செய்திகள் :

இந்தியாவின் அனல் மின் நிலையத் தலைநகரம் ஆகிறதா தூத்துக்குடி? - எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

post image

தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கும் அனல்மின் நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "தூத்துக்குடியில் ஏற்கனவே Moxie, NTPL, SEPC, TNPGCL, DCW ஆகிய நிறுவனங்களின் 4,793.27 மெகாவாட் திறன் கொண்ட 14 அனல் மின் நிலைய அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசும் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் புதிதாக 9,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை தூத்துக்குடியில் அமைக்கவுள்ளன.

இவையனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தூத்துக்குடியில் மட்டும் 13,063.27 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்படும். இதன் மூலம் இந்தியாவில் அனல் மின் நிலையத் தலைநகரமாக தூத்துக்குடி மாறும் அபாயம் உள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 31 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் எரிசக்தித் துறை சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பழைய 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அனல் மின் நிலைய அலகுகளைப் படிப்படியாக மாற்றிவிட்டு பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், 1600 (2*800) மெகாவாட் திறன் கொண்ட புதிய மிக உய்ய அனல் மின் நிலையம் (New Supercritical Thermal Power Station) 20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

அதே போல் 12.10.2026 அன்று நடந்த மின்வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உடன்குடியில் stage 2 மற்றும் 3ல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த 2*660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அலகுகளுக்குப் பதிலாக இரண்டு கட்டத்திலும் 2*800 மெகாவாட் அலகுகள் நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3200MW தூத்துக்குடி உடன்குடியில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான Moxie Power Generation Limited நிறுவனம் ஏற்கெனவே 1200 (2*600) மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலைய அலகுகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக 3200 மெகாவாட் (4*800) உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட மேல்மருதூர், தருவைகுளம், துரைசாமிபுரம், பட்டினமருதூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இடங்களில் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 36,000 கோடியாகும்.

இவற்றின் அடிப்படையில் பார்த்தால் தூத்துக்குடியில் புதிதாக 9320 MW அளவிற்கான 12 அனல் மின் நிலைய அலகுகள் அமைக்கப்படவுள்ளன. தூத்துக்குடியில் மட்டும் ஏற்கனவே 4793.27 MW அளவிற்கான அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் சூழலில்தான் புதிதாக 9320 MW அளவிற்கான புதிய அனல் மின் நிலைய அலகுகளை அமைக்க தமிழ் நாடு அரசும், தனியார் நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருகின்றன.

முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேலாகும். அவை அனைத்தும் திட்டமிட்டபடி செயல்பாட்டுக்கு வந்தால் தூத்துக்குடியில் 13,063.27 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் ஒரே நேரத்தில் செயல்பாட்டில் இருக்கும்.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் தூத்துக்குடியை இந்த அனல் மின் நிலையங்கள் வாழத்தகுதியற்ற இடமாகவே மாற்றிவிடும். இந்தியாவிலேயே மத்திய பிரதேசத்தின் சிங்ரெளலி மாவட்டம் மற்றும் உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் மட்டும்தான் இந்த அளவுக்கான அனல் மின் நிலையங்கள் நிறுவ மற்றும் திட்டமிடப்பட்டுள்ளன.

தேசிய தூய காற்று திட்டத்தின் (NCAP) கீழாக தமிழ்நாட்டில் 4 நகரங்களுக்கு (சென்னை, மதுரை, திருச்சி , தூத்துக்குடி) நிதி ஒதுக்கப்பட்டு காற்றின் தரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இதில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் 10 லட்சம் மேல் வசிக்கும் நகரங்கள் என்ற காரணத்திற்காக தேசிய தூய காற்று திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தூத்துக்குடி மட்டும்தான் அதன் காற்றின் தரம் மோசமாக உள்ளது என்ற காரணத்திற்காகவே இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் ஒரு சில நகரங்களில் தூத்துக்குடி முதன்மையாக இருக்கிறது. தூத்துகுடியின் காற்று மாசிற்கு முக்கியக் காரணம் அங்கு நாள் ஒன்றிற்கு பல்லாயிரம் கணக்கான டன் நிலக்கரியை எரிக்கும் அனல் மின் நிலையங்கள்தான்.

சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 105 டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது. ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து இவ்வளவு நச்சுப் புகை வெளியேறுகிறது என்றால் தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து இதை விட 10 மடங்கு நச்சு வெளியேறுகிறது என அர்த்தம்.

முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் தற்போது தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகளை விட 2-3 மடங்கு அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். காற்று மாசு மட்டுமல்லாமல், நில மாசுபாடு, நீர் நிலை மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு எனப் பல்வேறு சரிசெய்ய முடியாத பிரச்னைகள் உருவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு யூனிட் சூரிய மின்சாரத்தின் உற்பத்தி விலை 85% ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி விலை 55% குறைந்துள்ளது. அதே வேளையில் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செலவு அதிகரித்துகொண்டே போகிறது.

50,000 கோடி செலவு செய்து புதிய அனல் மின் நிலையங்கள் கட்டிய பிறகு அதற்கான தேவை இல்லாமல் போனால் அது அரசிற்கு எவ்வளவு பெரிய இழப்பு? இது அரசிற்கும் கூடுதல் கடன் சுமையைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே 1,80,000 கோடிக்கு மேல் கடனில் இருக்கும் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தூத்துக்குடி மற்றும் உடன்குடி அனல் மின் நிலையத்தினால் அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் 50,000 கோடி கடன் ஏற்படும்.

தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 8 ருபாய் வரை ஆகும். ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சூரிய ஆற்றலில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய்க்குக் குறைவாகத்தான் செலவாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விலை மேலும் குறையும் வாய்ப்பிருப்பதாக கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

நெய்வேலி அனல் மின் நிலையம்
நெய்வேலி அனல் மின் நிலையம்

காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் மனிதச் செயல்பாடுகளில் முதன்மைக் காரணியாக இருப்பது புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனடிப்படையில்தான் பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு நிலக்கரி பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

த.வெ.க. அரசின் புதிய அறிவிப்புகளும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களும் தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் முரணாக அமைந்துள்ளது

அரசின் பொருளாதாரத்திற்கும் நன்மை தரக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்காமல், மீண்டும் நிலக்கரி அனல் மின் நிலையங்களை நிறுவுவது மக்களின் ஆரோக்கியத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் செயலாகும். வளர்ச்சியின் பெயரால் ஒரு மாபெரும் சமூக அநீதியின் கோர முகமாக தூத்துக்குடி மாறி வருகிறது.

இந்த அவலத்தைப் போக்க வேண்டிய கட்டாயம் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இருப்பதால் புதிய அனல் மின் நிலையத் திட்டங்களை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இத்திட்டங்களை அரசு கைவிட வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்" என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த 'லாபி' - பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.கடந்த ஐந்து நாள்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா ஒரு பக்கெட் நீரைக்கூட நிறுத்த முடியாது"- துரைமுருகன் உறுதி

``மேகதாது அணையைக் கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை’’ என்று சமீபத்தில் பேசியிருந்தார் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: ``அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" - நாராயணன் திருப்பதி

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இன்றுடன் 186 நாள்கள் ஆகிறது. புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், ஆட்சிக் களத்தைக் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே சில காலம் ஆகும்... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: "போலி நூல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் அனுமதி வழங்கியவர்க... மேலும் பார்க்க

'மதுரைக்குள் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது' - போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி

மதுரை பலவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும் மதுரையில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள், பிறந்தநாள் போஸ்டர்கள், ரசிகர்களின் சுவரொட்டிகள், விழாக் காலங்களில் வைக்கப்படும் பேனர்கள் போன்றவற்றுக்குத் தனி கவனம் க... மேலும் பார்க்க

வாணியம்பாடி: திருமணத்துக்கு மறுத்த 17 வயது மாணவி கடத்தல்; தாய்மாமன் குடும்பத்தினர் 15 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியை அவரது தாய்மாமன் மகன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவி... மேலும் பார்க்க