"என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்"- கடிதம் எழுதிவிட்டு தற்கொல...
"என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்"- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!
கன்னியாகுமரி அருகே வட்டக்கோட்டை - பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர். லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சுதாகரை தினமும் தேடிச் சென்று மீண்டும் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் அதற்கு காவல் நிலையம் வருமாறும் அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ய தேடி வருவதால் தனது எதிர்காலம் பாழாகிவிடும், எனக் கருதி கடந்த ஒரு மாதமாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். போலீசார் சுதாகரை தேடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், சுதாகர் அங்கு இல்லை எனவும் கூறப்படுகிறது.

அவ்வப்போது வீட்டுக்குச் சென்று வரும் சுதாகர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டுக்கு செல்லவே இல்லையாம். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சுதாகரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு சுதாகர் எழுதி வைத்ததாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், சந்தோசமாக வாழ முடியவில்லை எனவும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தான் காரணம் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



















