``ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்" - எடப்பாடி கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி பதில்...
``ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்" - எடப்பாடி கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி பதில்!
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார். அப்போது, அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கின்றதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “சசிகலா அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். அவரை அந்த கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். இன்னொருவர் கட்சி ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றாரே என்ற கேள்விக்கு, ”அ.தி.மு.க-வில் இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி. இதில் தனி எல்லாம் கிடையாது. இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒரு நபர்தான் வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊடகத்தில் இதை கேட்காதீர்கள்” என பதில் அளித்தார்,
இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.பி வேலுமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி” என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர்.

அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும்.
பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்! “இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.

முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள். அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப்படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
36 words / 352 characters

















