மகா மண்டபத்தில் நின்றபடி சர்வமங்கள விநாயகர், காரணீஸ்வரர், பொற்கொடி அம்பிகை, நடராஜர், உற்சவ மூர்த்தங்கள், சூரியன், பைரவர், சமயக் குரவர்கள், சந்தான பழனி ஆண்டவர் சந்நிதிகளை வணங்கி, பிராகாரம் வலம் வரலாம்.
பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களாக நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு (மிகப் பழைமையான சிவாலயங்களில்தான் ஈசனின் கருவறைப் பின்புற கோஷ்ட மூர்த்தமாக ஸ்ரீமகா விஷ்ணுவைத் தரிசிக்க முடியும்), பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
பிராகாரத்தின் மேற்குப் பக்கத்தில் உண்ணாமுலை அம்பிகை சமேத அண்ணாமலையார், வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர் சந்நிதிகளும், நாக பிரதிஷ்டையுடன் அரச மரம், ஆஞ்சநேயர், நவகிரகம், சனி பகவான் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
சிவபெருமான் சந்நிதிக்கு நேராக வெளியில் நந்தி மண்டபமும், கொடி மரமும் உள்ளன. நந்தி பகவானுக்கு வலப்புறம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மயிலை காரணீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அன்னையின் அருளால் செல்வமும் அய்யனின் அருளால் நிம்மதியான வாழ்வும் நிச்சயம் ஸித்திக்கும். பிரிந்திருக்கும் தம்பதியினரும் ஒன்று சேர்வார்கள்.




















