`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன ந...
`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!
ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம்.
பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த வாரம், 'HR88B8888' என்ற பதிவு எண் ஏலத்துக்கு வந்தது.
இந்த எண்ணுக்கான அடிப்படை ஏல விலையாக ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த எண்ணுக்கு அதிகபட்சமாக 45 விண்ணப்பங்கள் வந்தன.
ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணுக்கான விலை அதிகரித்துக்கொண்டே சென்றது. இறுதி விலையாக புதன்கிழமை மாலை 5 மணிக்கு ரூ.1.17 கோடி என ஏலம் முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம், 'HR22W222' என்ற பதிவு எண் ரூ.37.91 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
HR88B8888 என்றால் என்ன?
HR88B8888 என்பது ஏலத்தின் மூலம் பிரீமியத்தில் வாங்கப்பட்ட ஒரு தனித்துவமான VIP எண் எனக் கருதப்படுகிறது. HR என்பது வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் மாநிலக் குறியீடு.
88 என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள ஹரியானாவின் குறிப்பிட்ட போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.
குறிப்பிட்ட RTO-வில் உள்ள வாகனத் தொடர் குறியீட்டைக் குறிக்க B பயன்படுத்தப்படுகிறது. 8888 என்பது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான, நான்கு இலக்க பதிவு எண்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான வேணு கோபாலகிருஷ்ணன், தனது லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே காருக்கான பதிவு எண்ணாக "KL 07 DG 0007" எண்ணை ரூ.45.99 லட்சத்திற்கு வாங்கினார்.
இந்த எண்ணுக்கான ஏலம் ரூ.25,000-ல் தொடங்கியது. '0007' எண் ஜேம்ஸ் பாண்ட் குறியீட்டை அடையாளப்படுத்துகிறது எனப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.















